மெளனப் படங்களில் சார்லி சாப்ளின் நிகழ்த்திய சாகசங்கள் இன்றைக்கும் வியப்பை ஏற்படுத்தக் கூடியவை. பஸ்டர் கீட்டன், கிரிபித் எனப் பலர் இருந்தாலும் மெளனப் படங்களின் அடையாளச் சின்னமாக இன்றும் விளங்குபவர், சார்லி சாப்ளின் மட்டுமே. திரையில் புரட்சி செய்த மகத்தான கலைஞன்.
ஏப்ரல் 16, 1889-ல் இங்கிலாந்தின் லண்டனில் பிறந்தார் சார்லி சாப்ளின். சார்லஸ் சாப்ளின் சீனியர், ஹன்னா சாப்ளின் ஆகிய இவருடைய பெற்றோர் இருவருமே நாடக நடிகர்கள், இசைக்கலைஞர்கள். இதனால் சாப்ளினும் சிறு வயதிலிருந்தே கலைத்துறையில் ஆர்வம் கொண்டவராக இருந்தார். சாப்ளினின் தாய் பதினாறாவது வயதில் ஓர் இளைஞரோடு பழகி திருமணம் செய்துகொள்ளாமலேயே சிட்னி என்கிற மகனைப் பெற்றெடுத்தார். பிறகு தனது 19-வது வயதில் சார்லஸ் சாப்ளின் சீனியரைத் திருமணம் செய்துகொண்டார். இந்தத் தம்பதியின் முதல் குழந்தை, சார்லி சாப்ளின்.
சார்லி சாப்ளினுக்கு 2 வயதாகும் போது கணவரைப் பிரிந்தார் அவருடைய தாய். இதனால் அண்ணன் சிட்னி சாப்ளின் 12 வயதிலேயே கப்பல் வேலைக்கு அனுப்பப்பட்டார். அவர் அனுப்பிய பணத்தில் தான் குடும்பத்தை நடத்தினார் சாப்ளினின் தாய். தீராத வறுமை, சொந்த வாழ்க்கை காரணமாக ஹன்னாவின் மனநலம் பாதிக்கப்பட்டு காப்பகத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டார். இதனால் இரு மாதங்கள் தந்தையிடம் வளர்ந்தார்கள் சார்லியும் சிட்னியும். சார்லி சாப்ளினுக்கு 12 வயதாகும்போது, 1901-ல் அவருடைய தந்தை இறந்துவிட்டார். வறுமையும் தாயின் மோசமான நிலையும் சாப்ளினை இளம் வயதில் மிகவும் வாட்டியுள்ளது. சொந்தமாகப் பொருள் ஈட்டினால் உயிர் வாழ முடியும் என்கிற நிலைமைக்கு சார்லியும் சிட்னியும் இளம் வயதிலேயே தள்ளப்பட்டார்கள். இதனால் 12 வயது முதல் மேடை நாடகங்களில் நடிக்கத் தொடங்கினார் சாப்ளின்.
சாப்ளினின் வெற்றிகளுக்கு முக்கியப் பங்கு வகித்தவர் அவருடைய அண்ணன் சிட்னி சாப்ளின். சார்லி சாப்ளினின் அண்ணனும் ஒரு நடிகர் தான். லண்டனில் உள்ள கர்னோ நாடகக்குழுவில் முக்கிய நடிகராக இருந்தார். இதன்பிறகு அந்த நாடக கம்பெனியில் சார்லி சாப்ளினையும் சேர்த்துக்கொண்டார். நடிப்புக் கலைகளை அவருக்குக் கற்றுத் தந்து குருவாக விளங்கினார். எனினும் தனக்கென தனி பாணி அமைத்து அண்ணனை விடவும் பேர் வாங்கிக்கொண்டார் சார்லி சாப்ளின். தனது தம்பிக்கு திரைப்பட வாய்ப்புகளை உருவாக்கிக் கொடுத்து அதன்மூலம் பொருளாதார வளர்ச்சியை அடைய வைத்ததில் சிட்னிக்கு முக்கியப் பங்கு உண்டு.
