நடிகர் அருண் விஜய் நடிப்பில் உருவான ரெட்ட தல திரைப்படம் இன்று திரையரங்குகளில் வெளியாகியுள்ளது.
இயக்குநர் கிரிஷ் திருக்குமரன் மான் கராத்தே, கெத்து திரைப்படங்களைத் தொடர்ந்து இயக்கியிருக்கும் திரைப்படம் ரெட்ட தல.
கதைப்படி, பாண்டிச்சேரியில் பெற்றோர் இல்லாமல் வளர்ந்த அருண் விஜய்யும், நாயகி சித்தி இத்னானியும் ஒருவரை ஒருவர் காதலிக்கின்றனர். ஆனால், சித்திக்கு ஏழையாக வாழ்வதில் நாட்டமில்லை. அதனால், அருண் விஜய்யிடம் காதலை முறித்துக்கொள்ளலாம் எனச் சொல்கிறார். அப்படியான சூழலில் ஒரு குற்றத்தின் மூலம் இருவரது வாழ்வும் செழிக்க ஆரம்பமாக பிரச்னையும் வருகிறது. பணத்தைத் தேடிச் சென்ற அருண் விஜய்யும் சித்தி இத்னானியும் என்ன சிக்கலைச் சந்தித்தார்கள்? இரட்டை வேடத்தின் இன்னொரு அருண் விஜய் யார்? என்கிற கதையே ரெட்ட தல.
இயக்குநர் கிரிஷ் திருக்குமரன் 9 ஆண்டுகள் இடைவேளைவிட்டு ரெட்ட தல திரைப்படம் மூலம் வந்திருக்கிறார். ஆரம்பக் காட்சிகளில் கிளாஸான மேக்கிங் தெரிய, நல்ல ஆக்சன் படமாக இருக்கும் என நினைத்தால் அதற்கான எந்த அழுத்தமான கதையும் திரைக்கதையும் இல்லை. வெறுமனே இரட்டை கதாபாத்திரங்களை உருவாக்கி, எந்த லாஜிக்கும் இல்லாமல் அவர்களை மோதவிட்டு சாதாரண விஷயத்திற்காக தலையைக் காலைச்சுற்றி ஒரு கதையைச் சொல்லியிருக்கிறார். சில ஆக்சன் காட்சிகள் எடுக்கப்பட்ட விதம் நன்றாக இருந்தாலும் அதற்கான தருணங்களோ காட்சிகளோ அழுத்தமாக இல்லாததது பெரிய குறை.
அறிமுக காட்சியில் நான் யார் என்கிற பாணியில் அருண் விஜய் தன் கதையைச் சொல்வதே சலிப்பாக இருக்கிறது. இரண்டு அருண் விஜய்யும் முதல்முறை சந்தித்துக்கொள்ளும்போது இருவரும் ஸ்டைலாகவே உடை அணிந்திருக்கின்றனர். ஆனால், அதிலொருவர் நான் ஸ்டைலாக இல்லை என்கிறார். மிக மிக அபத்தமான காட்சிகளாலும் வசனங்களாலும் நிறைந்திருக்கிறது ரெட்ட தல.
கதை விவாதக்குழு என நாலைந்து பேரின் பெயர் இடம்பெற்றிருக்கிறது. ரசனையாகவோ, வித்தியாசமாகவோ ஒரு காட்சிகூட இவர்களால் யோசிக்க முடியவில்லை என்பது திரையில் தெரிகிறது. கமர்சியல் படமென்றாலும் சுவாரஸ்யம் வேண்டாமா? முதல் பாதி விறுவிறுப்பாகச் சென்றாலும் இரண்டாம்பாதிக்கான எதிர்பார்ப்பு உருவாகாமல் போனது பலவீனம்.
நடிகர் அருண் விஜய் ஏன் இக்கதையைத் தேர்ந்தெடுத்தார் எனத் தெரியவில்லை. தடம் திரைப்படத்தில் இரட்டை கதாபாத்திரத்தில் அண்ணன் யார், தம்பி யார் என்பதை நடிப்பில் கொண்டு வந்தவர் இப்படத்தில் எந்த மெனக்கெடலையும் செய்யவில்லை. இருவரும் ஒன்றுபோலவே இருக்கின்றனர்.
சித்தி இத்னானி படம் முழுக்க இருந்தாலும் எந்த இடத்திலும் கவரவில்லை. சில இடங்களில் வசனங்களுக்கும் நடிப்புக்கும் தொடர்பும் இல்லை. தன்யா ரவிச்சந்திரனும் அப்படித்தான்.
ஆக்சன் திரைப்படங்களை எடுக்க வேண்டுமென முயன்ற இயக்குநர் அதற்கு சரியான கதையும் திரைக்கதையும் வேண்டுமென்பதையும் உணர்ந்திருந்தால் ரெட்ட தல திரைப்படத்தை இன்னும் சிறப்பாக எடுத்திருக்கலாம். ஆனால், பலவீனமான காட்சிகளால் படம் எந்த இடத்திலும் ஆர்வத்தைக் கொடுக்கவில்லை.
படத்திற்கான சண்டைக்காட்சிகளை பிசி ஸ்டண்ட்ஸ் (பிரபு) கவனித்திருக்கிறார். இன்று வெளியான விக்ரம் பிரபுவின் சிறை திரைப்படத்திற்கும் இவர்தான் சண்டைப்பயிற்சியாளர். ஆக்சன் காட்சிகளை நன்றாக ஒருங்கிணைத்திருப்பது தெரிகிறது.
சாம் சிஸ் இசையில் நடிகர் தனுஷ் பாடிய கண்ணம்மா பாடல் ஆறுதலைக் கொடுக்கிறது. பாடலை எடுத்த விதமும் ரசிக்க வைக்கிறது. ரெட்ட தல - இரண்டு தலை இருந்தால் எவ்வளவு பலமோ அவ்வளவு வலியும் இருக்கிறதல்லவா?!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.