இந்தாண்டு வெளியான ஹாரர் திரைப்படங்கள் வணிக ரீதியாக நல்ல வெற்றியைப் பெற்றுள்ளன.
சினிமாவில் இந்தக் கதைகளுக்கு எப்போதும் நல்ல வியாபாரம் இருக்கிறது என உறுதியாக சில இருக்கின்றன. அதில் முன்னணி இடத்தில் இருப்பது ஹாரர் படங்களே. பேய், பிசாசு, அமானுஷ்யம் என மசாலா தூவுவதுபோல காட்சிகளை வைத்தாலே, ‘ஆ.. ஊ..’ வென வசூல் குமிய ஆரம்பித்துவிடும்.
தமிழகத்தில் காஞ்சனா மற்றும் அரண்மனை திரைப்படங்கள் இதற்கு ஓர் சாட்சி. பெரிதாக கதையெல்லாம் தேவையில்லை. குடும்பப் பின்னணியில் ரசிக்கத்தக்க சில காட்சிகளுடன் திகில் இருக்கிறதா? இருந்தால், ஹிட் தான். அதிலும், கொஞ்சம் நகைச்சுவையுடன் கூடிய ஹாரர் என்றால் சொல்லவே வேண்டாம்.
கடந்தாண்டு ஹிந்தியில் வெளியான ஸ்ட்ரீ - 2 திரைப்படம் இதுவரை எந்த ஹாரர் படமும் செய்யாத வசூலாக ரூ. 850 கோடிக்கும் அதிகமாக வசூலித்து அசத்தியது. வன்முறைக் காட்சிகள் கொப்பளித்தால் மட்டுமே ரூ. 1000 கோடியை நெருங்க முடியும் என்கிற ஃபார்முலாவை கேள்விகேட்கும் விதமாகவே இந்த வெற்றி அமைந்திருந்தது.
இந்தாண்டும் ஆச்சரியப்படுத்தும் அளவிற்கு நிறைய ஹாரர் படங்கள் வெளியாகி பெரும்பாலும் வெற்றியையும் பெற்றுள்ளன. தமிழ், மலையாளம், கன்னடம், தெலுங்கு, ஹிந்தி என பான் இந்திய மொழிகளிலும் ஹாரர் ஆக்கங்கள் உருவாக்கப்பட்டு சில கமர்சியல் அமசங்களுடன் திரைக்கு வந்து சுவாரஸ்யங்களைக் கொடுத்தன.
இதில் ஆச்சரியப்படுத்தும் விதமாக தென்னிந்திய சினிமாவையே கலக்கிய லோகா திரைப்படமே இடம்பெற்றுள்ளது. யட்சி கதையான இது, நடிகை கல்யாணி பிரியதர்ஷனை முன்னணி நாயகியாக வைத்து உருவாக்கப்பட்டது. சாதாரண ஹாரர் கதையாக இல்லாமல் இன்றைய சினிமா ரசனைகளுக்கு ஏற்ப ஸ்டைலான திரைப்படமாக திரைக்கு வந்தது. துல்கர் சல்மான் தயாரித்த இப்படம் ரூ. 300 கோடிக்கும் அதிகமாக வசூலித்து, அதிகம் வசூலித்த மலையாளத் திரைப்படம் என்கிற சாதனையையும் பெற்றுள்ளது.
ரூ. 4 கோடியில் எடுக்கப்பட்டு ரூ. 120 கோடி வரை வசூலித்த கன்னட திரைப்படமான சூ ஃப்ரம் சோ அதிகம் வசூலித்த படங்களின் பட்டியலில் இருக்கிறது. மங்களூருவிலிருக்கும் ஓர் கிராமத்தில் பேய் பிடித்ததாக நம்பப்படும் நாயகனை மையமாக வைத்து கிராமத்தில் நிகழும் பிரச்னைகள் முடிவுக்கு வருவது போல் கதை அமைந்திருந்தது. கன்னட எதாரத்தவாத கதைக்குள் சாத்தியமான ஹாரர் தனத்தை வைத்து ரசிக்கத்தக்க படத்தை எடுத்து அசத்தியிருந்தனர்.
