செய்திகள்

கொலையும் புதிரும்... இந்திரா - திரை விமர்சனம்!

இந்திரா திரைப்பட விமர்சனம்...

சிவசங்கர்

நடிகர் வசந்த் ரவி நடிப்பில் உருவான இந்திரா திரைப்படம் இன்று திரையரங்குகளில் வெளியாகியுள்ளது.

சென்னையில் தொடர் கொலைகள் நிகழ்கின்றன. ஒவ்வொரு கொலையின்போதும் கொல்லப்பட்டர்களின் மணிக்கட்டு பகுதி துண்டிக்கப்படுகிறது. ஒரே மாதிரியான இந்தக் கொலைகளைச் செய்வது யார்? கொலையான ஆள்களுக்கும் கொலையாளிக்கும் முன்விரோதம் இருக்கிறதா? என்கிற கிரைம் திரில்லர் கதையே இந்திரா.

இந்திரா என்றால் ஏதோ பெண்ணை மையமாக வைத்து படத்தின் கதை வடிவமைக்கப்பட்டிருக்கும் என நினைத்தால், நாயகன் வசந்த் ரவியின் பெயர்தான் இந்திராவாம். சரி, கிரைம் திரல்லர் திரைப்படங்களுக்கு வித்தியாசம்தானே முக்கியம்? வசந்த் ரவியின் ஆரம்பக்காட்சியிலேயே அவர் காவல்துறை அதிகாரியாக இருந்து பணியிடைநீக்கம் செய்யப்பட்டவர் என்பதைக் காட்டுகின்றனர். பணியிடைக்குப் பின் வலுவான காரணம் இருக்கிறது.

அதேநேரம், மனைவியுடன் வசித்துவரும் வசந்த் ரவிக்கு அதிர்ச்சியளிக்கும் விதமாக அவரின் மனைவியான மெஹ்ரின் பிரசதாவின் கைவெட்டப்பட்டு கொலை செய்யப்படுகிறார். தன் மனைவியைக் கொன்ற அந்த தொடர் சைக்கோ கொலையாளி யார்? எனத் தவிக்கும் இந்திரா, ஒவ்வொரு இக்கட்டுகளையும் சமாளித்து கொலையாளியைப் பிடித்தாரா, இல்லையா? என்கிற கதையில் கொஞ்சம் விறுவிறுப்பு இருந்தாலும் சில சொதப்பல்களால் சுவாரஸ்யம் ஈர்க்கவில்லை.

கொலைகளைச் செய்யும் கொலையாளி தன் இஷ்டத்துக்குக் கொலை செய்வது, மர்மம் என்கிற பெயரில் மர்மமே இல்லாமல் போன சுனில் கதாபாத்திரம் போன்றவை ஏன் என்கிற கேள்விகளையே எழுப்புகின்றன. இதனால், பல இடங்களில் லாஜிக் பிரச்னைகள். ஆனால், இடைவேளைக் காட்சி நல்ல திருப்பம். நடிகர் சுமேஷ் மூரின் சிரிப்பும் பார்வையின் அச்சுறுத்தலும் இரண்டாம் பாகத்திற்கான ஆவலை அதிகரிக்கிறது.

ஆனால், சில காட்சிகள் ஆர்வமாக சென்றாலும் திரைக்கதைப் பிரச்னை காரணமாக கதை வலுவை இழக்கிறது. இருப்பினும், இப்படம் வெறும் கிரைம் திரில்லர் கதையாக மட்டுமல்லாமல் அன்பு என்கிற பெயரில் மனித குணங்களின் மோசமான பக்கங்கள் வெளிப்படுவதைச் சுட்டிக்காட்ட முயற்சித்திருக்கிறது.

சில கிளோஸ் அப் காட்சிகளில் நடிகர் வசந்த் ரவியின் நடிப்பு மேம்பட்டிருப்பது தெரிகிறது. முக்கியமாகக் கண்பார்வையற்றவராக நடிக்கும்போது பதற்றத்தை இமைதுடிப்பாலும் விழிஉருட்டல்களாலும் வெளிப்படுத்தியது சிறப்பு.

நடிகர் சுனிலுக்கு கதாபாத்திரம் நன்றாகப் பொருந்தினாலும் வசன உச்சரிப்புகளில் டப்பிங் விலக்கம் இருப்பது நன்றாகத் தெரிவதால் பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்த முடிவதில்லை.

சில காட்சிகளிலேயே வந்தாலும் காத்திரமான நடிப்பைக் கொடுத்திருக்கிறார் நடிகை அனிகா சுரேந்திரன். அவருக்கும் நடிகர் சுமேஷ் மூருக்கும் இடையேயான காதல் காட்சிகளும் உணர்வுப்பூர்வமான வசனங்களும் கதைக்கு பலம்.

அறிமுக இயக்குநராக இருந்தாலும் சபரிஷ் நந்தாவிடம் மேக்கிங் திறன் இருக்கிறது. ஒருகதையை சுருக்கமாகவும் நேர்த்தியாகவும் சொல்வது தெரிந்திருக்கிறது. திரைக்கதையில் கவனம் செலுத்தினால் அவரால் இன்னும் நல்ல படங்களை உருவாக்க முடியும்.

தொழில்நுட்ப ரீதியாகவும் ஒளிப்பதிவு, இசை, எடிட்டிங் துறையினர் கச்சிதமான பங்களிப்பைச் செய்திருக்கின்றனர். முக்கியமாக, சில காட்சிகளின் கலரிஸ்ட் பணிகள் சிறப்பாக வந்திருந்தன.

என்னதான் கிரைம் திரில்லருக்கு பின் அழுத்தமாக கதையை இயக்குநர் சிந்தித்திருந்தாலும் கதையொட்டத்தில் அந்த உணர்வுகள் சரியாகக் கடத்தப்படாததால் பார்க்கலாம் ரகமாகவே வந்திருக்கிறார் இந்த இந்திரா!

actor vasanth ravi, mehreen pirzada starring indra movie review

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ராஜஸ்தானில் வெளுத்துவாங்கும் கனமழை: 2 பேர் பலி!

கறைபடிந்த அமைச்சர்கள் பதவியில் நீடிக்க வேண்டுமா? மௌனம் கலைத்தார் மோடி

தனி ஆள் அல்ல, கடல் நான்... விஜய் பகிர்ந்த செல்ஃபி விடியோ!

காதல் வலை.. சாக்‌ஷி அகர்வால்!

“Vijay பேசியதெல்லாம் Note பண்ணிருக்கேன்! அதைப் பற்றி விரிவா பேசுவேன்!” சரத்குமார் பேட்டி | BJP | TVK

SCROLL FOR NEXT