கயல் தொடர் நாயகி சைத்ரா ரெட்டி நடிக்கும் புதிய இணையத் தொடர் குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.
சின்ன திரை நடிகைகளில் மக்கள் மனதைக் கவர்ந்த நடிகைகளில் ஒருவராக வலம்வருபவர் நடிகை சைத்ரா ரெட்டி, கன்னட தொடர்களில் நடித்து, பின்னர் தமிழில் அறிமுகமானார்.
இவர் கல்யாணம் முதல் காதல் வரை தொடரில் நடித்து மக்கள் மத்தியில் பிரபலமானார். இதனைத் தொடர்ந்து யாரடி நீ மோகினி தொடரிலும் இவர் நடித்திருந்தார். வெள்ளித் திரையில் அஜித்தின் வலிமை படத்தில் சைத்ரா நடித்திருக்கிறார்.
தற்போது, இவர் சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிவரும் கயல் தொடரில் நடித்து வருகிறார். இந்தத் தொடருக்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர்.
அதிலும் இத்தொடரில் நடிக்கும் சைத்ரா ரெட்டிக்கு இன்ஸ்டாகிராமில் ரசிகர்கள் பட்டாளமே உள்ளது. சைத்ரா ரெட்டி மற்றும் சஞ்சீவ் நடித்துவரும் கயல் தொடர், டிஆர்பியில் ஒவ்வொரு வாரமும் தொடர்ந்து முன்னிலையில் உள்ளது.
இந்த நிலையில், நடிகை சைத்ரா ரெட்டி சரிகம நிறுவனம் தயாரிக்கும் புதிய இணையத் தொடரில் பிரதான பாத்திரத்தில் நடிக்கிறார். இத்தொடரில் குரு லட்சுமணன் நாயகனாக நடிக்கிறார். இந்தத் தொடருக்கு லவ் ரிட்டர்ன்ஸ் எனப் பெயரிடப்பட்டுள்ளது.
நடிகர் குரு லட்சுமணன் யூடியூப்பில் குறும்படங்களிலும், படத்தில் சிறிய பாத்திரங்களிலும் நடித்து பிரபலமானவர். இவர் நடித்த ஹார்ட் பீட், ஆஃபீஸ் இணையத் தொடர்கள் மக்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றன.
தற்போது, குரு லட்சுமணனுடன் நடிகை சைத்ரா இணைந்துள்ள புதிய இணையத் தொடர் வெளியீடு குறித்து ரசிகர்கள் மிகுந்த ஆவலுடன் உள்ளனர். முன்னோட்ட விடியோ வெளியாகியுள்ள நிலையில், வெளியீட்டுத் தேதி விரைவில் அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
லவ் ரிட்டர்ன்ஸ் இணையத் தொடர், திருமணமான நாயகன் வாழ்க்கையில் முன்னாள் காதலி திரும்பவும் வருகிறார். முன்னாள் காதலி மற்றும் மனைவியை நாயகன் எப்படி எதிர்கொள்கிறார் என்பதை நகைச்சுவைக் கலந்து எடுக்கப்பட்டுள்ளது.
மேலும், இந்தத் தொடரில் பர்வீன், பேபி லிதன்யா உள்ளிட்டோர் நடிக்கிறார்கள். சதாசிவம் செந்தில்ராஜன், அர்ஜுன் டிவி ஆகியோர் இயக்குகிறார்கள்.
இதையும் படிக்க: இணையம் முழுக்க அகரம் சூர்யா!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.