இயக்குநர் பாலு மகேந்திராவிடம் உதவி இயக்குநராக பணியாற்றியவர் இயக்குநர் விக்ரம் சுகுமாரன். ஆடுகளம் படத்தில் மதுரை வட்டார மொழி பயிற்றுநராகவும் படத்தின் உருவாக்கத்திலும் வெற்றிமாறனுக்கு துணையாக இருந்தார்.
ஆடுகளம் வெற்றிக்கு விக்ரம் சுகுமாரன் பெரிய காரணம் என பல பேட்டிகளில் வெற்றிமாறன் கூறியிருப்பார்.
தொடர்ந்து, மதயானைக் கூட்டம் படத்தின் மூலம் விக்ரம் சுகுமாரன் இயக்குநராக அறிமுகமானார். அப்படம், இன்றும் விமர்சகர்கள் மத்தியில் பேசப்படுகிறது. ஆனால், வெளியானபோது வணிக ரீதியாக தோல்வியைச் சந்தித்தது. அதன்பின், 6 ஆண்டுகள் கழித்து நடிகர் ஷாந்தனுவை வைத்து இராவண கோட்டம் படத்தை இயக்கினார். அப்படமும் பெரிதாகக் கவனம் பெறவில்லை.
இந்த நிலையில், நேர்காணல் ஒன்றில் பேசிய விக்ரம் சுகுமாரன், “நான் நடிகர் கமல்ஹாசனின் மிகப்பெரிய ரசிகன். அவரின் தேவர் மகன் திரைப்படத்தைப் பார்த்துதான் சினிமாவுக்கே வந்தேன். என் முதல் படமான மதயானைக் கூட்டம் குறிப்பிட்ட சாதிக்கு எதிரான திரைப்படம் என்றும் நான் சாதியை உயர்த்தி பேசுவதாகவும் விமர்சனங்கள் எழுந்தன. உண்மையில், நான் சாதி அமைப்பையே எதிர்ப்பவன். மதயானைக் கூட்டம் திரைப்படத்தில் பேசப்பட்டது முற்றிலும் வேறு. ஆனால், என்னை சாதி வெறியன் என அடையாளப்படுத்தினர். அதுதான் மிகவும் வருத்தமாக இருக்கிறது.
இராவண கோட்டம் முதல்நாள் படப்பிடிப்பின்போது நான் குறிப்பிட்ட சமூகத்தை தவறாக சித்திரித்து விடுவேன் என பயந்து அந்த ஊரினர் படப்பிடிப்பை நிறுத்திவிட்டனர். அதன்பின், அவர்களுக்கு புரிய வைப்பதற்குள் போதும் என ஆகிவிட்டது.
இராவண கோட்டம் படத்தின் புரோமோஷனில் பலரும் என்னை ‘மதயானைக் கூட்டம்’ இயக்குநர் என புகழ்ந்து பேசினர். ஆனால், எனக்கு கோபம்தான் வந்தது. காரணம், அப்படம் வெளியானபோது இவர்களெல்லாம் எங்கே சென்றார்கள் என்கிற ஆதங்கத்தை தவிர்க்க முடியவில்லை.” எனக் கூறினார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.