மேடை நாடக நடிகராகக் கிடைத்த அனுபவங்களும் பாராட்டுகளும் சாப்ளினை அமெரிக்காவுக்கு அனுப்பி வைத்தது. ஒரு நடிகராக நாடகக் குழுவுடன் அமெரிக்காவுக்குச் சென்ற சாப்ளினுக்கு அங்குள்ள மற்றொரு நாடகக் குழுவுடன் ஒப்பந்தம் ஏற்பட்டது. அமெரிக்க வாழ்க்கை தொடங்கியது. இதனால் 13 வயதுடன் பள்ளிப் படிப்பு முடிவுக்கு வந்தது. ஒரு தொழில்முறை நடிகராகத் தன் பாதையை இளம் வயதிலேயே தேர்ந்தெடுத்துக் கொண்டார்.
ஃபிரெட் கர்னோ என்கிற அமெரிக்க நாடக கம்பெனியில் பங்கு பெற்ற சாப்ளின் ரசிகர்களிடையே உடனடியாகப் புகழ் பெறத் தொடங்கினார். இதனால் 1912-ல் முதல் பட வாய்ப்பு வந்தது. முதல் படத்துக்கு 150 டாலர் சம்பளமாக வழங்கப்பட்டது. திறமை, புகழால் இவரை பட நிறுவனங்கள் மொய்க்கத் தொடங்கின. இதனால் ஒவ்வொரு புதிய ஒப்பந்தத்தின்போதும் சம்பளம் வெகுவாக உயர்ந்தது. தன்னுடைய திறமைக்கு மக்களும் பட நிறுவனங்களும் அங்கீகாரம் அளித்ததால் 1917 முதல் சொந்தமாக தன் விருப்பத்துக்கேற்ப நடிக்கத் தொடங்கினார் சாப்ளின். 1914-ல் வெளிவந்த மேபல்ஸ் ஸ்டிரேஞ்ச் பிரடிகமெண்ட் படத்தில் முதல்முறையாகப் புகழ்பெற்ற தி டிராம்ப் கதாபாத்திரத்தில் நடித்தார் சாப்ளின். 1918 முதல் படங்களைச் சொந்தமாகத் தயாரிக்கத் தொடங்கினார்.
* 1914-ல் காட் இன் தி ரெயின் என்கிற குறும்படத்தை நடித்து இயக்கினார். 1921-ல் தி கிட் என்கிற ஆறு ரீல்கள் கொண்ட படத்தை இயக்கினார். வசூலை அள்ளியதோடு சிறந்த மெளனப் படங்களின் பட்டியலிலும் இதற்கு இடம் கிடைத்தது. 70 படங்களில் நடித்த பிறகு 1923-ல் எ வுமன் ஆஃப் பாரிஸ் என்கிற முழு நீளப் படத்தை முதல்முறையாக இயக்கினார். ஆரம்பத்தில் குறும்படங்கள், குறைவான ரீல்கள் கொண்ட படங்களில் நடித்து வந்த சாப்ளின் 1923 முதல் முழு நீளப் படங்களில் நடிக்கத் தொடங்கினார். தி கோல்ட் ரஷ், தி சர்கஸ், சிட்டி லைட்ஸ், மாடர்ன் டைம்ஸ் போன்ற மகத்தான மெளனப் படங்களை முழு நீளப் படங்களின் வழியே வழங்கினார். சாப்ளின் என்கிற மகத்தான கலைஞன் தன் திறமையை மெருகேற்றி அற்புதமான திரைப்படங்களை வழங்கத் தொடங்கிய நேரம் அது.
* ரப்பர் போன்று உடலை வளைத்து சாப்ளின் செய்த வேடிக்கைக் காட்சிகள் ரசிகர்களை உடனடியாகக் கவர்ந்தன. நடை, உடை, நகைச்சுவையான உடல் மொழி என ரசிகர்களுக்குப் புதிய அனுபவத்தை அளித்தார் சாப்ளின். திரையுலக வாழ்க்கையில் இந்தப் பாணியை அவர் மாற்றிக்கொள்ளும் வரை தொடர்ந்து வெற்றிகளே கிடைத்தன.
