முகப்பு
செய்திகள்

ஷங்கருக்கு எதிரான லைகாவின் மனு: இந்தியன் 2 படம் பற்றி கிடைத்த புதிய தகவல்கள்!

ஷங்கரின் சம்பளம் - ரூ. 40 கோடி.   ரூ. 14 கோடி கொடுத்துள்ளோம்.  எஞ்சிய ரூ. 26 கோடியை...

Updated On : 1 ஏப்ரல், 2021 at 12:57 PM
படம் - twitter.com/MsKajalAggarwal
பகிர்:
Updated On : 28 ஜனவரி, 2024 at 1:24 AM

இயக்குநர் ஷங்கருக்கு எதிராக லைகா நிறுவனம் உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனு மூலமாக இந்தியன் 2 படம் பற்றிய சில தகவல்கள் கிடைத்துள்ளன.

லைகா நிறுவனத்தின் தயாரிப்பில், இயக்குநா் ஷங்கா் இயக்கத்தில், நடிகா் கமல்ஹாசன், நடிகை காஜல் அகா்வால் நடிப்பில் ‘இந்தியன் 2’ திரைப்படம் உருவாகி வருகிறது. 2019 ஜனவரி 18 அன்று படப்பிடிப்பு தொடங்கியது. இந்தத் திரைப்படத்தின் படப்பிடிப்பு நசரத்பேட்டையில் உள்ள ஒரு தனியாா் திரைப்பட நகரத்தில் நடைபெற்று வந்தது. கடந்த வருடம் பிப்ரவரி 19-ஆம் தேதி இப்படப்பிடிப்பில் கிரேன் விழுந்து உதவி இயக்குநா் சென்னை அபிராமபுரத்தைச் சோ்ந்த சி.ஸ்ரீகிருஷ்ணா, திரைப்பட தொழில்நுட்ப பணியாளா்கள் சொ.சந்திரன், சி.மது ஆகியோா் உயிரிழந்தனா். மேலும் 13 போ் காயமடைந்தனா். இச்சம்பவம் தொடா்பாக நசரத்பேட்டை போலீஸாா், லைகா நிறுவனம், தயாரிப்பு மேலாளா், கிரேன் உரிமையாளா் கிரேன் ஆபரேட்டா் ராஜன் ஆகியோா் மீது 4 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்தனா். தலைமறைவாக இருந்த கிரேன் ஆபரேட்டா் ராஜனை போலீஸாா் உடனடியாக கைது செய்தனா். கமல், ஷங்கரிடம் விசாரணை நடைபெற்றது. இந்தியன் 2 படப்பிடிப்புத் தளத்தில் ஏற்பட்ட விபத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிதியுதவியாக ரூ. 1 கோடி அளிப்பதாக கமல் ஹாசன் அறிவித்தார். ஷங்கர் ரூ. 1 கோடி மற்றும் லைகா நிறுவனம் ரூ. 2 கோடி வழங்குவதாக அறிவித்தார்கள். 

இந்நிலையில் சென்னை உயர் நீதிமன்றத்தில் லைகா நிறுவனம் மனு  தாக்கல் செய்துள்ளது. இந்தியன் 2 படத்தின் எஞ்சியுள்ள பகுதிகளை முடித்து தர வேண்டும் என இயக்குநர் ஷங்கருக்கு உத்தரவிட வேண்டும் என்று மனுவில் கோரியுள்ளது. இந்த வழக்கு நீதிபதி பி.டி. ஆஷா முன் விசாரணைக்கு வந்தது. இயக்குனர் ஷங்கரின் விளக்கத்தைக் கேட்காமல் எந்த இடைக்கால உத்தரவும் பிறப்பிக்க முடியாது எனக் கூறி, அவர் பிற படங்களை இயக்கக் கூடாது என  இடைக்காலத் தடை விதிக்க மறுத்துவிட்டார். மேலும் மனு குறித்து இயக்குனர் ஷங்கர் பதிலளிக்க உத்தரவிட்டு விசாரணையை  வரும் ஏப்ரல் 15-ஆம் தேதிக்கு  ஒத்திவைத்தார்.

