உங்கள் படங்களிலும் புகைக்கும் காட்சிகளில் நடிப்பதை தவிர்க்க வேண்டும் என நடிகர் அல்லு அர்ஜுனுக்கு மாநிலங்களவை உறுப்பினர் அன்புமணி ராமதாஸ் அறிவுரை வழங்கியுள்ளார்.
புஷ்பா படத்தின் மூலம் இந்திய அளவில் பிரபலமானவர் நடிகர் அல்லு அர்ஜுன். இந்த நிலையில் அவரிடம் புகையிலை நிறுவனம் தங்களது விளம்பரப் படத்தில் நடிக்க அழைத்ததாகவும் , புகையிலை விளம்பரத்தில் நடிக்கமாட்டேன் என அல்லு அர்ஜுன் மறுத்துவிட்டதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
இதனையடுத்து அவருக்கு பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் பாராட்டு தெரிவித்துவருகின்றனர். இந்த நிலையில் மாநிலங்களவை உறுப்பினர் அன்புமணி ராமதாஸ் தனது ட்விட்டர் பக்கத்தில் அல்லு அர்ஜுனுக்கு பாராட்டு தெரிவித்துள்ளார்.
அவரது பதிவில், ''புகையிலை நிறுவனம் ஒன்றின் விளம்பரத்தில் நடிக்க பெருந்தொகையை ஊதியமாகத் தருவதாக ஆசை காட்டப்பட்ட போதிலும், சமூகக் கேடுகளை விளைவிக்கும் விளம்பரங்களில் நடிக்க மாட்டேன் என்று நடிகர் அல்லு அர்ஜுன் மறுத்திருப்பது வரவேற்கத்தக்கது!
புகையிலை நிறுவன விளம்பரங்களில் தாம் நடித்தால், அதன் மூலம் உந்தப்பட்டு தமது ரசிகர்கள் புகையிலைப் பழக்கத்திற்கு அடிமையாகக் கூடும் என்பதால் அவர் இந்த முடிவை எடுத்ததாக செய்திகள் வெளியாகியுள்ளன. அவரது சமூக அக்கறை பாராட்டத்தக்கது!
நடிகர்கள் புகை பிடிக்கும் காட்சிகளில் நடித்தால், அதைப் பார்த்து ரசிகர்கள் புகையிலைக்கு அடிமையாவார்கள் என்பதால் தான் அத்தகைய காட்சிகளில் நடிப்பதை தவிர்க்கும்படி, மத்திய சுகாதாரத்துறை அமைச்சராக இருந்த போது முன்னணி நடிகர்களுக்கு கடிதம் எழுதினேன்.
இதையும் படிக்க | 'ராக்கி பாய் சத்தம்போடுறத நிறுத்த மாட்டாரு': 'கேஜிஎஃப்' படம் பார்த்து தூங்கிய மகன்: நடிகை பகிர்ந்த சுவாரசியத் தகவல்
புகையிலை நிறுவன விளம்பரத்தில் நடிக்க மறுத்த நடிகர் அல்லு அர்ஜுன் திரைப்படங்களிலும் புகைக்கும் காட்சிகளில் நடிப்பதை தவிர்க்க வேண்டும். அனைத்து நடிகர்களும் அவர்களின் ரசிகர்கள் உள்ளிட்ட மக்கள் நலன் கருதி புகைக்கும் காட்சிகளைத் தவிர்க்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.
முன்னதாக ஹிந்தி நடிகர் அக்ஷய் குமார் பான் மசாலா விளம்பரத்தில் நடித்ததற்காக அவரை ரசிகர்கள் கடுமையாக விமர்சித்தனர். இதனையடுத்து நடிகர் அக்ஷய் குமார் ரசிகர்களிடம் பகிரங்க மன்னிப்புக்கோரினார் என்பது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.