ஆஸ்கர் விருதுகள்: பரிந்துரைப் பட்டியலை அறிவிக்கவுள்ள பிரியங்கா சோப்ரா & நிக் ஜோனாஸ்
ஆஸ்கர் விருதுகளுக்கான பரிந்துரைப் பட்டியல் வெளியிடும் நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்க நடிகை பிரியங்கா சோப்ராவும்...
ஆஸ்கர் விருதுகளுக்கான பரிந்துரைப் பட்டியல் வெளியிடும் நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்க நடிகை பிரியங்கா சோப்ராவும் அவருடைய கணவர் நிக் ஜோனாஸும் தேர்வு செய்யப்பட்டுள்ளார்கள்.
2002-ல் தமிழன் படம் மூலமாக நடிகையாக அறிமுகமான பிரியங்கா சோப்ரா, சமீபகாலமாக ஆங்கிலப் படங்கள் மற்றும் தொலைக்காட்சித் தொடர்களில் நடித்து உலகளவில் புகழ் பெற்றுள்ளார்.
2018 டிசம்பரில் பிரியங்கா சோப்ராவும் பாடகர் நிக் ஜோனாஸூம் திருமணம் செய்துகொண்டார்கள். இருவருக்கும் ராஜஸ்தான் - ஜோத்பூரில் உள்ள உமைத் பவன் பேலஸில் திருமணம் நடைபெற்றது.
93-வது ஆஸ்கர் விருது வழங்கும் விழா பிப்ரவரி 28 அன்று நடைபெறும் என முதலில் அறிவிக்கப்பட்டது. ஆனால், உலகம் முழுக்க கரோனா வைரஸ் அச்சுறுத்தல் நிலவுவதால் ஆஸ்கர் விருது வழங்கும் விழா இரு மாதங்களுக்கு ஒத்திவைக்கப்பட்டது. 2021 பிப்ரவரி 28-க்குப் பதிலாக ஏப்ரல் 25 அன்று ஆஸ்கர் விருது வழங்கும் விழா நடைபெறவுள்ளது. மார்ச் 15 அன்று ஆஸ்கர் விருதுகளுக்கான பரிந்துரைப் பட்டியல் வெளியிடப்படுகிறது.
ஆஸ்கர் விருதுக்கு விண்ணப்பிக்கும் படங்களுக்கான விதிமுறைகளில் மாற்றம் கொண்டு வரப்பட்டுள்ளது. அதன்படி அமேசான் பிரைம், நெட்பிளிக்ஸ் போன்ற ஒடிடி தளங்களில் நேரடியாக வெளியாகும் படங்களும் ஆஸ்கர் விருதுகளுக்கு விண்ணப்பிக்கலாம் என்கிற புதிய நடைமுறை கொண்டுவரப்பட்டுள்ளது.
சிறந்த வெளிநாட்டுத் திரைப்படத்துக்கான ஆஸ்கர் விருதுக்கு இந்தியா சார்பாக ஜல்லிக்கட்டு என்கிற மலையாளப் படம் பரிந்துரைக்கப்பட்டது. எனினும் முதல் சுற்றிலேயே இந்தப் படம் வெளியேற்றப்பட்டது. பொதுப்பிரிவில் போட்டியிட்ட சூர்யா நடித்த சூரரைப் போற்று படம், தற்போது 366 படங்கள் கொண்ட சிறந்த படத்துக்கான இறுதிப் பட்டியலில் இடம்பிடித்துள்ளது. அடுத்ததாகப் பரிந்துரைப் பட்டியலில் இடம்பெற்றால், ஆஸ்கர் விருதுக்குப் போட்டியிட முடியும்.
இந்நிலையில் மார்ச் 15 அன்று ஆஸ்கர் விருதுகளுக்கான பரிந்துரைப் பட்டியல் வெளியாகவுள்ளது. பரிந்துரைப் பட்டியலை அறிவிக்கும் நிகழ்ச்சியின் தொகுப்பாளர்களாக நடிகை பிரியங்கா சோப்ராவும் அவருடைய காதல் கணவர் நிக் ஜோனாஸும் தேர்வு செய்யப்பட்டுள்ளார்கள். நாங்கள் ஆஸ்கர் பரிந்துரைப் பட்டியலை நேரலை நிகழ்ச்சியில் வெளியிடுகிறோம் என இருவரும் சமூகவலைத்தளங்களில் பதிவு செய்துள்ளார்கள்.
மார்ச் 15 அன்று இந்திய நேரம் மாலை 6.49 மணி முதல் இருவரும் ஆஸ்கர் பரிந்துரைப் பட்டியலை வெளியிடுகிறார்கள். இந்நிகழ்ச்சி ஆஸ்கர் யூடியூப் சேனலில் (youtube.com/Oscars) நேரலையாக வெளியாகிறது.