செய்திகள்

சூர்யாவுக்கு நன்றி!: அமீர்

இயக்குநர் அமீர், மௌனம் பேசியதே படத்திற்காக நடிகர் சூர்யா உள்பட படக்குழுவினருக்கு நன்றி தெரிவித்துள்ளார்.

DIN

இயக்குநர் அமீர் இயக்கத்தில் வெளியான பருத்திவீரன் திரைப்படத்தால் எழுந்த சர்ச்சை இன்னும் முடிவுக்கு வராமல் இருக்கிறது. இப்படத்தின் தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா, அமீர் தன் பணத்தைப் பொய் கணக்குக் கூறி திருடிவிட்டார் எனக் கடும் குற்றச்சாட்டை வைத்தார். இதைத் தொடர்ந்து, அமீருக்கு ஆதரவாக இயக்குநர்கள் பாரதிராஜா, கரு.பழனியப்பன், சசிகுமார், சமுத்திரகனி உள்ளிட்ட பலரும் அறிக்கை வெளியிட்டனர். அதன்பின், ஞானவேல் வருத்தம் தெரிவித்தார். ஆனாலும், பொதுவெளியில் அவர் மன்னிப்பு கேட்க வேண்டும் என அமீர் தரப்பினர் குரல் எழுப்பி வருகின்றனர்.

இந்நிலையில், மௌனம் பேசியதே திரைப்படம் வெளியாகி 21 ஆண்டுகளை நிறைவு செய்ததையொட்டி அப்படத்தின் இயக்குநர் அமீர் புதிய அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். 

அதில், 

மரியாதைக்குரிய பத்திரிகை மற்றும் ஊடக நண்பர்களுக்கும், பேரன்புக்கும் பாசத்துக்கும் உரிய தமிழக மக்களுக்கும் என் அன்பு கலந்த வணக்கம்.

கடந்த ஒரு மாதத்திற்கு முன் என்னை வீழ்த்துவதற்காக அவதூறுகளையும், அவமானங்களையும் பொதுவெளியில் எனக்கு சிலர் அன்பளிப்பாக கொடுத்த போது, நான் சோர்ந்துவிடாமலும் துவண்டுவிழாமலும் பார்த்துக் கொள்ளும் விதமாக எனக்கு தன்னம்பிக்கையையும், அன்பையும், ஆதரவையும் எதிர்பாராத அளவிற்கு எனக்களித்த தமிழக ரசிகர்களுக்கும் பொது மக்களுக்கும் ஊடகத் துறையினருக்கும் என் நெஞ்சார்ந்த நன்றிகள்.

ஒரு இயக்குனராக எனக்கு அடையாளத்தைப் பெற்று தந்த என்னுடைய முதல் திரைப்படம் “மௌனம் பேசியதே" வெளியாகி இன்றோடு 21 ஆண்டுகள் நிறைவடைந்திருக்கிறது.
இந்த நெகிழ்வான தருணத்தை உங்களோடு பகிர்ந்து கொள்வதில் நான் மகிழ்ச்சியடைகிறேன்.

சென்னையை நோக்கி - சினிமாவை நோக்கி படையெடுத்து வந்த எல்லோரது கனவும் நனவாவது இல்லை. அப்படி கனவுகளை சுமந்து கொண்டிருந்த கூட்டத்தில் ஒருவனாக இருந்த என்னை கரம் பிடித்து உயர்த்தி என்னுடைய திரைக்கனவை நனவாக்கிய, "மௌனம் பேசியதே" திரைப்படத்தின் தயாரிப்பாளர்கள் திரு.கணேஷ் ரகு மற்றும் திரு.வெங்கி நாராயணன் உள்ளிட்ட அபராஜித் ஃபிலிம்ஸ் நிறுவனத்தாருக்கும், என்னோடு பயணித்து திரைப்படத்தின் வெற்றிக்கு கரம் கொடுத்த திரு.சூர்யா, செல்வி.திரிஷா, திருமதி.லைலா உள்ளிட்ட நடிகர் - நடிகைகளுக்கும், ஒளிப்பதிவாளர் திரு.ராம்ஜி மற்றும் திரு.யுவன் ஷங்கர் ராஜா உள்ளிட்ட அனைத்து தொழில்நுட்ப கலைஞர்கள் மற்றும் திரைத்துறை தொழிலாளர்களுக்கும் என் நன்றிகள்.!

என்னுடைய திரைப்பயணம் தொடங்கிய இந்த 21 ஆண்டுகளில், நான் இயக்கிய படங்கள் குறைவாக இருந்தாலும் இன்னும் என்னை மனதில் நிறுத்தி தொடர்ந்து சமூக வலைதளங்களில், ஊடகங்களில் ஆதரவு தந்து கொண்டிருக்கிற திரை ரசிகர்களுக்கும், ஊடக - பத்திரிகை நண்பர்களுக்கும், தமிழக மக்களுக்கும் குறிப்பாக "மெளனம் பேசியதே" ரசிகர்களுக்கும் எனது மனமார்ந்த நன்றிகள்.!

என்னாளும் அன்போடும்,
மாறாத நன்றியோடும்,

அமீர்” எனத் தெரிவித்துள்ளார்.

பருத்திவீரன் சர்ச்சையில் சூர்யா மௌனம் காத்தது குறித்து விமர்சனங்கள் எழுந்தாலும் அமீர், சூர்யாவுக்கு நன்றி தெரிவித்தது ரசிகர்கள் மத்தியில் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

விம்ஸ் அலைடு ஹெல்த் சயின்ஸ் கல்லூரியில் உலக உறுப்பு தான தின விழிப்புணா்வு

வாழப்பாடி அருகே இரு பைக்குகள் நேருக்குநோ் மோதல்: மாணவா் உள்பட இருவா் உயிரிழப்பு

சேலம் ரயில் நிலையத்தில் விரைவு ரயில் பெட்டியின் கண்ணாடிகள் உடைப்பு: இளைஞரிடம் விசாரணை

தியாகி தீரன் சின்னமலை நினைவு தினம்: நினைவுச் சின்னத்தில் தமிழக அரசு மரியாதை

பாகிஸ்தான்: 7 வயது சிறுவன் மீது பயங்கரவாத வழக்குப் பதிவு

SCROLL FOR NEXT