இயக்குநர் மகேந்திரன், இளையராஜா 
செய்திகள்

இப்படியொரு பாடல் உருவாக இளையராஜாவிடம் மகேந்திரன் என்ன சொன்னார்?

மகேந்திரன், இளையராஜா பாடல் குறித்து...

DIN

இயக்குநர் மகேந்திரனின் மகன், இளையராஜா பாடல் ஒன்றைப் பகிர்ந்து நெகிழ்ச்சியாகப் பதிவிட்டுள்ளார்.

ஒரு திரைப்படத்தின் முழுமையான படைப்பாளி இயக்குநராக இருந்தாலும் அப்படத்தின் ஒளிப்பதிவாளரும் இசையமைப்பாளரும் மிக முக்கியமானவர்கள். இவர்கள் இருவரும் இயக்குநரை சரியாக அறிந்து வைத்திருந்தால், இந்தக் கூட்டணி படங்கள் பெரும்பாலும் வெற்றி பெற்றவையாக இருக்கும்.

தமிழ் சினிமாவில் அப்படியான அபூர்வ கூட்டணி மகேந்திரன் - இளையராஜா - பாலு மகேந்திரா. மகேந்திரன் இயக்கத்தில் பாலு மகேந்திரா ஒளிப்பதிவில் இளையராஜா இசையில் உருவான ’முள்ளும் மலரும்’ திரைப்படத்தை மறக்க முடியுமா? பின்நாள்களில் மகேந்திரனிடமிருந்து பாலு மகேந்திரா விலகியதும் ஒளிப்பதிவாளராக அசோக் குமார் பணியாற்றினார்.

இந்தக் கூட்டணியிடமிருந்து உதிரிப்பூக்கள், ஜானி, நண்டு, கை கொடுக்கும் கை என வெற்றிப் படங்கள் வெளியாகி ரசிகர்களிடமும் விமர்சகர்களிடம் பெரும் வரவேற்பையும் பெற்றன.

மகேந்திரனின் படங்களுக்கான இளையராஜாவின் பின்னணி இசை அபாரமானது. முள்ளும் மலரும் மற்றும் உதிரிப்பூக்களில் தனித்துவமாக அவை வெளிப்படும். கதாபாத்திரங்களில் உணர்ச்சிகளுக்கேற்ப அல்லது அந்த உணர்ச்சிகளுக்கு உயிர்கொடுக்கும் வகையில் இளையராஜாவின் இசை இருந்தது என்றுதான் சொல்ல வேண்டும்.

அதேநேரம், மிக நல்ல பாடல்களையும் மகேந்திரனுக்காக வாரி வழங்கியிருக்கிறார் ராஜா. முக்கியமாக, ஜானி படத்தில் இடம்பெற்ற, ’என் வானிலே’, ‘காற்றில் எந்தன் கீதம்..’, ‘ஆசையை காத்துல தூதுவிட்டு..’, ‘செனோரிட்டோ.. ஐ லவ் யூ’, ‘ஒரு இனிய மனது..’ என அனைத்துப் பாடல்களும் இன்றும் ரசிகர்களின் பொற்கால இசைகளாகவே நீடிக்கின்றன.

மகேந்திரன் மருதாணி என்கிற படத்திற்காக இளையராஜாவிடம் சென்று கதையையும் சூழலையும் சொல்ல ராஜா உருவாக்கிய பாடல், “புத்தம் புது காலை பொன்னிற வேளை” பாடல். ஆனால், அப்படத்தை மகேந்திரன் இயக்காததால் பாடலை பயன்படுத்த முடியவில்லை.

பின், 1981-ல் வெளியான இயக்குநர் பாரதிராஜாவின், ‘அலைகள் ஓய்வதில்லை’ படத்தில் மிக அழகாகக் காட்சிப்படுத்தப்பட்டது. அப்பாடல்தான் நடிகை ராதாவுக்கு முதல் ஷாட் என பாரதிராஜா குறிப்பிடுகிறார்.

இதே பாடல் 2014-ல் அறிமுக இயக்குநர் கார்த்திக் ரிஷி இயக்கத்தில் வெளியான மேகா படத்திலும் சேர்க்கப்பட்டது.

இந்த நிலையில், இயக்குநர் மகேந்திரனின் மகனும் இயக்குநருமான ஜான் மகேந்திரன் புத்தம் புது காலை பாடலுக்கு இளையராஜா இசையமைக்கும் துணுக்கைப் பகிர்ந்து, “அப்பாவிடம் நான் கேட்காமல் போன கேள்விகளில் இதுவும் ஒன்று. அப்பா இயக்க இருந்த மருதாணி படத்திற்காக, ஒலிப்பதிவு செய்யப்பட்ட பாடல், புத்தம் புது காலை பாடல்... அப்பா, இளையராஜா அவர்களிடம் என்ன கதை சொன்னார், இந்த பாடலுக்கு என்ன சூழல் சொன்னார்? இப்படியொரு பாடல் அமைவதற்கு...” என நெகிழ்ச்சியாக பதிவிட்டுள்ளார்.

அலைகள் ஓய்வதில்லை - மேகா வரை புத்தும் புது காலை பாடல் பயணித்திருக்கிறது. இப்பாடலை இப்போது யூடியூபில் கேட்டாலும் ஓரிரு நாள்களுக்கு முன் எவராவது ‘2024-ல் யாரெல்லாம் கேட்கிறீர்கள்?” என காமெண்ட் செய்திருப்பார்கள். கங்கை அமரன் வரிகளில் ஜானகி பாடிய இப்பாடல் கடந்த 44 ஆண்டுகளாகக் கேட்கப்பட்டுக்கொண்டே இருக்கிறது.

ம்ஹும்... இப்படியொரு பாடலை உருவாக்க இளையராஜாவிடம் மகேந்திரன் என்ன சொல்லியிருப்பார்?

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

6.50 லட்சம் பிகார் வாக்காளர்களை தமிழ்நாட்டில் இணைப்பதா? ப.சிதம்பரம் கண்டனம்!

கால்வாயில் கார் கவிழ்ந்து பலியானவர்களின் குடும்பத்துக்கு பிரதமர் நிதியுதவி!

அதிமுக முன்னாள் அமைச்சா்கள் விரைவில் பாஜகவில் இணைவாா்கள்: மாணிக்கம் தாகூா் எம்.பி

மனைவி இருக்கும்போதே இளம்பெண்ணுடன் லிவ்-இன்-டுகெதர் வாழ்க்கை: கணவன் குத்திக் கொலை!

ஓவல் டெஸ்ட்: இங்கிலாந்து 164 ரன்கள் குவிப்பு; வெற்றி யாருக்கு?

SCROLL FOR NEXT