ரூ.100 கோடி வசூலித்த மஞ்ஞுமல் பாய்ஸ்!
மஞ்ஞுமல் பாய்ஸ் திரைப்படம் உலகளவில் ரூ.100 கோடியை வசூலித்துள்ளது.
பறவ பிலிம்ஸ் தயாரிப்பில் இயக்குநர் சிதம்பரம் இயக்கத்தில் உருவாகியுள்ளது மஞ்ஞுமல் பாய்ஸ் திரைப்படம்.
இப்படத்தில் நடிகர்கள் சௌபின் சாகிர், ஸ்ரீநாத் பாசி முன்னணி கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.
கொடைக்கானல் குணா குகையை மையப்படுத்தி பிப்.23 ஆம் தேதி வெளியான இப்படம் கேரளத்தைவிட தமிழகத்தில் பெரும் வெற்றியைப் பெற்று வசூலைக் குவித்து வருகிறது.
ஒவ்வொரு நாளும் நட்சத்திர நடிகர்களின் படங்களுக்கு இணையாக டிக்கெட் விற்பனை நிகழ்ந்து வருவதால் இந்தாண்டின் வசூல் சாதனை படங்களில் ஒன்றாக மஞ்ஞுமல் பாய்ஸ் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த நிலையில், இப்படம் வெளியான 12 நாள்களில் உலகளவில் ரூ.100 கோடியை வசூலித்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
இப்படம் தமிழகத்தில் மட்டும் ரூ.15 கோடிக்கும் அதிகமாக வசூலித்ததுடன் 300 திரைகளில் திரையிடப்பட்டுள்ளது. இதுவரை, தமிழகத்தில் வெளியான மலையாளப் படங்களிலேயே அதிக வசூலைக் குவித்த படம் என்கிற சாதனையை அடைந்திருக்கிறது மஞ்ஞுமல் பாய்ஸ்.
ஏப்ரல் வரை பெரிய படங்கள் எதுவும் வெளியிட திட்டமிடப்படவில்லை என்பதால் தமிழகத்திலேயே இப்படம் மிகப்பெரிய வசூலைக் குவிக்கும் என கணிக்கப்பட்டுள்ளது.
மலையாளத்தில் இதுவரை புலிமுருகன் ( நடிப்பு - மோகன்லால்), லூசிஃபர் (மோகன்லால்), 2018 ஆகிய படங்களே ரூ.100 கோடிக்கும் அதிகமான வசூலைக் குவித்திருந்தது. தற்போது, அப்பட்டியலில் மஞ்ஞுமல் பாய்ஸ் படமும் இணைந்து ஆச்சரியப்படுத்தியுள்ளது.