நடிகர் ரஜினிகாந்த் 
செய்திகள்

கோடம்பாக்கத்தின் கொண்டாட்டம் ரஜினிகாந்த்!

நடிகர் ரஜினிகாந்த்தின் 50 ஆண்டுகள் திரைப் பயணம் பற்றி...

குமார் துரைக்கண்ணு

கோடம்பாக்கத்தின் கொண்டாட்டம் நடிகர் ரஜினிகாந்த். ரசிகர்களை தன்வயப்படுத்தும் மந்திரங்களை அறிந்த தெரிந்த மாய கலைஞன் அவர். 80 -கள் துவங்கி 90 -களின் இறுதிவரை தமிழகத்தின் பண்டிகை நாள்களை மேலும் சிறப்பானதாக மாற்றியவர் ரஜினிதான். அதுவும் கமல்ஹாசன் படத்துக்குப் போட்டியாக களம் இறங்கினால் திரையரங்குகள்தோறும் திருவிழாதான்.

நடிக்க வருபவர்கள் திரைத்துறையில் தனக்கான இடத்தை தக்கவைப்பதே சாத்தியமற்றது. ஆனால், ரஜினி கடந்த 5 தசாப்தங்களாக உச்ச நட்சத்திரமாகவே தொடர்ந்து கொண்டிருக்கிறார். அவர் திரையில் தோன்றினாலே திரை தானாகவே தீப்பற்றிக் கொள்கிறது. அசாத்தியமான ரஜினியின் பெரு வளர்ச்சியில் அவரை இயக்கிய இயக்குநர்களுக்கும் ஆகச்சிறந்த பங்கு இருக்கிறது.

50 ஆண்டுகளுக்கு முன்பு ஆக.15 -ஆம் தேதி வெளியான 'ஆபூர்வ ராகங்கள்' படத்தின் மூலம் திரைத்துறையில் அறிமுகமானவர். அவரது கண்களில் ஓர் ஈர்ப்புத் திறனை உணர்ந்த இயக்குநர் பாலச்சந்தர் தனது அடுத்தடுத்த படங்களில் ரஜினிக்கான பாத்திரப்படைப்புகளை கவனப்படுத்தினார்.

அந்த காலக்கட்டத்தில் இளம் ரசிகர்கள் நெஞ்சங்களில் குடிகொண்டிருந்த கமல்ஹாசனுக்கு இணையாக ரஜினிக்கு பாலச்சந்தரின் படங்களில் வலுவான பாத்திரங்கள் கொடுக்கப்பட்டது. வாய்ப்பை மிகச்சரியாக பயன்படுத்திய ரஜினி எதிர்மறை, உறுதுணை பாத்திரங்களில் நடித்து திரை உலகில் தனக்கான இடத்தை தவிர்க்க முடியாதது ஆக்கினார். பாலச்சந்தர், பாரதிராஜா, மகேந்திரன், பாலு மகேந்நிரா, எஸ்.பி. முத்துராமன் என கோலிவுட்டின் ஆகச்சிறந்த இயக்குநர்களின் படங்களில் நடித்த ரஜினி புகழின் உச்சியை அடைந்தார்.

ரஜினியின் நிறமும் தலைமுடியும் சினிமாவுக்கு சரிபட்டு வராது என்று பலரும் நினைத்திருக்க, இயக்குநர் பாலச்சந்தர் அவைகளையே தமிழ் சினிமாவில் ரஜினிக்கான மூலதனமாக்கினார். 'ஆபூர்வ ராகங்கள்' படத்தில் பாண்டியன் கதாபாத்திரத்தில் வந்துசென்ற ரஜினியை 'மூன்று முடிச்சு' படத்தில் எதிர்மறை கதாபாத்திரத்தில் நடிக்கச் செய்து, கோலிவுட்டின் பார்வையை ரஜினியின் பக்கம் திருப்பிவிட்டார்.

தொடர்ந்து அவரது படங்களிலும் பிற இயக்குநர்களின் படங்களிலும் நடித்து வந்த ரஜினிக்கு இயக்குநர் பாரதிராஜாவின் '16 வயதினிலே' திரைப்படம் மற்றொரு திருப்புமுனையாக அமைந்தது. நாடகத்தன்மை உடன் அரங்கினுள் அடைப்பட்டுக் கிடந்த செல்லுலாய்ட் சினிமாவை சப்பாணியும் மயிலும் வாழும் அசல் கிராமத்துக்கு விரல்பிடித்து கூட்டிச் சென்ற திரைப்படம் இது. தமிழ் சினிமாவின் ஆகச்சிறந்த படைப்புகளில் ஒன்றான இப்படத்தில் பரட்டை என்ற பாத்திரத்தில் வெள்ளந்தி மனிதர்கள் வாழும் ஊரில் சண்டித்தனம் செய்யும் வில்லனாக வரும் ரஜினி அனைவரது கவனத்தையும் ஈர்த்திருப்பார்.

