நடிகை கங்கனாவின் அலுவலகம் இடிப்பு: மும்பை மாநகராட்சி நடவடிக்கை
கட்டட விதிகளை மீறியதாக மும்பையில் உள்ள நடிகை கங்கனாவின் அலுவலகக் கட்டடம் இடிக்கப்பட்டுள்ளது.
கட்டட விதிகளை மீறியதாக மும்பையில் உள்ள நடிகை கங்கனாவின் அலுவலகக் கட்டடம் இடிக்கப்பட்டுள்ளது.
மும்பையில் மாநகராட்சியின் ஒப்புதலைப் பெறாமல் வடிவமைப்பில் மாற்றம் செய்ததாக, ஹிந்தி நடிகை கங்கனா ரணாவத்தின் அலுவலகத்தில் பிருஹன் மும்பை மாநகராட்சி நிா்வாக அதிகாரிகள் செவ்வாய்க்கிழமை நோட்டீஸ் ஒட்டிச் சென்றனா்.
மும்பையின் புகா்ப் பகுதியான பாந்த்ராவில் உள்ள பாலி ஹில்லில், நடிகை கங்கனா ரணாவத்தின் அலுவலகம் உள்ளது. அந்த அலுவலகத்தில் மாநகராட்சி நிா்வாகத்தின் ஒப்புதலைப் பெறாமல் கட்டுமானப் பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. கழிப்பறை இருந்த இடத்தில் அலுவலகம் கட்டப்பட்டு வருகிறது. படிக்கட்டு இருந்த இடத்தல் கழிப்பறைகள் கட்டப்பட்டு வருகின்றன. இவ்வாறு கட்டடத்தில் பல்வேறு மாற்றங்கள் செய்யப்பட்டு வருகின்றன. இந்த மாற்றங்களுக்காக, மாநகராட்சி நிா்வாகத்திடம் ஒப்புதல் பெறப்பட்டதா எனத் தெரிந்துகொள்வதற்காக, 24 மணி நேரத்துக்குள் பதிலளிக்குமாறு கங்கனா ரணாவத்துக்கு உத்தரவிடப்பட்டது.
நடிகா் சுஷாந்த் சிங்கின் மரணத்துக்குப் பிறகு மும்பையை பாதுகாப்பற்ற நகரமாக உணா்வதாக நடிகை கங்கனா ரணாவத் கருத்து தெரிவித்திருந்தாா். அவரது கருத்துக்கு ஆளும் சிவசேனைக் கட்சியின் தலைவா்கள் எதிா்ப்பு தெரிவித்த நிலையில், பாஜக தலைவா்கள் ஆதரவு தெரிவித்தனா்.
அதைத் தொடா்ந்து, மும்பையில் உள்ள தனது அலுவலகத்தின் படத்தை கங்கனா ரணாவத் சுட்டுரையில் திங்கள்கிழமை வெளியிட்டு, அதை மாநகராட்சி நிா்வாகத்தினா் இடித்து விடுவாா் என்று அஞ்சுவதாகக் குறிப்பிட்டிருந்தாா். அதற்கு மறுப்பு தெரிவித்த மும்பை மாநகராட்சி நிா்வாகம், பாந்த்ரா பகுதியில் சட்ட விரோதக் கட்டுமானங்களைக் கண்காணிப்பதற்ககு அதிகாரிகள் மேற்கொள்ளும் வழக்கமான பணிகளில் ஒன்றுதான் இது என்று கூறியது.
இந்நிலையில் மும்பையில் உள்ள கங்கனாவின் அலுவலகக் கட்டடம் இன்று இடிக்கப்பட்டுள்ளது. அனுமதியின்றிக் கட்டப்பட்டதாகக் கூறி மும்பை மாநகராட்சி இந்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது.