முகப்பு
தமிழ்நாடு

ரயில் தீ விபத்து: கட்டுக்கட்டாக பணம் பறிமுதல்!

ரூ.200 கட்டுகள், ரூ.500 கட்டுகள் அடங்கிய பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இதன் மதிப்பு சுமார் ஒருலட்சம் இருக்கக்கூடும் என அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Updated On : 27 ஆகஸ்ட் 2023, 12:23 pm IST
பகிர்:

மதுரை ரயில் நிலையம் அருகே நிறுத்திவைக்கப்பட்டிருந்த சுற்றுலா பயணிகள் பெட்டியில் தீ விபத்து நேரிட்டது தொடர்பாக தடயவியல் துறை அதிகாரிகள் இன்று (ஆக. 27) 2வது நாளாக சோதனையில் ஈடுபட்டுள்ளனர். 

தீ விபத்துக்கான காரணம் குறித்து அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டிருந்தபோது, பாதி எரிந்த நிலையில் கட்டுக்கட்டாக பணத்தை கண்டறிந்தனர். 

இதில் ரூ.200 கட்டுகள், ரூ.500 கட்டுகள் அடங்கிய பணம் பெட்டியில் பாதி எரிந்த நிலையில், பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இதன் மதிப்பு சுமார் ஒருலட்சம் இருக்கக்கூடும் என அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Advertisement

Advertisement

தீ விபத்துக்கான காரணமாக, ரயிலில் சமைத்து சாப்பிடுவதற்காக சமையல் எரிவாயு உருளைகள், 30 கிலோக்கும் அதிகமான விறகுகள், மண்ணெண்ணெய் அடுப்புகள் இருந்ததே காரணம் என முதல்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. 

ரயில் பெட்டியில் உள்புறமாக இருந்து ரயில் பெட்டி கதவை பூட்டிவிட்டு, தேநீர் தயாரிக்க சமையல் எரிவாயு அடுப்பை பற்றவைக்கும்போது தீ விபத்து ஏற்பட்டதாக உயிர்த்தப்பிய பயணி தகவல் தெரிவித்துள்ளார். இதன் அடிப்படையில் தீ விபத்து சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. 

ரயில் விபத்து 

இந்திய ரயில்வே துறையின் சிறப்பு சுற்றுலா திட்டத்தின் கீழ் பிற மாநிலங்களிலிருந்து சுற்றுலா தலங்களுக்குச் செல்லும் பயணிகளுக்கு தனி ரயில் பெட்டி ஒதுக்கீடு செய்துதரப்படுகிறது. இதில், உத்தரப் பிரதேச மாநிலம் லக்னெள பகுதியைச் சேர்ந்த 64 பேர் தனி ரயில் பெட்டியில் பயணித்துள்ளனர். 

கடந்த 17ஆம் தேதி பயணத்தைத் தொடங்கிய இவர்கள், கன்னியாகுமரியிலிருந்து மதுரை வந்துள்ளனர். புனலூர் - மதுரை விரைவு ரயிலில் இந்த சுற்றுலா பயணிகள் வந்த பெட்டி இணைக்கப்பட்டது. 

சனிக்கிழமை அதிகாலை 3.35 மணிக்கு மதுரை ரயில் நிலையம் சென்றது. ரயில் நிலையத்திலிருந்து ஒரு கிலோமீட்டர் தூரத்தில் நிறுத்திவைக்கப்பட்டிருந்த சுற்றுலாப் பயணிகள் பெட்டி அதிகாலை 5 மணியளவில் தீப்பற்றி எரிந்தது. 

இந்த விபத்தில் 9 பேர் உயிரிழந்தனர். படுகாயமடைந்தவர்கள் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். உயிர்த்தப்பியவர்கள் விமானம் மூலம் சொந்த மாநிலத்துக்கு அனுப்பிவைக்கப்படவுள்ளனர். உயிரிழந்தவர்களின் உடல்களும் தனி விமானம் மூலம் கொண்டுசெல்ல ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.