மனோரதங்கள் ஆந்தலாஜி தொடருக்கு பலரும் காத்திருக்கின்றனர்.
மலையாள இலக்கியத்தின் முதன்மை எழுத்தாளரான எம்.டி.வாசுதேவன் நாயர் ஞானபீட விருது வென்றவர். இவர் எழுதிய காலம், மஞ்சு, நாலுகெட்டு உள்ளிட்ட நாவல்கள் பெரும் கவனம் பெற்றவை.
இலக்கியத்திலும் சினிமாவிலும் இவர் அளவிற்கு செல்வாக்குடன் இருந்த எழுத்தாளர் இல்லை என்றே விமர்சகர்கள் குறிப்பிடுகின்றனர். எம்.டி.வாசுதேவன் நாயர் தன் திரைக்கதைகளால் மலையாளிகளின் திரைப்பட ரசனையையே மாற்றியமைத்தவர் என்கிறார்கள்.
நிர்மால்யம் திரைப்படத்திற்காக சிறந்த இயக்குநருக்கான தேசிய விருதையும் ஒரு வடக்கன் வீரகதா, கடவு, சதயம், பரிணயம் உள்ளிட்ட படங்களுக்காக சிறந்த திரைக்கதைக்கான தேசியவிருதையும் வென்றவர்.
இந்த நிலையில், எம்.டி.வாசுதேவன் நாயர் எழுதிய சிறுகதைகளை மையமாக வைத்து 8 இயக்குநர்கள் 9 குறும்படங்களை இயக்கியுள்ளனர். ஆந்தாலஜி கதைகளாக உருவாகியுள்ள இத்தொடருக்கு 'மனோரதங்கள்' எனப் பெயரிட்டுள்ளனர்.
நடிகர்கள் மம்மூட்டி, மோகன்லால், ஃபஹத் ஃபாசில், பிஜூ மேனன், நதியா, பார்வதி, அபர்ணா பாலமுரளி உள்ளிட்டோர் நடித்துள்ளனர். இதற்கு, நடிகர் கமல்ஹாசன் குரல் கொடுத்துள்ளார். இத்தொடர், வருகிற ஆக.15 ஆம் தேதி ஜீ5 ஓடிடி தளத்தில் வெளியாகிறது.
இந்தியாவில் உருவான ஆந்தலாஜிகளில் பாவக்கதைகள், மாடர்ன் லவ் மும்பை, மாடர்ன் லவ் சென்னை, நவரசா, ஆணும் பெண்ணும் உள்ளிட்ட தொடர்கள் கவனம் பெற்றன.
தற்போது, மலையாளத்திலிருந்து மீண்டும் ஒரு ஆந்தலாஜி வெளியாக உள்ளது. அதுவும் எம்டி வாசுதேவன் நாயர் கதைகளில் உருவான படங்கள் என்பதால் பல ரசிகர்கள் இத்தொடருக்காக காத்திருக்கின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.