செய்திகள்

நயன்தாரா 'ஹீரோ'வான முதல் படம்!

கோமதி எம். முத்துமாரி

'ராஜா ராணி' படத்துக்குப் பிறகு தமிழ் திரையுலகில் தனக்கென ஒரு இடத்தைப் பிடித்த நயன்தாரா, தன்னுடைய அடுத்தடுத்த படங்களினால் தென்னிந்திய திரையுலகில் மிகப்பெரிய ரசிகர் பட்டாளத்தையே உருவாக்கிவிட்டார். 

தனித்துவமான நடிப்பாலும் கதைத் தேர்வினாலும் 'லேடி சூப்பர் ஸ்டார்' ஆகிவிட்டார். குறிப்பாக, தமிழ்த் திரையுலகில் ஆதிக்கம் செலுத்தும் ஹீரோக்களுக்கு மத்தியில், இந்த காலகட்டத்தில் தயாரிப்பாளர்கள் கதாநாயகியை மையமாக வைத்துப் படம் எடுக்கும் அளவுக்கு தைரியத்தை விதைத்தவர் நயன். 'அறம்', மாயா, டோரா, கோலமாவு கோகிலா, இமைக்கா நொடிகள், ஐரா, கொலையுதிர் காலம், நெற்றிக்கண், சமீபத்தில் ஓ2 என அதிகமான 'ஹீரோயின் சென்ட்ரிக்' படங்களில் நடித்தது நயன்தாராவாகத்தான் இருக்கும். 

ஆனால், இந்தப் படங்களுக்கு முன்னதாகவே முதன்மை கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார் நயன். இவரது  'ஹீரோயின் சென்ரிக்' படங்களில் முதல் படம் என்றுகூட சொல்லலாம். 

சேகர் கம்முலா இயக்கத்தில் நயன்தாரா நடித்த படம் 'நீ எங்கே என் அன்பே'. 

ஹிந்தியில் சுஜோய் கோஷ் இயக்கத்தில் வித்யா பாலன் நடித்த 'கஹானி' திரைப்படத்தின் ரீமேக்தான் இந்த படம். 2014ல் தமிழ் மற்றும் தெலுங்கில் வெளியானது. ஹைதராபாத்தில் நடப்பது போல காட்சிப்படுத்தப்பட்டிருக்கிறது. இதனால் தெலுங்கில் சில வசனங்களும் வருகின்றன. 

ஹைதராபாத் நகரில் மக்கள் அதிகம் கூடும் ஒரு இடத்தில், காற்றாடி பறக்கவிடும் விழாவில் தீவிரவாதத் தாக்குதலுடன் படம் தொடங்குகிறது. பெண்கள், குழந்தைகள் என 400க்கும் மேற்பட்டோரை பலி வாங்கிய அந்த தாக்குதலுக்குக் காரணமான முக்கிய தீவிரவாதியைத் தேடி அலையும் போலீசார், வழக்கம்போல அரசியல்வாதிகளின் தலையீட்டால் வழக்கை பாதியில் முடித்துவிடுகின்றனர். 

இந்த தாக்குதல் நடந்து 6 மாதத்துக்குப் பின்னர் ஐடி ஊழியரான தன் கணவர் அஜய் சுவாமிநாதனை(ஹர்ஷ்வர்தன் ரானே) காணவில்லை எனத் தேடி அமெரிக்காவில் இருந்து ஹைதராபாத் வருகிறார் அனாமிகா(நயன்தாரா). விமான நிலையத்தில் இருந்து நேராக காவல்நிலையத்திற்கு வரும் அனாமிகாவின் புகாரை எடுக்காமல் போலீசார் அலட்சியம் காட்ட, ஆக்ரோஷமடைகிறார். அப்போது, அந்த காவல்நிலையத்தில் தமிழ் பேசும் காவலர் பார்த்தசாரதி(வைபவ்) உதவுகிறார். தனது கணவரைக் கண்டுபிடிக்க உதவி கேட்கும் நபர்கள் எல்லாம் அடுத்தடுத்து கொல்லப்படுகிறார்கள். நயன்தாராவை கொலை செய்யவும் முயற்சி நடக்கிறது. 

இறுதியில் தனது கணவரை யார் கடத்தினார்கள்? அவரை மீட்டாரா என்பதை 'திரில்லர்' திரைக்கதை மூலமாக அழகாகக் கடத்தியிருக்கிறார் இயக்குநர். 

