சின்னத்திரை நடிகை ஷபானா முறைப்படி நடனம் கற்றுக்கொள்வதற்காக நடனப் பள்ளி செல்லத் திட்டமிட்டுள்ளார். முதல் நாள் நடனப் பள்ளிக்குச் செல்லும் புகைப்படத்தை ரசிகர்களுக்காக இணையத்தில் பகிர்ந்துள்ளார்.
நடனம் கற்றுக்கொள்ள செல்வது, புத்தாண்டையொட்டி எடுக்கப்பட்ட தீர்மானமா? இல்லையென்றால் சினிமாவில் புதிய பட வாய்ப்பா? என ரசிகர்கள் பலர் ஷபானாவின் பதிவுக்கு கேள்வி எழுப்பி வருகின்றனர்.
ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான செம்பருத்தி தொடரில் நடித்ததன் மூலம் மக்கள் மனங்களைக் கவர்ந்தவர் நடிகை ஷபானா. செம்பருத்தி தொடரில் நடிகர் கார்த்தியுடன் சேர்ந்து ஷபானா கொடுத்த நடிப்பிற்கு ஜீ தமிழ் வழங்கும் சின்னத்திரை விருதுகளும் கிடைத்தன.
அதோடு மட்டுமின்றி செம்பருத்தி தொடர் மூலம் தமிழ்நாடு முழுவதுமே கார்த்தி - ஷபானா ஜோடிக்கு ரசிகர்கள் அதிகரித்தனர். இவர்களுக்கு இடையேயான காதல் காட்சிகள், சிறிய சிறிய விடியோக்களாக இளம் தலைமுறையைச் சேர்ந்தவர்களால் சமூக வலைதளங்களில் பகிரப்படுகிறது.
2017 அக்டோபரில் ஒளிபரப்பான செம்பருத்தி தொடர் 2022 ஜீலையில் நிறைவடைந்தது. ஜீ தமிழில் 5 ஆண்டுகள் ஒளிபரப்பான ஒரே தொடர் என்ற பெருமையையும் செம்பருத்தி தொடர் பெற்றது.
இதனால், ஷபானாவுக்கு சின்னத்திரையில் மதிப்பு உயர்ந்தது. செம்பருத்தியைத் தொடர்ந்து சன் தொலைக்காட்சியில் மிஸ்டர் மனைவி தொடரில் ஷபானா நடித்து வருகிறார். பிரைம் டைம் எனப்படும் மாலை நேரத்தில் இந்தத் தொடர் ஒளிபரப்பாகிறது. இதனால், இந்தத் தொடருக்கும் ரசிகர்கள் அதிகம்.
சமூக வலைதளத்தில் சுறுசுறுப்பாக இருக்கக்கூடிய ஷபானா அவ்வபோது ரசிகர்களுடன் படங்களையும் விடியோக்களையும் பதிவிட்டு உரையாடுவார். அந்தவகையில் தற்போது நடனப் பள்ளிக்குச் செல்லும் முதல் நாள் படத்தைப் பகிர்ந்துள்ளார்.
அதில் அவர் குறிப்பிட்டுள்ளதாவது, நடனப் பள்ளியில் வருகைப்பதிவு செய்ய ஆரம்பித்துள்ளேன். நான் ஒரு நல்ல நடனக் கலைஞர் அல்ல என்பது எனக்குத் தெரியும். அதனை உணர்ந்ததால்தான் நடனப் பள்ளி செல்கிறேன். நான் நடனத்தில் மேம்பட நீண்ட நாள்கள் தேவைப்படும் என்பது எனக்கு தெரிந்துவிட்டது. ஆனால், நன்றாக கற்றுக்கொள்ள முயற்சிப்பேன். விரைவில் உங்களுக்கு என் நடனத்திறமையை வெளிப்படுத்தும் வகையில் ஒரு விடியோ பதிவேற்றம் செய்கிறேன் எனப் பதிவிட்டுள்ளார். ரசிகர்கள் பலரும் ஷபானாவுக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.