போலிக் கணக்கை யாரும் பின்தொடர வேண்டாம்: இயக்குநர் சுதா கொங்கரா
ஏராளமான போலிக் கணக்குகள் உள்ளன. அவற்றை நிராகரியுங்கள். பின்தொடர்வதை நிறுத்துங்கள்.
தன் பெயரில் உள்ள போலி ட்விட்டர் கணக்கை யாரும் பின்தொடரவேண்டாம் என சூரரைப் போற்று பட இயக்குநர் சுதா கொங்கரா தெரிவித்துள்ளார்.
விஜய்யின் பிறந்த நாளான ஜூன் 22 அன்று, தனது அடுத்தப் பட அறிவிப்பை இயக்குநர் சுதா கொங்கரா அறிவிக்கவுள்ளார் என்று செய்திகள் வெளியாகின. சுதா கொங்கரா பெயரில் உள்ள ட்விட்டர் கணக்கும் இத்தகவலை அறிவித்தது. இந்நிலையில் சுதா கொங்கரா ஓர் அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியதாவது:
ட்விட்டரிலோ எந்தவொரு சமூகவலைத்தளங்களிலோ எனக்குக் கணக்கு கிடையாது. ஏராளமான போலிக் கணக்குகள் உள்ளன. அவற்றை நிராகரியுங்கள். பின்தொடர்வதை நிறுத்துங்கள். போலிக் கணக்கிலிருந்து வெளிவரும் தகவல்கள் தவறாக உள்ளன என்று கூறியுள்ளார்.
Advertisement
‘இறுதிச்சுற்று’ சுதா கொங்கராவின் அடுத்தப் படமான சூரரைப் போற்று படத்தில் கதாநாயகனாக நடித்துள்ளார் சூர்யா. இது அவருடைய 38-வது படம். கதாநாயகியாக மலையாள நடிகை அபர்ணா முரளி நடித்துள்ளார். எட்டு தோட்டாக்கள், சர்வம் தாளமயம் ஆகிய தமிழ்ப்படங்களில் இவர் நடித்துள்ளார். இப்படத்துக்கு இசை - ஜி.வி. பிரகாஷ். ஒளிப்பதிவு - நிகேத் பொம்மிரெட்டி. சூர்யாவின் 2டி நிறுவனமும் குனீத் மோங்காவின் சிக்யா நிறுவனமும் இணைந்து இப்படத்தைத் தயாரித்துள்ளன. குனீத் மோங்கா இப்படத்தின் மூலம் தயாரிப்பாளராகத் தமிழில் அறிமுகமாகிறார். ஹிந்தியில் லஞ்ச்பாக்ஸ், மாசான் போன்ற படங்களைத் தயாரித்துள்ளார்.