* 1920 களில் மெளனப் படங்களின் காலம் முடிந்து சினிமா பேசத் தொடங்கியது. இந்த மாற்றம் சாப்ளினையும் குழப்பம் அடையச் செய்துள்ளது. 1925-ல் வெளியான கோல்ட் ரஷ் என்கிற மெளனப் படத்தை 1942-ல் மீண்டும் பின்னணிக் குரல்களுடன் மீண்டும் வெளியிட்டார். நான் தான் இயக்கிய படங்களிலேயே கோல்ட் ரஷ் தான் சிறந்த படம், இப்படத்துக்காகத்தான் நான் நினைவு கூரப்பட வேண்டும் என்பது சாப்ளினின் விருப்பம். பிறகு மெளனப் படங்களின் வழியே நிகழ்த்திய சாதனைகளைப் பேசும் படங்களிலும் நிகழ்த்திக் காட்டினார்.
* பேசும் படங்கள் வெளிவரத் தொடங்கியபோது அதன் தொழில்நுட்பங்களை எதிர்த்தார் சாப்ளின். மெளனப் படங்களில் உள்ள கலைத்தன்மை, பேசும் படங்களில் இல்லை என விமரிசனம் செய்தார். ஹாலிவுட்டில் பேசும் படக் காலகட்டம் தொடங்கிய பிறகும் தனக்கு வெற்றிகளையும் வசதிகளையும் தந்த மெளனப் படங்களையே தொடர விரும்பினார். பேசும் படங்களிலும் ஆரம்பத்தில் பின்னணி இசையே பயன்படுத்தப்பட்டது. 1927-ல் தான் முதல் பேசும் படம் வெளியானது. 1930கள் முதல் பேசும் படங்கள் சகஜமாக உருவாக ஆரம்பித்தன. எனினும் 1931-ல் சாப்ளின் எழுதி, இயக்கி, நடித்த சிட்டி லைட்ஸ் மெளனப் படமாகவே வெளிவந்தது. அதேசமயம், பேசும் படங்களின் தாக்கத்தால் முதல்முறையாக இப்படத்திலிருந்து இசையமைக்கத் தொடங்கினார் சாப்ளின். வழக்கத்துக்கு மாறாக மெளனப் படமாக வெளியானாலும் சிட்டி லைட்ஸ் மிகப்பெரிய வெற்றி பெற்றதோடு உலகளவிலான மிகச்சிறந்த படங்களின் பட்டியலிலும் இடம் பிடித்தது.
* சிட்டி லைட்ஸ் படத்தின் வெற்றி சாப்ளினை மேலும் குழப்பியது. ஊர் உலகமே பேசும் படம் எடுத்தாலும் நாம் மீண்டும் மெளனப் படத்தையே தொடரலாமா அல்லது காலத்துக்கு ஏற்றாற் போல மாறலாமா, என்ன செய்வது? இதுபற்றி உடனடியாக முடிவெடுக்காமல் 16 மாதங்கள் பயணத்தில் இருந்தார் சாப்ளின். மேற்கு ஐரோப்பாவில் சுற்றுப்பயணம் செய்துவிட்டு ஜப்பானுக்குச் சென்றார். அங்கு சாப்ளினைக் கொலை செய்து அமெரிக்கா மீது போர் தொடுக்க ஜப்பானிலுள்ள தீவிர தேசியவாதிகள் முயன்றார்கள். இதில் எதிர்பாராதவிதமாக ஜப்பான் பிரதமரின் உயிர் பறிபோனது. இந்தச் சம்பவம் மற்றும் பேசும் படம் பற்றிய குழப்பங்களால் திரைத்துரையிலிருந்து ஓய்வு பெற்று சீனாவில் வாழ முடிவெடுத்தார் சாப்ளின். இச்சமயத்தில் காதல் தான் இவரை மாற்றியது. 21 வயது நடிகை பாலெட் கொட்டார்டைக் காதலிக்கத் தொடங்கினார். அமெரிக்காவில் நிலவிய தொழிற்புரட்சி சாப்ளினை மிகவும் பாதித்தது. இதனால் பலர் வேலையை இழப்பார்கள் என அஞ்சினார். தன்னுடைய எண்ணங்களைப் படத்தில் வெளிப்படுத்த முடிவெடுத்தார். அதுதான் மாடர்ன் டைம்ஸ்.
