முகப்பு
செய்திகள்

பொறுப்பே இல்லையா? சமந்தாவை தொடர்ந்து சர்ச்சையில் நயன்தாரா!

Updated On : 30 ஜூலை, 2024 at 1:51 PM
பகிர்:

நடிகை நயன்தாரா புதிய சர்ச்சை ஒன்றில் சிக்கியுள்ளார்.

தமிழின் முன்னணி நடிகையாக இருக்கும் நயன்தாரா ஒரு படத்திற்கு ரூ. 8 - 10 கோடிக்கும் மேல் சம்பளம் வாங்குகிறார். திரைத்துறையை மட்டும் தொழிலாகக் கொள்ளாமல், சில தொழில்களில் முதலீட்டையும் செய்துள்ளார்.

மேலும், ஃபேமி9 என்கிற அழகுசாதனப் பொருள்களை விற்கும் நிறுவனம் ஒன்றையும் நடத்தி வருகிறார்.

Advertisement

இந்த நிலையில், நயன்தாரா தன் இன்ஸ்டாகிராம் பக்கத்தில், "செம்பருத்திப் பூ தேநீர் எனக்கு மிகவும் பிடித்தமான ஒன்று. இதனை, என் உணவுத்திட்டத்தில் கொண்டு வந்தவர் ஊட்டச்சத்து நிபுணர் முன்முன் கெனரிவால். இந்தத் தேநீர் ஆயுர்வேதத்தில் நீண்ட காலமாக பயன்படுத்தப்படுகிறது. இது சக்கரை நோய், அதிக கொழுப்பு, உயர் ரத்த அழுத்தம் மற்றும் இதயம் தொடர்பான பிரச்னைகளைத் தீர்க்க உதவுகிறது. இதை எப்படி செய்ய வேண்டும் என விரும்புபவர்கள் மருத்துவர் கெனரிவாலை தொடர்பு கொள்ளுங்கள்” எனப் பதிவிட்டுள்ளார்.

இந்தப் பதிவைத் தொடர்ந்து கல்லீரல் மருத்துவர் சிரியாக் ஏபி பிலிப்ஸ், ”செம்பருத்தி தேநீர் இதையெல்லாம் குணப்படுத்தும் என எந்த மருத்துவ நிரூபணமும் சொல்லவில்லை. உங்களை 87 லட்சத்துக்கும் அதிகமானோர் பின்தொடர்கின்றனர் என்பதால் மருத்துவம் சார்ந்த குறிப்புகளைச் சொல்லும்போது கவனமாகவும் பொறுப்பாகவும் நடந்துகொள்ள வேண்டும். இது, உங்கள் ஊட்டச்சத்து நிபுணருக்கான விளம்பரம்போல் தெரிகிறது. இந்தத் தேநீர் குறித்து எந்த ஆதாரமும் இல்லாததால், யாரும் இதைத் தொடர்ச்சியாக அருந்த வேண்டாம்” எனக் கூறியுள்ளார்.

இந்தச் சர்ச்சையால் தன் பதிவை நீக்கிய நயன்தாரா, தற்போது அதை மறுபிரசுரமும் செய்துள்ளார்.

நயன்தாராவைக் கேள்வி கேட்ட இதே மருத்துவர்தான் முன்னதாக, சுவாச தொற்றிலிருந்து காக்கும் ஹைட்ரஜன் பெராக்ஸைட் நெபுலைசர் பயன்படுத்துவது குறித்து சமந்தா வெளியிட்ட பதிவுக்கு மறுப்பு தெரிவித்து சமந்தாவை விளக்கம் கொடுக்க வைத்தவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.