மலையாளத்தில் ஹாரர் திரைப்படங்களுக்கே பிரபலமான இயக்குநர் ராகுல் சதாசிவன் இயக்கத்தில் நடிகர் பிரணவ் மோகன்லால் நடித்த டீயஸ் ஈரே (dies irae) திரைப்படம் மிகக் குறைந்த செலவில் எடுக்கப்பட்டு வசூலில் ரூ. 80 கோடி வரை வசூலித்து சக்கைபோடு போட்டது.
முக்கியமாக, திக்.. திக்... விஷயங்களை இரவில் காட்சிப்படுத்திய விதமும் நாயகியின் சகோதரருக்கு நிகழும் அசம்பாவிதம் ஒன்றை காட்சிப்படுத்திய விதமும் படத்திற்கு பலமாக அமைந்திருந்தன. இறுதிவரை அடுத்தது என்ன என்கிற பரபரப்பும் இருந்ததால் ரசிகர்களின் ஹாரர் விருப்பத்தை நிறைவேற்றிய படன் என்கிற பாராட்டுகளையும் பெற்றது.
தெலுங்கில் நடிகை சமந்தா தயாரிப்பில் வெளியான சுபம் திரைப்படமும் நல்ல ஆக்கமாக கருதப்பட்டது. காரணம், 90-களின் இறுதியில் வீட்டில் தொலைகாட்சித் தொடர் பார்க்கும் குடும்பத் தலைவிகளின் பின்னணியில் ஹாரர் கதை சொல்லப்படுவதும் அதை தீர்ப்பதற்கான நகைச்சுவை முயற்சிகளுமாக திரைக்கதை எழுதப்பட்டிருந்தது. ஆனால், திரையரங்க வெளியீட்டில் தோல்விப்படமானது. இருந்தும், ஹாட்ஸ்டார் ஓடிடியில் பான் இந்திய மொழிகளில் வெளியாகி கவனிக்கப்பட்டதுடன் பாராட்டுகளையும் பெற்றது.
ஹிந்தியில் வெளியான தம்மா திரைப்படம் பெரிய எதிர்பார்ப்புடன் வெளியானாலும் கலவையான விமர்சனங்களால் சுமாரான வெற்றியைப் பெற்றது. நடிகை ரஷ்மிகா இதில் அமானுஷ்ய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.
சரி, தமிழ் மொழியின் நிலவரம் என்ன? தமிழ் சினிமாவிலும் குறிப்பிடத்தகுந்த ஹாரர் திரைப்படங்கள் வெளியாகின. ஒரே பாணியில் இல்லாமல் ஹாரர் நகைச்சுவைகள், உணர்வுப்பூர்வமான ஹாரர்கள் என சில முயற்சிகள் சிறப்பாக இருந்தாலும் சொல்லிக்கொள்ளும்படியான நல்ல வெற்றியையும் எவையும் பெறவில்லை.
முக்கியமாக, குறைந்த பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட மர்மர் என்கிற திரைப்படம் ரூ. 10 கோடிக்கும் அதிகமாக வசூலித்து வணிக வெற்றியைப் பெற்றது. ஆனால், தமிழ் சினிமா ரசிக பலத்திற்கு முன் இது குறைவானதுதான்.
நடிகர்கள் தர்ஷன், காளி வெங்கட் உள்ளிட்டோர் நடிப்பில் உருவான ஹவுஸ் மேட்ஸ் திரைப்படம் நல்ல விமர்சனங்களைப் பெற்றாலும் வணிக ரீதியாக பெரிய வெற்றியைப் பெறவில்லை. ஓடிடியில் பரவலான கவனம் கிடைத்தது. அதேபோல், அறிமுக இயக்குநர் பெப்பின் ஜார்ஜ் ஜெயசீலன் இயக்கத்தில் வெளியான எமகாதகி திரைப்படமும் நல்ல விமர்சனங்களைப் பெற்றாலும் வணிக ரீதியாக எதிர்பார்த்த வெற்றியைப் பெறவில்லை.
என்ன இருந்தாலும், நன்றாக எடுக்கப்பட்ட ஹாரர் திரைப்படங்கள் மற்ற மொழிகளில் நல்ல வரவேற்பையே பெற்றன. தமிழில் சொல்லிக்கொள்ள ஒன்றுமில்லையே என கவலைப்பட வேண்டாம்... அடுத்தாண்டு நாமும் காஞ்சனா - 4, அரண்மனை - 5 படங்களை வெளியிட வாய்ப்பு இருக்கிறது!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.