* ஹாலிவுட்டில் பேசும்படம் தொழில்நுட்பம் தொடங்கியதும் எல்லோரும் அதன் பின்னால் சென்றாலும் சாப்ளின் மட்டும் விடாப்படியாக மெளனப் படங்களை இயக்கி வந்தார். புதிய தொழில்நுட்பத்தின் வருகை சாப்ளினை முடக்கிப் போடவில்லை. மாடர்ன் டைம்ஸை முதலில் பேசும்படமாக எடுக்கவே சாப்ளின் விரும்பினார். ஆனால் ஒருசில வசனங்களுடன் பின்னணி இசையைக் கொண்ட இன்னொரு மெளனப் படமாகவே கடைசியில் அதை எடுத்தார். 1936-ல் வெளியானது. இதுவே சாப்ளின் படமொன்றில் அரசியல் கருத்துகளும் சமூக யதார்த்த நிலையையும் கொண்ட முதல் படமாக இருந்தது. எனினும் சாப்ளினின் படம் அரசியல் பேசுவதைப் பலரும் விரும்பவில்லை. இதனால் சாப்ளினின் முந்தைய படங்களையும் விடவும் மாடர்ன் டைம்ஸ் குறைவாகவே வசூலித்தது. எனினும் பத்திரிகைகள் இந்தப் படத்தை மிகவும் பாராட்டின.
* வேடிக்கையான காட்சிகளின் நடுவே தனது அரசியல் பார்வைகளையும் வெளிப்படுத்தத் தொடங்கினார் சாப்ளின். மாடர்ன் டைம்ஸ் படத்தில் தொழிலாளராக வேலை செய்யும் சாப்ளின், எதிர்பாராத விதமாக இயந்திரம் ஒன்றில் மாட்டிக்கொள்வார். அவரையும் திருகாணியாக எண்ணி தொழிலாளர் ஒருவர் முடுக்கிக் கொண்டிருப்பார். தொழிற்சாலைகளுக்கு மனிதன், இயந்திரம் என்கிற வித்தியாசம் கிடையாது என்பதை அந்த ஒரு காட்சியில் காண்பித்திருப்பார்.
* அரசியல் படங்களை எடுக்க ஆரம்பித்தவுடன் பேசும் படத்தின் தொழில்நுட்பம் சாப்ளினுக்கு அவசியமானது. 1920களின் அறிமுகமான பேசும் படத் தொழில்நுட்பத்தை 1940-ல் வெளியான தி கிரேட் டிக்டேடர் படத்தில்தான் முதல்முறையாகப் பயன்படுத்தினார். ஹிட்லரை எதிர்த்து இப்படத்தை இயக்கினார். படத்தின் இறுதிக்காட்சியில் நேரடியாக திரையின் முன் தோன்றி ஹிட்லரின் சர்வாதிகாரம், போர்களுக்கு எதிராகப் பேசினார். ஆனால் இதுபோன்ற அரசியல் கருத்துகளால் அவருடைய புகழ் குறைந்ததாக விமரிசகர்கள் கருதுகிறார்கள். எப்போது ஒரு பிரபலம் திரையில் அரசியல் பேசுகிறாரோ அப்போது சினிமா வேறு அரசியல் வேறு என ஒரு ரசிகரால் பிரித்துப் பார்க்க முடியாது. இதற்குப் பாதிப்புகள் இருக்கும் என இதன் விளைவுகள் குறித்துக் காரணம் சொல்லப்பட்டது.
* அமெரிக்காவில் முதலில் தடை செய்யப்பட்ட மற்றொரு படம் 1952-ல் வெளியான லைம்லைட். இப்படத்தில் பஸ்டர் கீட்டனும் நடித்திருந்தார். நாடகமேடைக் கோமாளியின் தோல்வியை வெளிப்படுத்திய படம் இது. இரு கெளரவ ஆஸ்கர் விருதுகளுடன் படத்தின் தனிப்பட்ட திறமைக்காக இந்தப் படத்துக்குத்தான் முதல்முறையாக ஆஸ்கர் வென்றார் சாப்ளின்.
*சாப்ளின் என்றால் கோமாளித்தனம் மட்டுமல்லாமல் அரசியல் பார்வைகளையும் வெளிப்படுத்துவார் என்பதை தி கிரேட் டிக்டேடர், எ கிங் இன் நியூ யார்க் படங்கள் மேலும் வெளிப்படுத்தின.
