செய்திகள்

நகைச்சுவையில் கலக்கும் தெய்வ மச்சான்: திரைவிமர்சனம்

இயக்குநர் மார்டின் நிர்மல் குமார் இயக்கத்தில் நடிகர்கள் விமல், நேகா ஆகியோர் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் தெய்வ மச்சான்.

கி.ராம்குமார்

இயக்குநர் மார்டின் நிர்மல் குமார் இயக்கத்தில் நடிகர்கள் விமல், நேகா ஆகியோர் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் தெய்வ மச்சான். இத்திரைப்படத்தில் அனிதா சம்பத், பாலா சரவணன், ஆடுகளம் நரேன், பாண்டியராஜன், தீபா, வேல ராமமூர்த்தி என பலர் நடித்துள்ளனர்.  

பல்வேறு வரன்கள் பார்த்தும் தனது தங்கைக்கு திருமணம் தடைபட்டுப் போவதால் துவண்டு போயிருக்கும் அண்ணன் விமல் இறுதியாக ஒரு மாப்பிள்ளையை கண்டுபிடிக்கிறார். இதற்கிடையில் விமலின் கனவில் வரும் சாட்டைக்காரன் அவரின் தங்கைக்கு திருமணமானால் மாப்பிள்ளை இறந்துவிடுவார் என சொல்ல அதிர்ந்து போகிறார் தபால் கார்த்தியாக வரும் நடிகர் விமல். தங்கை அனிதாவிற்கு திருமணம் நடந்ததா இல்லையா? சாட்டைக்காரனின் சொல் பலித்ததா என்பதே தெய்வ மச்சான் திரைப்படத்தின் கதை. 

விலங்கு இணையத் தொடருக்குப் பிறகு நடிகர் விமலைக் காப்பாற்றியிருக்கும் திரைப்படமாக வந்திருக்கிறது தெய்வ மச்சான். முன்பைப் போல் இல்லாமல் நடிப்பில் மெனக்கெட்டிருக்கிறார் விமல். தங்கைக்கு வரன் பார்க்கும் அண்ணனாகத் தொடங்கி கனவில் வரும் சாட்டைக்காரன் சொல் பலிப்பதை எண்ணி தடுமாறும் வரை நன்றாக நடித்திருக்கிறார்.

முழுநீள நகைச்சுவைத் திரைப்படமாக வந்திருக்கும் தெய்வ மச்சான் கலகலப்புக்கு பஞ்சமில்லாமல் உருவாக்கப்பட்டிருக்கிறது. குறிப்பாக சொன்னால் கலகலப்பு திரைப்படத்திற்குப் பிறகு விமலுக்கு அமைந்த நல்ல நகைச்சுவை திரைப்படம் தெய்வ மச்சான். விமலின் தங்கை குங்குமத்தேனாக வந்திருக்கிறார் பிக்பாஸ் புகழ் அனிதா சம்பத். ஆங்காங்கே சிறுசிறு கதாபாத்திரங்களில் நடித்து வந்த அனிதா சம்பத்துக்கு இந்தப் படம் முழுநீள, முக்கியமான கதாபாத்திரத்தைக் கொடுத்திருக்கிறார் இயக்குநர். அதற்கேற்றார்போல் நல்ல நடிப்பை வழங்கியிருக்கிறார் அனிதா சம்பத். வழக்கமான அண்ணன் தங்கை பாசமலர் வசனங்கள் இல்லாமல் இயல்பாக உருவாக்கப்பட்டிருப்பதால்  ரசிக்கும்படியாக இருக்கிறது. “அண்ணனாவது நொண்ணனாவது” என அனிதா சொல்லும் வசனம் திரையரங்கில் சிரிப்பை உருவாக்கத் தவறவில்லை.

விமலின் பங்காளியாக வரும் நடிகர் பாலா சரவணனுக்கு நல்ல தீனி கொடுத்த திரைப்படம் இது. பல இடங்களில் விமலுடன் சேர்ந்து சிக்ஸ் அடித்திருக்கிறார். இவர்களுடன் நடிகர்கள் பாண்டியராஜன், ஆடுகளம் நரேன், தீபா என பெரிய பட்டாளம் இத்திரைப்படத்தில் நடித்துள்ளது. ஆடுகளம் நரேனின் குடும்பம் குறித்த நகைச்சுவைகள் ரசிக்கும்படியாக இருக்கின்றன. 

முதல்பாதியை ஒப்பிடும்போது இரண்டாம்பாதி நீளமானதாக இருப்பது படத்திற்கு பின்னடைவு. திண்டுக்கல்லை ஊர்த்தன்மையுடன் காட்டுவதில் கேமராவின் கண்கள் நன்றாக செயல்பட்டிருக்கிறது. பாடல்கள் பெரிதாக சொல்லும்படியாக இல்லை. வசனங்கள்தான் படத்தைத் தாங்கியுள்ளன எனலாம். அதேசமயம் சில இரட்டை அர்த்த வசனங்களைத் தவிர்த்திருக்கலாம். வாய் பேச முடியாத மாற்றுத்திறனாளியை கிண்டலடிக்கும் காட்சிகளை இயக்குநர் தவிர்த்திருக்க வேண்டும். இத்தகைய காட்சிகளைப் படமாக்குவதில் கூடுதல் கவனமும், அக்கறையும் ஒரு படைப்பாளிக்கு இருக்க வேண்டும். 

பெரிய ஆர்ப்பாட்டங்கள் எதுவும் இல்லாமல் குடும்பத்துடன் ரசிக்கும்படியாக வந்திருக்கிறான் தெய்வ மச்சான்.  

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

யுசிஎல்: ரியல் மாட்ரிட்காக இளம் வயதில் களமிறங்கி சாதனை! அடுத்த மெஸ்ஸியா?

டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 25 காசுகள் உயர்ந்து ரூ.87.84 ஆக நிறைவு!

அண்ணாயிஸத்தை அடிமையிஸமாக்கியவர் இபிஎஸ்: முதல்வர் மு.க. ஸ்டாலின்

மெல்லிசையே.. கௌரி கிஷன்!

கர்ஜனை மொழி கனிமொழி, செயல் வீரர் செந்தில் பாலாஜி: மு.க. ஸ்டாலின் புகழாரம்!

SCROLL FOR NEXT