செய்திகள்

கரோனா பாதிப்பு: மின்மயானத்துக்கு நேரடியாக எடுத்துச் செல்லப்படும் கே.வி. ஆனந்த் உடல்

DIN

இன்று காலை மறைந்த கே.வி. ஆனந்த், கரோனாவால் பாதிக்கப்பட்டிருந்ததால் அவருடைய உடல் மருத்துவமனையிலிருந்து பெசன்ட் நகர் மின்மயானத்துக்கு நேரடியாக எடுத்துச் செல்லப்பட்டுள்ளது.

தமிழ்த் திரையுலகின் பிரபல ஒளிப்பதிவாளரான கே.வி. ஆனந்த், கனா கண்டேன் படத்தின் மூலமாக இயக்குநராக அறிமுகமானார். கோ, அயன், மாற்றான், அனேகன், கவண், காப்பான் எனப் பல படங்களை இயக்கியுள்ளார். தமிழ்ப் பத்திரிகைகளில் புகைப்படக் கலைஞராக ஆரம்பத்தில் பணியாற்றிய கே.வி. ஆனந்த், பிரபல ஒளிப்பதிவாளர் பி.சி. ஸ்ரீராமிடம் உதவியாளராகப் பணியாற்றியுள்ளார். மோகன்லால் நடித்த தேன்மாவின் கொம்பத்து மலையாளப் படம் மூலமாக ஒளிப்பதிவாளராக அறிமுகமானார். அந்தப் படத்திலேயே சிறந்த ஒளிப்பதிவாளருக்கான தேசிய விருதைப் பெற்றார். காதல் தேசம் படம் மூலமாகத் தமிழில் ஒளிப்பதிவாளராக அறிமுகமானார். நேருக்கு நேர், முதல்வன், செல்லமே, சிவாஜி போன்ற படங்களுக்கு ஒளிப்பதிவு செய்துள்ளார். கடைசியாக சூர்யா நடித்த காப்பான் படத்தை இயக்கினார்.

இந்நிலையில் கே.வி. ஆனந்த் மாரடைப்பால் இன்று காலமானார். சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அதிகாலை 3 மணிக்கு அவருடைய உயிர் பிரிந்தது. அவருக்கு வயது 54.

கே.வி. ஆனந்தின் மறைவு திரையுலகினரை அதிர்ச்சியடைய வைத்துள்ளது. ரஜினி, கமல் உள்ளிட்ட பிரபலங்கள் பலரும் இரங்கல் தெரிவித்துள்ளார்கள்.

கடந்த 24-ம் தேதி தொண்டை வலியும் உடல்சோர்வும் கே.வி. ஆனந்துக்கு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து பரிசோதனை செய்து பார்த்ததில் கரோனா தொற்று அவருக்கு உறுதியாகியிருந்தது. அதனைத் தொடர்ந்து கரோனாவுக்காக மருத்துவமனையில் அவர் சிகிச்சை எடுத்துக்கொண்டார். இதையடுத்து கே.வி. ஆனந்தின் மனைவி, இரு மகள்களுக்கும் கரோனா தொற்று உறுதியானது. அவர்கள் வீட்டிலேயே தனிமைப்படுத்திக்கொண்டார்கள். பிறகு மூவரும் கரோனா தொற்றிலிருந்து மீண்டார்கள். இந்நிலையில் இன்று காலை மாரடைப்பு ஏற்பட்டு கே.வி. ஆனந்த் மருத்துவமனையில் உயிரிழந்தார். 

கரோனாவால் பாதிக்கப்பட்டு மரணமடைந்துள்ளதால் கே.வி. ஆனந்தின் உடல் அவருடைய வீட்டுக்கு எடுத்து வராமல் நேரடியாக பெசன்ட் நகர் மின்மயானத்துக்கு எடுத்துச் செல்லப்பட்டுள்ளது. அங்கு இறுதிச்சடங்குகள் நடைபெறவுள்ளன.

கே.வி. ஆனந்தின் உடல் குடும்ப உறுப்பினர்கள் அஞ்சலி செலுத்துவதற்காக சென்னை அடையாறில் உள்ள அவருடைய இல்லத்துக்கு ஆம்புலன்ஸ் வாகனத்தில் கொண்டுவரப்பட்டது. 5 நிமிடங்கள் மட்டுமே இல்லத்தின் முன்பு ஆம்புலன்ஸ் வாகனம் நின்றது. ஆம்புலன்ஸின் உள்ளே இருந்த கே.வி. ஆனந்தின் உடலுக்கு அவருடைய குடும்ப உறுப்பினர்கள் கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்தினார்கள். அதன்பிறகு கே.வி. ஆனந்தின் உடல் மின்மயானத்துக்கு எடுத்துச் செல்லப்பட்டது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஏற்காட்டில் பேருந்து விபத்து : 4 பேர் பலி

கண்ணெதிரே 3 ஐசிசி கோப்பைகள்; பாகிஸ்தான் பயிற்சியாளர் கேரி கிறிஸ்டனின் இலக்கு என்ன?

சின்ன சின்ன பார்வை..!

போஜ்புரி போகன்வில்லா..!

லக்னௌ பந்துவீச்சு; அணியில் டி காக் இல்லை!

SCROLL FOR NEXT