சாப்ளின் கதாநாயகனாகக் கடைசியாக நடித்த படம் - எ கிங் இன் நியூ யார்க். 1957-ல் வெளியான இந்தப் படம் 1973 வரை அமெரிக்காவில் வெளியாகவில்லை. தி கிரேட் டிக்டேடர் படத்தை விடவும் இதில் அரசியல் அதிகமாக இருக்கும். சாப்ளின் ஒரு கம்யூனிஸ்ட் என அமெரிக்க அரசு அவர் மீது குற்றம் சாட்டியது. இதனால் தனது வாழ்க்கை அளித்த அமெரிக்காவை விட்டு சாப்ளின் வெளியேறினார். அக்காலக்கட்டத்தில் கம்யூனிஸ்டாகக் கருதப்படுபவர்களை அமெரிக்க அரசு விசாரணை செய்தது. இதனால் அமெரிக்காவை விட்டு வெளியேறி ஸ்விட்சர்லாந்தில் வாழ்ந்தார் சாப்ளின். இதையடுத்து சாப்ளின் மீது அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளைக் கூறிய அமெரிக்க அரசு அவருடைய சொத்துகளை முடக்கியது. ஊடகங்களும் சாப்ளின் செயலைக் கண்டித்தன. தன் மீதான கேள்விகளுக்குப் பதில் அளிக்கும் விதமாகத்தான் எ கிங் இன் நியூ யார்க் என்கிற படத்தை எடுத்தார் சாப்ளின்.
அமெரிக்காவில் தஞ்சம் புகும் எஸ்ட்ரோவியா மன்னரை கம்யூனிஸ்ட் என அமெரிக்க அரசு குற்றம் சாட்டுகிறது. அதிலிருந்து அவர் எப்படித் தப்பிக்கிறார் என்பதே எ கிங் இன் நியூ யார்க் கதை. கம்யூனிஸ்டுகள் எனக் குற்றம் சாட்டப்பட்டு பிரபலங்கள் மீது அமெரிக்காவில் நடைபெற்ற மெக்கார்த்தி விசாரணைகளைக் கடுமையாகப் படத்தில் விமரிசனம் செய்தார் சாப்ளின். எ கிங் இன் நியூ யார்க் படம் ஐரோப்பாவில் பெரிய வெற்றி பெற்றாலும் அமெரிக்காவில் எதிர்பார்த்த அளவுக்கு வரவேற்பைப் பெறவில்லை.
* எ கவுண்ட்லஸ் ஃப்ரம் ஹாங்காங் (1967) என்கிற படத்தை மார்லன் பிராண்டோ நடிப்பில் இயக்கினார் சாப்ளின். பத்து வருடங்கள் கழித்து சாப்ளின் இயக்கிய படம். அந்தப் படத்தில் சாப்ளின் போல மார்லன் பிராண்டோ நடித்ததை ரசிகர்கள் ரசிக்கவில்லை. படம் தோல்வியடைந்தது. அதுவே சாப்ளின் இயக்கிய கடைசிப் படம்.
* கடைசி இருபது வருடங்களில் தனது பழைய படங்களைக் காலத்துக்கு ஏற்றாற் போல மாற்றம் செய்து புதுப்பிக்கும் வேலைகளிலும் அதன் உரிமையைப் பாதுகாக்கும் வேலைகளிலும் மட்டுமே ஈடுபட்டார் சாப்ளின். இதனால் சாப்ளினின் பழைய படங்கள் அமெரிக்காவில் மீண்டும் வெளியாகின. 1977 டிசம்பர் 25-ல் தூக்கத்தில் சாப்ளினின் உயிர் பிரிந்தது.
* மூன்று ஆஸ்கர் விருதுகளை வென்றுள்ளார் சாப்ளின். 1952-ல் வெளியான லைம்லைட் படம், மீண்டும் அமெரிக்காவில் வெளியானபோது அதன் இசைக்காக (சாப்ளின்) 1973-ல் ஆஸ்கர் விருதை வென்றது.