மனித உணர்வுகளின் யதார்த்தங்களை திரைமொழியில் கையாளுவதில் வல்லவர் இயக்குநர் மகேந்திரன். அவருக்குப் பிடித்த நடிகர்களில் ரஜினிக்கு முக்கிய இடமுண்டு. கோலிவுட்டின் பத்து கல்ட் கிளாசிக் படங்களைப் பட்டியலிட்டால், அதில் 'முள்ளும் மலரும்' தவறாது இடம்பெறும். முரட்டுத்தனத்துடன் பாசம் கொண்ட அண்ணனாக காளி கதாப்பாத்திரத்தில் வரும் ரஜினி கலங்கடித்திருப்பார். "கெட்டப் பய சார் இந்த காளி" வசனம் இன்றளவும் உயிர்ப்புடன் உலவுவதற்கு ரஜினியின் நடிப்பே காரணம் என்றால் மிகையல்ல. 'ஜானி', 'கை கொடுக்கும் கை' இந்த காம்போவின் படைப்புகளே.

கேமிரா கவிஞர் பாலு மகேந்திராவும் கூட ரஜினியை வைத்து 'உன் கண்ணில் நீர் வழிந்தால்' படத்தை இயக்கியிருப்பார். இவர்கள் எல்லோரையும் விட ரஜினியை வணிக வெற்றிக்கான ஹீரோவாக உருமாற்றியவர் இயக்குநர் எஸ்.பி. முத்துராமன் தான். 'புவனா ஒரு கேள்விக்குறி', 'ஆறிலிருந்து அறுபது வரை', 'எங்கேயோ கேட்ட குரல்', 'நெற்றிக்கண்' போன்ற ரஜினியின் நடிப்புக்கு தீனி போடும் படங்களை கொடுத்த இயக்குநர் எஸ்.பி. முத்துராமன் இயக்கத்தில் மட்டும் 25 படங்களில் ரஜினி நடித்துள்ளார்.

ஏவிஎம் தயாரிப்பில் எஸ்.பி. முத்துராமன் இயக்கத்தில் ரஜினி நடித்த படங்கள் அனைத்துமே சூப்பர் ஹிட் அடித்தன. அதில் 'முரட்டுக்காளை' திரைப்படமும் ரஜினியின் காளையன் கதாப்பாத்திரமும் குறிப்பிடத்தகுந்தது. இயக்குநர் எஸ்.பி. முத்துராமனைப் போலவே ரஜினிக்கு வணிக வெற்றிகளை வசமாக்கிய இயக்குநர்களின் பட்டியல் ராஜசேகர் தொடங்கி நெல்சன் வரை நீண்டிருக்கிறது.

1976 -ல் அறிமுகமான ரஜினி இயக்குநர் மணிரத்னத்தின் இயக்கத்தில் நடித்த 'தளபதி' தமிழ் சினிமாவின் தவிர்க்க முடியாத ஆல்டைம் பேவரைட் ரகம். உச்ச நட்சத்திர போலித்தனங்களைக் குறைத்து இயல்பான தோற்றத்தில் ரஜினியை நடிக்க வைத்து உண்மைக்கு நெருக்கமாக அவரை ரசிகர்களிடம் கொண்டு சேர்த்தது. அதன் தொடர்ச்சியாக இயக்குநர் சுரேஷ் கிருஷ்ணாவின் 'அண்ணாமலை', 'பாட்ஷா' ஆகிய படங்களும் வணிக ரீதியாக வெற்றி பெற்றன. அதிலும் 'பாட்ஷா' சோர்ந்திருக்கும் ரசிகர்களை உசுப்பிவிடும் உற்சாக டானிக் ஆக இப்போது வரை தொடர்ந்து கொண்டே இருக்கிறது.

2002 -ல் வெளிவந்த 'பாபா' படம் படுதோல்வி அடைந்தது. மூன்றாடுகளுக்குப் பின் 2005 -ல் வெளிவந்த இயக்குநர் பி. வாசுவின் 'சந்திரமுகி' திரை உலகில் மிகப்பெரிய கம்பேக் திரைப்படமாக அமைந்தது. 2007 -ல் இயக்குநர் ஷங்கரின் இயக்கத்தில் வந்த 'சிவாஜி' திரைப்படம் நூறு கோடி வசூலித்து கோலிவுட்டின் பாட்ஷா ரஜினி என்பதை மெய்ப்பித்தது.

தொடர்ந்து பா. ரஞ்சித், ஏ.ஆர். முருகதாஸ், கார்த்திக் சுப்புராஜ், சிவா, நெல்சன், ஞானவேல், லோகேஷ் கனகராஜ் என தற்கால இயக்குநர்களின் படங்களில் ரஜினி நடித்து வருகிறார். பைரவியைத் தேடி 'ஆபூர்வ ராகங்கள்' படத்தில் கதவைத் திறந்துக் கொண்டு ரசிகர்களின் மனதுக்குள் நுழைந்த ரஜினிகாந்த், 50 ஆண்டுகளாக நீக்கமற நிறைந்திருப்பதற்கு காரணம் அவர் இயக்குநர்களின் நடிகர் என்பதே நிதர்சனம்.

Kodambakkam celebrates Rajinikanth

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சுதந்திர நாள்: சென்னை மெட்ரோ ரயில் சேவையில் மாற்றம்!

திகட்டாத தேன்... சரண்யா ராமச்சந்திரன்!

தெரு நாய்களை அப்புறப்படுத்த இடைக்காலத் தடை இல்லை: தீர்ப்பு ஒத்திவைப்பு!

குழந்தைகளைக் கொல்வதை நிறுத்துங்கள்..! யுஇஎஃப்ஏ கண்டனம்!

ஏலகிரி மலைமக்களுடன் எடப்பாடி பழனிசாமி பேச்சு!

SCROLL FOR NEXT