மறைந்த நடிகர் ஸ்ரீனிவாசனுக்கு நடிகர் மோகன்லால் இரங்கல் தெரிவித்துள்ளார்.
மலையாள சினிமாவின் போக்கை மாற்றியவர்களில் ஒருவராகக் கருதப்படுபவர் இயக்குநர், திரைக்கதை ஆசிரியர், நடிகர் ஸ்ரீனிவாசன். நடிகராகவும், திரை எழுத்தாளராகவும் மலையாளிகளின் அன்புக்குரியவராக நீண்ட காலம் இருந்தவர். இவர் நகைச்சுவை கதாபாத்திரத்தில் நடிக்கிறார் என்றாலே அப்படத்திற்கு தனி எதிர்பார்ப்பு கூடிய காலங்களும் இருந்தன.
பன்முகத்திறமையாளராக அறியப்பட்ட ஸ்ரீனிவாசன் நடிகர் மோகன்லாலுடன் நிறைய திரைப்படங்களில் இணைந்து நடித்துள்ளார்.
அதில், முக்கியமான படமாக விமர்சகர்களாலும் ரசிகர்களாலும் இன்றும் கொண்டாடப்படுவது நாடோடிகாட்டு திரைப்படம்தான். இப்படத்தில் வேலையற்ற இளைஞர்களாக இருவரும் நடித்து அசத்தியிருப்பார்கள். படத்திற்கான கதையையும் திரைக்கதையையும் எழுதியது ஸ்ரீனிவாசன்.
மோகன்லால் - ஸ்ரீனிவாசன் - சத்யன் அந்திகாடு கூட்டணி என்றாலே சிறப்பான திரைப்படமாகவே இருக்கும் என்பது சேட்டன்களின் ’சாயாக்கடை’ பேச்சாக இருந்தது.
இன்று நடிகர் ஸ்ரீனிவாசனின் மறைவுக்கு மலையாள சினிமாவின் அறிமுகம் முதல் உச்ச நட்சத்திரங்கள் வரை ஒவ்வொருவரும் அவரின் பங்களிப்பு குறித்து உருக்கமான விஷயங்களை எழுதி வருகின்றனர்.
இந்த நிலையில், ஸ்ரீனிவாசனின் நெருங்கிய நண்பரும் நடிகருமாக மோகன்லால் பதிவொன்றை வெளியிட்டுள்ளார்.
அதில், “பிரியாவிடை சொல்லாமலே ஸ்ரீனி கிளம்பிவிட்டார். அவருடனான பிணைப்பை வார்த்தைகளால் விவரிக்கத் தெரியவில்லை. திரைப்படங்களில் ஒன்றாகப் பணிபுரிந்தோம் என்பதைத் தாண்டி எங்களுக்குள் மிக அதிகமாக நேசம் இருந்தது. அவர் உருவாக்கிய ஒவ்வொரு கதாபாத்திரங்களில் தன் முகம் பார்த்த மலையாளியாக இருந்தார். என்னுடைய வலிகளையும் மகிழ்ச்சியையும் குறைகளையும் அவர் மூலம் திரையில் கண்டேன். நடுத்தர வர்கத்தின் நல்ல, கெட்ட கனவுகளை ஸ்ரீனியைப்போல் வேறு யாரால் சொல்ல முடியும்? ஸ்ரீனியின் மந்திர எழுத்தால் நாங்கள் இணைந்து நடித்த கதாபாத்திரங்கள் காலமின்றி நிற்கின்றன.
அவரது ஆசிர்வதிக்கப்பட்ட எழுத்து திறமையால்தான் தாசனும் விஜயனும் (நாடோடிக்காட்டு கதாபாத்திரங்கள்) மலையாளிகளின் மனதில் அவர்களுக்கான மனிதர்களாக மாறினார்கள். திரையிலும் வாழ்க்கையிலும் தாசனும் விஜயனும் போல சிரித்து, குதூகலித்து, சண்டையிட்டுப் பழகி பயணித்தோம். ஸ்ரீனி, வலிகளைச் சிரிப்பில் ஆட்கொண்ட அன்புள்ளம். அன்பு ஸ்ரீனியின் ஆத்மா சாந்தியடையட்டும்...” என உருக்கமாகப் பதிவிட்டுள்ளார்.
ஸ்ரீனிவாசனின் மகன் வினித் ஸ்ரீனிவாசன் இயக்கத்தில் நடிகர் மோகன்லால் மகன் பிரணவ் மோகன்லால் நடித்த ஹிருதயம் திரைப்படம் பெரிய வெற்றிப்படமானது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.