* அமெரிக்கா சென்று பெரிய நடிகரான பிறகு தனது அண்ணன் சிட்னிக்குத் தனது படங்களில் வாய்ப்பளித்தார் சாப்ளின். அவரைத் தன்னுடைய மேலாளராகவும் வைத்துக்கொண்டார். பட நிறுவனங்களிடம் தம்பிக்காக அண்ணன் தான் சம்பளம் பேசுவார். ஓர் ஆண்டுக்கு 6,70,000 டாலர் வருவாயைத் தம்பிக்குப் பெற்றுத் தந்தார் அண்ணன். சாப்ளினின் திறமைப் பணமாக மாற்றியவர் அவர் அண்ணன் தான் என சிட்னியின் பங்களிப்பை ஹாலிவுட் கலைஞர்கள் பாராட்டியுள்ளார்கள். தனது வாழ்க்கை வரலாற்று நூலில் தனது வெற்றிகளுக்கெல்லாம் முக்கியக் காரணம், அண்ணன் தான் என எழுதியுள்ளார் சாப்ளின். என் வாழ்க்கையில் சிட்னி என்கிற ஒருவர் இல்லாமல் போயிருந்தால் லண்டன் சேரிப்பகுதியில், தான் ஒரு குற்றவாளியாக இருந்திருப்பேன். ஒருவர் வாழ்க்கையில் வெற்றி பெற சகோதரர்கள் முக்கியமானவர்கள் என்று கூறியுள்ளார் சாப்ளின்.
* தனிப்பட்ட வாழ்க்கையில் காதல் காரணமாக நிறைய சிக்கல்களைச் சந்தித்தவர் சாப்ளின். நான்கு திருமணங்கள், 12 பெண்களுடன் காதல், நிறைய குழந்தைகள் என காதல் வாழ்க்கையால் பலமுறை நீதிமன்றம் சென்றுள்ளார். இதற்காக நஷ்ட ஈடுகளையும் நிறைய தரவேண்டியிருந்தது. 2-வது மனைவியான லிடா கிரேயை விவாகரத்து செய்தபோது அதற்குரிய நஷ்ட ஈடாக 6 லட்சம் டாலர்களைக் கொடுத்தார். இதனால் திரைப்படங்களில் கிடைத்த வெற்றிகளுக்கு நிகராக சொந்த வாழ்க்கையில் சாப்ளினால் நிம்மதியாக இருக்க முடியவில்லை.
* 1931 செப்டம்பர் 22 அன்று காந்தி - சாப்ளின் சந்திப்பு நடைபெற்றது. வட்டமேஜை மாநாட்டுக்காக லண்டன் வந்திருந்த காந்தியை நேரில் சந்தித்தார் சாப்ளின். காந்தி சட்டம் பயில லண்டன் வந்தபோது ஈஸ்ட் எண்ட் பகுதியில் தான் வசித்தார். அதே இடத்தில்தான் சாப்ளினும் ஆரம்பக் காலத்தில் வசித்தார். அந்தச் சந்திப்பின் முடிவில் காந்தி, சாப்ளின், சரோஜினி நாயுடு ஆகியோர் ஒன்றாக இணைந்து புகைப்படம் எடுத்துக்கொண்டார்கள். இச்செய்தி அன்றைய தினமே பிபிசி வானொலியில் தெரிவிக்கப்பட்டது.
* தி கிரேட் டிக்டேடர் படத்தின் சில காட்சிகளை கலரில் எடுத்து வைத்திருந்தார் சார்லி சாப்ளின். அக்காட்சிகளைப் பத்திரமாகப் பாதுகாத்து சார்லி சாப்ளின் இறந்த பிறகு வெளியிட்டார் அண்ணன் சிட்னி.
* காந்தியின் வாழ்க்கையைப் படமாக எடுத்த ரிச்சர்ட் அட்டன்பரோ, சார்லி சாப்ளின் வாழ்க்கை வரலாற்றையும் படமாக்கியுள்ளார். 1992ல் அப்படம் வெளியானது. எனினும் சாப்ளினின் வாழ்க்கையில் உள்ள சோகமும் அவருடைய ஆளுமையும் படத்தில் வெளிப்படவில்லை என ரசிகர்கள் விமர்சனம் செய்தார்கள்.
* மெளனப் படங்களைப் பார்க்க ரசிகர்கள் ஆர்வம் காட்டுவதில்லை. இதனால் மெளனப் படங்கள் ஆவணக் காப்பகங்களில் கேட்பாரற்று உள்ளன. ஆனால் சார்லி சாப்ளினின் மெளனப் படங்களுக்கு மட்டும் அன்றும் இன்றும் என்றும் பார்வையாளர்கள் உள்ளார்கள். காலம் கடந்தும் நிற்கும் கலைஞன்.