செய்திகள்

திரைப்படமாகும் உலக கேரம் சாம்பியன் வாழ்க்கை!

சென்னை கேரம் வீராங்கனையின் வாழ்க்கை திரைப்படமாக...

இணையதளச் செய்திப் பிரிவு

கேரம் விளையாட்டில் உலக சாம்பியனான சென்னை காஜிமாவின் வாழ்க்கைக் கதை திரைப்படமாகிறது.

அமெரிக்காவில் உள்ள கலிபோர்னியா மாகாணத்தில் நடைபெற்ற 6-வது சர்வதேச கேரம் விளையாட்டு போட்டியில் வெற்றி பெற்று இந்தியாவின் பெயரை உலக அளவில் உயர்த்தி பிடித்த வடசென்னை விளையாட்டு மங்கை காஜிமாவின் வாழ்க்கைச் சரிதம் திரைப்படமாகிறது.

மிகச் சாதாரணமான குடும்பத்தில் பிறந்து ஆட்டோ ஓட்டுநரின் மகளாக வளர்ந்து அப்பாவின் ஆசையான கேரம் விளையாட்டை சகோதரர் துணையுடன் கற்றுக் கொண்டு சர்வதேச விளையாட்டு போட்டியில் வென்று தன் ஏழ்மை நிலையை வென்றவர் காஜிமா.

இவரது வலிமிகுந்த வெற்றி வாழ்க்கையை உலகம் முழுவதும் கொண்டு செல்ல கர்நாடகத்தைச் சேர்ந்த ஒரு தயாரிப்பு நிறுவனம் திரைப்படமாக தயாரிக்க முன்வந்துள்ளது. காஜிமாவின் வாழ்க்கை வரலாற்று பயோபிக் ஆக உருவாகும் இந்த படத்துக்கு 'தி கேரம் குயின்' என பெயரிட்டுள்ளனர். இப்படத்தின் பூஜை இன்று நடைபெற்றது. இப்படத்தில் காஜிமாவின் கதாபாத்திரத்தில் நடிகை ரந்தியா பூமேஷ் நடிக்கிறார். விழாவில் பயோபிக்கின் உண்மை கேரம் குயினான காஜிமா தன் குடும்பத்தாரோடு கலந்து கொண்டார்.

கதையின் முக்கிய கதாபாத்திரமாக நடிக்கும் காளி வெங்கட், “இந்தப் படத்தின் கதை மிக சுவாரஸ்யமானது. முழு கதையும் மிகுந்த எமோஷனலானது. படம் பார்க்கிற ஒவ்வொரும் கண்டிப்பாக கண்ணீர் விடுவார்கள். அத்தனை அழுத்தமான கதை. படம் வெளியான பிறகு நிறைய பேசுகிறேன்.” என்றார்.

தயாரிப்பாளர் நிஹான் என்டர்டெயின்மென்ட்ஸ் நாகேஷ் பாட்டில் பேசியது:

நான் பெல்லாரி மாவட்டம். சில தொழில்கள் செய்து வருகிறேன். எனக்கு தமிழில் ஒரு படம் தயாரிக்க ஆசை இருந்தது. காஜிமா கதை என்னிடம் சொன்னார்கள் அந்த வலியும் வெற்றியும் என்னை பாதித்து, நானே அந்த கதையை எடுத்து இப்போது தயாரிப்பாளர் ஆகி விட்டேன். தமிழில் தொடர்ந்து படங்கள் செய்ய ஆசை படுகிறேன் என்றார்.

நாயகி ரந்தியா பூமேஷ் உடன் காஜிமா (பச்சை சுடிதார்)

இப்படத்தின் இயக்குநரான முரளி, ”நான் ஏற்கனவே படங்கள் இயக்கி இருந்த போதும் இந்த படம் எனக்கு ரொம்ப ஸ்பெஷல். ஒரு உண்மை சம்பவத்தைப் படமாக எடுக்க தயாரிப்பாளரிடம் போன போது உடனடியாக அட்வான்ஸ் கொடுத்து படம் தயாரிக்க ஒப்புக் கொண்டார். அதே போல காஜிமா குடும்பத்தாரும் கதையைத் திரைக்கதையை உருவாக முழு ஆதரவு தந்தார்கள். இப்போது மேடையில் பேசும் போது காஜிமா அப்பா பேச முடியாமல் கண் கலங்கினார். உண்மைதான், படம் பார்க்கும் ஒவ்வொரும் கண்கலங்கும் விதமாக படம் இருக்கும். படம் வெளியான பிறகு நான் பேசுகிறேன்.

காஜிமா பேசும் போது, “நான் கஷ்டபட்ட குடும்பத்தில் இருந்து இந்த இடத்தில் வந்து நிற்கிறேன். இதற்கு என் அப்பாவும் குடும்பத்தாரும்தான் காரணம். விளையாட்டு போட்டிகளில் கலந்து கொள்ள பணம் இல்லாமல் தவிக்கும் போது அப்பா இரவு பகலாக ஆட்டோ ஓட்டி அந்த பணத்தைக் கொண்டு என்னை விளையாட அழைத்துச் செல்வார். இன்றைக்கு இந்த வெற்றியின் மூலம் கஷ்டம் தீர்ந்து அப்பாவுக்கு சொந்த வீடு வாங்கி கொடுத்திருக்கிறேன். எல்லா பெண்களையும் உற்சாகப்படுத்தி அவர்கள் திறமையை ஊக்குவித்தால் எல்லாராலும் வெற்றி பெற வைக்க முடியும். முயற்சியை விடாமல் தொடரவேண்டும்.” என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சத்துணவு மையங்களில் சமையல் உதவியாளா் காலிப்பணியிடங்கள்: 22-க்குள் விண்ணப்பங்கள் வரவேற்பு

சிறுத்தை தாக்குதலுக்கு ஆடுகளை விடுவிக்கும் யோசனை கேலிக்குரியது: அஜித் பவார்!

70 அடி உயர சிலையை காணொலி வாயிலாக திறந்துவைத்த மெஸ்ஸி!

அமெரிக்கா: இந்தியா மீதான வரியை நீக்க மசோதா அறிமுகம்!

நாடாளுமன்ற தாக்குதல் நினைவு நாள்: வீரமரணம் அடைந்தவர்களுக்கு பிரதமர் மோடி, ராகுல் அஞ்சலி

SCROLL FOR NEXT