DOTCOM
DOTCOM
செய்திகள்

'ஆடு ஜீவிதம்’ நஜீப் பேத்தி மறைவு!

DIN

ஆடுஜீவிதம் நாவலின் உண்மைக் கதாபாத்திரமான நஜீப் முகமதின் பேத்தி உடல்நலக் குறைவால் காலமானார்.

சிறுகதைகள், நாவல்கள் திரைப்படமாகும்போது அதை வாசித்தவர்களுக்கு பெரிய எதிர்பார்ப்பு இருப்பது சாதாரணம். ஆனால், ஒரு மாநிலமே ஒரு நாவலைத் தழுவி உருவான படத்திற்காகக் காத்திருப்பது நிச்சயம் சாதாரணமானது அல்ல.

அந்தப் பெருமையைச் சேர்த்திருப்பது நடிகர் பிருத்விராஜ் நடிப்பில் உருவான ஆடு ஜீவிதம் திரைப்படம்தான். 1990-களில் கேரள மாநிலம் ஆழாப்புழாவைச் சேர்ந்த நஜீப் என்பவர் பிழைப்பிற்காக சௌதி செல்கிறார். ஆனால், அங்கு பாலைவனத்தில் ஆடுகளை மேய்க்கும் அடிமையாக மாற்றப்பட்டு கடும் சித்திரவதைகளை அனுபவிக்கிறார். சில ஆண்டுகள் போராட்டத்திற்குப் பின், நஜீப் அங்கிருந்து தப்பிக்கிறார்.

கிட்டத்தட்ட உயிரைப் பிடித்துக்கொண்டு கேரளம் திரும்பிய நஜீப் கூலி வேலை செய்து வாழ்வைக் கழித்துக்கொண்டிருந்த நேரத்தில், பிரபல மலையாள எழுத்தாளர் பென்யாமின், சௌதியில் நஜீப் பட்ட துன்பங்களைக் கேட்டு ‘ஆடு ஜீவிதம்’ என்கிற நாவலை எழுதுகிறார். நாவல் வெளியானதும், நஜீப் என்கிற மனிதன் பட்ட துயரங்களும் அலைக்கழிப்புகளும் பலரையும் தொந்தரவு செய்கிறது. காரணம், பெருவாரியான மலையாளிகள் சொந்த மாநிலத்தைவிட்டு அமீரக நாடுகளில் வசிப்பதால், நஜீப்புக்கு ஏற்பட்ட அவமானங்கள், புறக்கணிப்புகள், அவலங்கள் தாங்களும் அனுபவித்தவைதான் எனப் பலரும் வருதப்படுகிறார்கள்.

எழுத்தாளர் பென்யாமின், நஜீப் முகமது (இடமிருந்து வலம்)

இன்று வரை மலையாள இலக்கியத்தில் விற்பனை சாதனை புரிந்த இந்த நாவலை வாசிக்காத வாசகர்கள் மிகக் குறைவு. பள்ளி, கல்லூரிகளிலும் நஜீப் மீண்டு வந்த கதை ஒரு ‘சாகசமாகவே’ கூறப்பட்டு வருகிறது.

இயக்குநர் பிளஸ்சி 10 ஆண்டுகள் உழைத்து ஆடு ஜீவிதம் நாவலை அதே பெயரில் திரைப்படமாக எடுத்துள்ளார். நாயகனாக நடிகர் பிருத்விராஜும் நாயகியாக அமலா பாலும் நடித்த இப்படம் வருகிற மார்ச்.28 ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியாகிறது. சமீபத்தில், இதன் டிரைலருக்கே மிகப்பெரிய வரவேற்பு கிடைத்ததால் உறுதியாக இப்படம் வசூல் ரீதியாகவும் பெரிய வெற்றிப்படமாக அமையும் என்றே கணிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், நஜீப்பின் மகன் வழிப் பேத்தியான குழந்தை சஃபா மரியம் சுவாசக் கோளாறு காரணமாக உயிரிழந்தது பலரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. மகன் பிறந்தபோது சௌதியில் அடிமையாக நஜீப் இருந்ததுபோல், தன் மகள் இறந்தபோது நஜீப்பின் மகனும் வேலைக்காக மஸ்கட்டில் இருந்திருக்கிறார்.

‘வாழ்க்கையை நம்மால் புரிந்துகொள்ளவே முடியாது என்பதை அறிய எவ்வளவு தற்செயல்களை எதிர்கொள்வது’? என ஆடு ஜீவிதம் வாசகர்கள் தங்கள் இரங்கல்களைப் பதிவு செய்து வருகின்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இந்த வாரம் யாருக்கு யோகம்!

‘மின்னும் நட்சத்திரம்’ சம்யுக்தா...!

புதிய கரோனா வைரஸ் 'ஃபிலிர்ட்' ஆபத்தா!

நவாப் ராணியின் ஆன்மா...!

தமிழே முன்... பெருமாள் பின்!

SCROLL FOR NEXT