Advertisement

உயர் நீதிமன்றத்தில் லைகா தாக்கல் செய்த மனுவின் மூலமாக இந்தியன் 2 படம் பற்றிய சில தகவல்கள் கிடைத்துள்ளன.

* இந்தியன் 2 படப்பிடிப்பில் ஏற்பட்ட விபத்துக்குப் பிறகு படப்பிடிப்பை மீண்டும் தொடங்குவதில் ஷங்கர் - லைகா இடையே கருத்துமோதல் ஏற்பட்டுள்ளது. அதனால் இந்த விவகாரம் தற்போது நீதிமன்றம் வரை வந்துள்ளது. 

* தெலுங்கு நடிகர் ராம் சரண் கதாநாயகனாக நடிக்கும் படத்தை அடுத்ததாக இயக்க ஷங்கர் முடிவெடுத்துள்ளார். ஷங்கரின் புதிய படம் குறித்த அறிவிப்பு கடந்த பிப்ரவரி மாதம் வெளியானது. ஷங்கர் - ராம் சரண் படம் தமிழ், தெலுங்கு, ஹிந்தி ஆகிய மொழிகளில் உருவாகும் எனத் தெரிகிறது. 

* இதையடுத்து சென்னை உயர் நீதிமன்றத்தில் லைகா நிறுவனம் மனு  தாக்கல் செய்துள்ளது.  இந்தியன் 2 படத்தின் எஞ்சியுள்ள பகுதிகளை முடித்துத் தர வேண்டும் என இயக்குநர் ஷங்கருக்கு உத்தரவிட வேண்டும் என்று மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

* இந்தியன் 2 படத்தின் படப்பிடிப்பு 80% முடிவடைந்துள்ளது. கடந்த பிப்ரவரியில் விபத்து நடைபெறாமல் இருந்திருந்தால் இந்நேரம் முழுப் படப்பிடிப்பும் முடிவடைந்திருக்கலாம். தேர்தலுக்கு முன்பே படமும் வெளிவந்திருக்கலாம். 

* படத்துக்கான செலவாக ரூ. 150 கோடி முதலில் திட்டமிடப்பட்டுள்ளது. ஆனால் இதுவரை ரூ. 236 கோடி  வரை செலவு செய்யப்பட்டுள்ளது என மனுவில் லைகா தெரிவித்துள்ளது. 

*இந்தியன் 2 படத்துக்கான ஷங்கரின் சம்பளம் - ரூ. 40 கோடி.   ரூ. 14 கோடி கொடுத்துள்ளோம்.  எஞ்சிய ரூ. 26 கோடியை நீதிமன்றத்தில் வைப்புத் தொகையாகச் செலுத்தத் தயாராக இருக்கிறோம் என மனுவில் லைகா நிறுவனம் உத்தரவாதம் அளித்துள்ளது.

* பிற படங்களை ஷங்கர் இயக்கக் கூடாது என  இடைக்காலத் தடை விதிக்க உயர் நீதிமன்றம் மறுத்துள்ளது. இதனால் ராம் சரண் படம் முடிவடைந்த பிறகே இந்தியன் 2 படப்பிடிப்பை ஷங்கர் மீண்டும் தொடங்குவார் என எதிர்பார்க்கலாம். கமல் ஹாசனின் அரசியல் நடவடிக்கைகளைப் பொறுத்தும் இது முடிவாகலாம்.

* 80% படப்பிடிப்பு முடிவடைந்து விட்டதால் இந்தியன் 2 படப்பிடிப்பை விரைவில் முடித்து படத்தை வெளியிட வேண்டும்  என்பதே ரசிகர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது. ஷங்கர் - லைகா - கமல் ஹாசன் ஆகிய மூவரும் இந்தச் சிக்கலுக்கு விரைவில் ஒரு முடிவு காண்பார்கள் என நம்புவோம்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.