என்னைக் கேட்காமல் காட்சிகளை வைத்துவிட்டனர்: விஜய் மில்டன் குற்றச்சாட்டு!
மழை பிடிக்காத மனிதன் திரைப்படத்தில் ஒரு நிமிட காட்சியைத் தனக்குத் தெரியாமல் யாரோ வைத்துவிட்டார்கள் என இயக்குநர் குற்றம் சாட்டியுள்ளார்.
இயக்குநர் விஜய் மில்டன் கோலி சோடா, கடுகு படங்களின் மூலம் விமர்சகர்கள் மத்தியில் பாராட்டுகளைப் பெற்ற இயக்குநர். இவர் இயக்கிய ‘பத்து எண்றதுக்குள்ள’ திரில்லர் படமாக உருவாகி வசூல் வெற்றியைப் பெற்றது.
தற்போது, இவர் இயக்கி முடித்திருக்கும் திரைப்படம் மழை பிடிக்காத மனிதன். இதில், நாயகான நடிகர் விஜய் ஆண்டனி நடித்துள்ளார்.
இப்படம் இன்று திரையரங்குகளில் வெளியாகியுள்ளது. படம் சுமாரான விமர்சங்களையே வெற்று வருகிறது.
இந்த நிலையில், இதன் பத்திரிகையாளர் காட்சியைப் பார்த்த விஜய் மில்டன், “மழை பிடிக்காத மனிதனில் நாயகன் யார், எங்கிருந்து வந்திருக்கிறார் என்கிற கேள்விகளை வைத்தே இப்படத்தை எடுத்தேன். கேள்விகளாலே இக்கதையை உருவாக்கியிருந்தேன். இப்போது, படத்தைப் பார்க்கும்போது நாயகன் யார் என்கிற ஒரு நிமிட காட்சியை படத்தின் ஆரம்பத்தில் யாரோ சேர்த்திருக்கிறார்கள்.
இப்படி காட்சியை சேர்த்தால் பார்ப்பவர்களுக்கு என்ன சுவாரஸ்யம் இருக்கும்? தணிக்கைக்குச் சென்ற பிறகு வெளியீட்டிற்கு முன்பு இக்காட்சியை இணைத்திருக்கிறார்கள். இயக்குநரைக் கேட்காமல் இப்படிச் செய்ததற்காக என்ன சொல்வதென்றே தெரியவில்லை. படம் பார்ப்பவர்கள் தயவு செய்து, அந்த முதல் ஒரு நிமிடத்தை மறந்துவிட்டு பாருங்கள்.” வேதனையுடன் தன் குற்றச்சாட்டை கூறியுள்ளார்.