செய்திகள்

பாடகர் அறிவைப் புறக்கணிப்பது ஏன்?: இயக்குநர் பா. இரஞ்சித் கேள்வி

DIN

ரோலிங் ஸ்டோன் பத்திரிகையில் பாடகர் அறிவின் படம் இடம்பெறாததற்கு இயக்குநர் பா. இரஞ்சித் கண்டனம் தெரிவித்துள்ளார்.

சந்தோஷ் நாராயணன் இசையமைப்பில் தீ, அறிவு ஆகிய இருவரும் பாடி நடித்த என்ஜாய் எஞ்சாமி என்கிற பாடலின் விடியோ மார்ச் 7 அன்று யூடியூபில் வெளியானது. பாடலை அறிவு எழுதியுள்ளார். சுயாதீனக் கலைஞர்களை ஊக்குவிப்பதற்காக பிரபல இசையமைப்பாளர் ஏ.ஆர். ரஹ்மானின் ஆதரவுடன் ஆரம்பித்துள்ள மாஜா தளம் இப்பாடலைத் தயாரித்துள்ளது. அமித் கிருஷ்ணன் பாடலைப் படமாக்கியுள்ளார்.

யூடியூப் தளங்களில் வழக்கமாக திரைப்படப் பாடல்களுக்குக் கிடைக்கும் அமோக வரவேற்பை சுயாதீனப் பாடலான என்ஜாய் எஞ்சாமி பெற்றுள்ளது. இயற்கை வளத்தையும் கலாசார வேர்களையும் போற்றும் இப்பாடலின் படமாக்கம், ஆங்கிலப் பாடல்களுக்கு இணையாக உள்ளதால் இதற்கு நாளுக்கு நாள் வரவேற்பு அதிகமாகி வருகிறது. தற்போது இப்பாடலுக்கு 31 கோடி பார்வைகள் கிடைத்துள்ளன. ஒரு சுயாதீனப் பாடல், திரைப்பாடலுக்கு இணையாக அல்லது அதைவிடவும் அதிகமான வரவேற்பைப் பெற்றிருப்பது தமிழ்த் திரையிசை வட்டாரத்தில் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது. சுயாதீனப் பாடல்களில் என்ஜாய் எஞ்சாமி ஒரு திருப்புமுனையாக அமைந்துள்ளது.

சமீபத்தில் நீயே ஒளி என்கிற புதிய பாடலை வெளியிட்டது மாஜா. சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ள இப்பாடலை ஷான் வின்சென்ட் டி பால், நாவ்ஸ் - 47, சந்தோஷ் நாராயணன் இணைந்து பாடியுள்ளார்கள். பாடலின் விடியோவை எஸ்.வி.டி.பி மற்றும் கலைச்செல்வன் இயக்கியுள்ளார்கள். இந்தப் பாடல் ஆர்யா நடிப்பில் பா. இரஞ்சித் இயக்கி ஓடிடியில் வெளியான சார்பட்டா பரம்பரை படத்திலும் இடம்பெற்றிருந்தது. 

இந்நிலையில் ரோலிங் ஸ்டோன் என்கிற ஆங்கில இசைப் பத்திரிகையில் தமிழ் சுயாதீனப் பாடல்களுக்குக் கிடைக்கும் வரவேற்பு பற்றி ஒரு கட்டுரை வெளியாகியுள்ளது. இதன் அட்டைப் படத்தில் தீ,  ஷான் வின்சென்ட் டி பால் ஆகியோரின் படங்கள் மட்டும் இடம்பெற்றுள்ளன. கட்டுரையில் அறிவு பற்றிய தகவல்கள் இருந்தாலும் அட்டையிலோ கட்டுரையிலோ அவருடைய படம் இடம்பெறவில்லை. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து பிரபல இயக்குநர் பா. இரஞ்சித், ட்வீட் செய்துள்ளார்.

நீயே ஒளி பாடலாசிரியர், என்ஜாய் எஞ்சாமி பாடலை எழுதிப் பாடிய அறிவு மீண்டும் மறைக்கப்பட்டிருக்கிறார். மக்கள் ஏற்றுக்கொண்ட ஒன்றை இதுபோன்று அழிப்பதை இவ்விரு பாடல்களும் கேள்வி எழுப்புகின்றன. ரோலிங் ஸ்டோன், மாஜா - அப்பாடலின் வரிகளைப் புரிந்துகொள்வது அவ்வளவு கடினமா எனக் கேள்வியெழுப்பியுள்ளார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

யோகம் தரும் நாள்!

வேன்- இருசக்கர வாகனம் மோதல்: இருவா் பலி

ஈரோடு கலை, அறிவியல் கல்லூரிக்கு ‘ஏ’ பிளஸ் அங்கீகாரம்

இன்று நீட் தோ்வு: ஈரோடு மாவட்டத்தில் 4,747 மாணவா்கள் எழுதுகின்றனா்

பழனி கோயிலுக்கு ரூ.36.51 லட்சத்துக்கு கரும்பு சா்க்கரை கொள்முதல்

SCROLL FOR NEXT