முதன்மை கதாபாத்திரத்தில் நயன்தாரா. காதல் கணவனுடன் ரொமான்ஸ் செய்வதாகட்டும், காணாமல் போன கணவனைத் தேடி அலையும் அப்பாவி மனைவி ஆகட்டும் போலீசின் அலட்சியம் கண்டு கோபப்படுவதாகட்டும் 'எதிர்பாராத' திரில்லர் கிளைமாக்சிலும் தெறிக்கவிட்டிருக்கிறார். உடல் மொழி, முகபாவனைகள் என பல இடங்களில் நயனின் நடிப்பை ரசிக்கலாம். 

குறிப்பாக, கரப்பான் பூச்சிக்கே பயப்படும் நயன், விடுதியில் தனியாகத் தங்குவதும் பிற ஆண்கள் தன்னிடம் நடந்துகொள்ளும்போது வெளிப்படுத்தும் உணர்வுகளும் சற்றே பதட்டமடையச் செய்யும். ஒரு அசல் நடிகைக்கு உண்டான திறமை அது. 

நான் ஒரு சாதாரண மிடில் கிளாஸ் பொண்ணு என்று சொல்வதிலும் சரி, கடைசியில் ஆக்ரோஷமாக முடிவெடுப்பதில் சரி இந்த கதாபாத்திரத்திற்கு நயன் பொருத்தமாகத் தோன்றுகிறார். 

'ஒரு மணி நேரத்துல ஒரு பொண்ண பத்தி என்ன புரிஞ்சுக்க முடியும்', 'ஒவ்வொரு பொண்ணுக்குள்ளயும் ஆயிரம் பக்கங்கள் இருக்கு, ஆயிரம் அர்த்தங்கள் இருக்கு', 'பொண்ண முழுசா புரிஞ்சுக்கணும்னா ஒரு ஜென்மம் பத்தாது', 'ஒரு பொண்ணு எப்போ பூவா மாறுவா, புயலா மாறுவான்னு தெரியாது' போன்ற வசனங்கள் எல்லாம் இந்த காட்சியில் ஏன் வருகிறது என்ற கேள்வி எழுந்தால் கண்டிப்பாக கிளைமாக்சில் பதில் இருக்கும்.  படம் முடிந்தபிறகு சில காட்சிகள் ஏன், எப்படி என பின்னோக்கி செல்வதை தவிர்க்க முடியாது. 

முதலில் திரைக்கதை சற்று மெதுவாக நகர்ந்தாலும் நயன் தன் கணவரைத் தேடும் காட்சியில் இருந்து படம் விறுவிறுப்பாக செல்கிறது. இதில் விசாரணை அதிகாரியாக வருகிறார் அம்ஜத் அலி கான்(பசுபதி). நயன்தாராவும் பசுபதியும் சந்திக்கும் முதல் காட்சிக்கு ஒரு அப்லாஸ். 'ஒரு பொண்ணுக்கு மரியாதையை குடுக்கத் தெரியாத ஆளுக்கு நான் மரியாதை கொடுக்க முடியாது' என்று பசுபதியிடம் நயன்தாரா கோபப்படும் காட்சி பேசப்பட வேண்டியது. அதுபோல, படம் முழுவதும் நயன்தாரா உடனே வரும் வைபவும் தன்னுடைய சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார். 

தெலுங்கில் முழுக் கவனம் செலுத்தி எடுக்கப்பட்ட படம் என்பதால் தமிழில் நயனுக்கு இந்த படம் பெரிதாக கைகொடுக்கவில்லை. சில இடங்களில் லாஜிக் இடித்தாலும், நயன்தாரா மெயின் ரோலில் நடித்திருக்கும் படம் என்பதாலும் விறுவிறுப்பான திரைக்கதை காரணத்தாலும் ரசிகர்கள் கண்டிப்பாக பார்க்கலாம். இப்போது நெட்ப்ளிக்ஸ்-இல் கிடைக்கிறது. 

'ஒரு பொண்ணு நெனைச்சா பெரிய வேலையைக்கூட சாதாரணமா பண்ணிடலாம்' என்கிற இந்த படத்தின் கருப்பொருள், அவரின் நிஜ வாழ்க்கையாக மாறியிருப்பது உண்மையிலேயே ஆச்சரியம்தான்!

ஹேப்பி பர்த்டே லேடி சூப்பர்ஸ்டார்!!

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

புதுச்சேரியில் கட்டுக்கட்டாக 2,000 ரூபாய் நோட்டுகள் பறிமுதல்

பிரபல தொடர்களின் ஒளிபரப்பு நேரம் மாற்றம்!

ராஜ பதவிகளைத் துறக்கிறாரா பிரிட்டன் இளவரசர்?

சத்தீஸ்கரில் 4 மாதங்களில் 80 நக்சல்கள் சுட்டுக் கொலை!

#Dinamani | வாக்காளர் அட்டை இல்லையா? சத்யபிரத சாகு விளக்கம்

SCROLL FOR NEXT