செய்திகள்

சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் ஐந்து படங்களில் நடிக்கும் சிவகார்த்திகேயன்?

DIN

சன் பிக்சர்ஸ் நிறுவனத்துடன் இணைந்து ஐந்து படங்களில் பிரபல நடிகர் சிவகார்த்திகேயன் நடிக்கவுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகியுள்ள படம் - டாக்டர். அனிருத் இசையமைத்துள்ள இப்படத்தை சிவகார்த்திகேயன் புரொடக்‌ஷன்ஸும் கேஜேஆர் ஸ்டூடியோஸும் இணைந்து தயாரித்துள்ளன. இப்படத்தின் தொலைக்காட்சி உரிமையை சன் டிவி நிறுவனம் பெற்றுள்ளது. 

சிவகார்த்திகேயன் நடிப்பில் கடைசியாக ஹீரோ படம் வெளியானது. தற்போது - டாக்டர், அயலான் என இரு படங்களில் அவர் நடித்து முடித்துள்ளார். 

இன்று நேற்று நாளை படத்தை இயக்கிய ஆர். ரவிகுமாரின் அடுத்த படம் - அயலான். இதில் கதாநாயகனாக நடித்துள்ளார் சிவகார்த்திகேயன். கதாநாயகி - ரகுல் ப்ரீத் சிங். இசை - ஏ.ஆர். ரஹ்மான், ஒளிப்பதிவு - நிரவ் ஷா. டிசம்பரில் அயலான் படம் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதற்கு அடுத்ததாக சிவகார்த்திகேயன் புரொடக்‌ஷன்ஸ் மற்றும் லைகா நிறுவனம் இணைந்து தயாரிக்கும் டான் என்கிற படத்தில் சிவகார்த்திகேயன் நடிக்கிறார். அறிமுக இயக்குநர் சிபி சிக்ரவர்த்தி இயக்குகிறார். இசை - அனிருத். பிரியங்கா மோகன், கதாநாயகியாக ஒப்பந்தமாகியுள்ளார். டாக்டர் படத்திலும் சிவகார்த்திகேயனுடன் இணைந்து இவர் நடித்துள்ளார். எஸ்.ஜே. சூர்யா, சமுத்திரக்கனி, சூரி, ஷிவாங்கி, முனிஷ்காந்த் போன்றோரும் டான் படத்தில் நடிக்கவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.  

டாக்டர் படம் மார்ச் 26 அன்று திரையரங்குகளில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டது. பிறகு தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் காரணமாக டாக்டர் பட வெளியீடு ஒத்திவைக்கப்பட்டது. பிறகு ஊரடங்கு காரணமாக டாக்டர் படம் ஹாட்ஸ்டாரில் வெளியாகவுள்ளதாகத் தகவல்கள் வெளியாகின. ஆனால் அப்படத்தின் தொலைக்காட்சி உரிமை சன் டிவி வசம் இருந்ததால் சிக்கல் ஏற்பட்டது. ஓடிடி உரிமையுடன் தொலைக்காட்சி உரிமையையும் ஹாட்ஸ்டார் நிறுவனம் கேட்டதால் இதுகுறித்த ஒப்பந்தம் நிகழ்வதில் சிக்கல் ஏற்பட்டதாகத் தகவல்கள் வெளியாகின.

சமீபகாலமாக பட வெளியீட்டில் பல்வேறு சிக்கல்களைச் சந்தித்து வருகிறார் சிவகார்த்திகேயன். இதனால் திட்டமிட்டபடி அவரால் படங்களைச் சரியான நேரத்தில் வெளியிட முடியாமல் போகிறது. 

2019-ல் மிஸ்டர் லோக்கல், நம்ம வீட்டுப் பிள்ளை, ஹீரோ என சிவகார்த்திகேயன் கதாநாயகனாக நடித்த மூன்று படங்கள் வெளிவந்தன. ஆனால் கடந்த வருடம் அவருடைய ஒரு படமும் வெளிவரவில்லை. கரோனா முதல் அலைக்குப் பிறகு சில மாத காலம் புதிய தமிழ்ப் படங்கள் திரையரங்குகளில் வெளியாகின. அப்போதும் சிவகார்த்திகேயனின் எந்தவொரு படமும் வெளிவரவில்லை. டாக்டர், அயலான் படங்கள் எப்போதும் வெளிவரும் என்பது தற்போதைய சூழலில் இன்னும் முடிவாகவில்லை.

இதனால் தன்னுடைய படங்கள் வெளியீட்டில் சிக்கலைச் சந்திக்கக் கூடாது என எண்ணி சில முடிவுகள் எடுத்துள்ளார் சிவகார்த்திகேயன். டாக்டர், அயலான் படங்களுக்கு அடுத்ததாக சிவகார்த்திகேயன் நடிக்கும் டான் படத்தை சிவகார்த்திகேயன் புரொடக்‌ஷன்ஸ் மற்றும் லைகா நிறுவனமும் இணைந்து தயாரிக்கின்றன. இதனால் இந்தப் படத்தின் வெளியீட்டில் சிக்கல் வர வாய்ப்பில்லை.

அடுத்ததாக, சன் பிக்சர்ஸுடன் இணைந்து ஐந்து படங்களில் சிவகார்த்திகேயன் நடிக்கவுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. அடுத்த இரு ஆண்டுகளில் சன் பிக்சர்ஸுக்காக ஐந்து படங்களில் நடிக்கவுள்ள சிவகார்த்திகேயனுக்கு மொத்தமாக ரூ. 75 கோடி சம்பளம் பேசப்பட்டுள்ளதாகவும் தெரிகிறது. இதனால் கடன் சூழலில் இருந்து வெளியே வரவும், சிவகார்த்திகேயன் புரொடக்‌ஷன்ஸ் நிறுவனம் மூலமாக மேலும் பல படங்களைத் தயாரிக்கவும் முடியும் என்பதால் இந்த வாய்ப்பை சிவகார்த்திகேயன் ஏற்றுக்கொண்டதாகக் கூறப்படுகிறது. இதையடுத்து சன் பிக்சர்ஸுடன் இணைந்து சிவகார்த்திகேயன் நடிக்கும் படங்கள் பற்றிய அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

முதலமைச்சரின் மாநில இளைஞா் விருதுக்கு விண்ணப்பிக்க அழைப்பு

நரிமணத்தில் நீா் மோா் பந்தல் திறப்பு

பஞ்சாப் சுழலில் சிக்கிய சென்னை: மீட்டாா் கெய்க்வாட்

‘தலைமைச் செயலக பணி’: தரகா்களிடம் ஏமாறும் பட்டதாரிகள்

வாகன பதிவெண் பலகையில் ஸ்டிக்கா்: இன்றுமுதல் அபராதம்

SCROLL FOR NEXT