இந்திய சினிமாவில் பல கோடிகளைக் குவிக்கும் திரைப்படங்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.
பான் இந்திய சினிமாக்களுக்கான வணிகம் உலகளவில் பெரிதாக பரவியிருப்பதால் பிரம்மாண்ட திரைப்படங்களைத் தயாரிப்பதற்கான போட்டியில் பல பெரிய நிறுவனங்கள் கோடிகளைக் கொட்டுவதுடன் கதை ரீதியாகவும் தொழில்நுட்ப ரீதியாகவும் திரைப்படம் சரியாக பொருந்தி வரும்போது இன்றைய சாதனை இலக்கான ரூ. 1000 கோடி வசூலையும் அடைகின்றன.
பான் இந்திய மொழிகளில் ஆண்டுதோறும் பல ஆயிரம் கோடிகள் முதலீடு செய்யப்பட்டு திரைப்படங்கள் தயாரிக்கப்பட்டாலும் வெற்றி விகிதம் கடுமையானச் சரிவைச் சந்தித்தாலும் இன்னொரு புறம் ஆண்டிற்கு ஒன்றோ இரண்டோ ஆயிரம் கோடி வணிகத் திரைப்படங்களும் வந்துவிடுகின்றன.
இதுவரை இந்திய சினிமாவிலேயே அதிகம் வசூலித்த திரைப்படங்களின் பட்டியலில் ரூ. 2,070 கோடி வசூலித்த நடிகர் ஆமீர் கானின் தங்கல் திரைப்படமே முதலிடத்தில் உள்ளது. இதனைத் தொடர்ந்து பாகுபலி - 2 (ரூ. 1,788 கோடி), புஷ்பா - 2 (ரூ. 1,740 கோடி), ஆர்ஆர்ஆர் (ரூ. 1,230 கோடி), கேஜிஎஃப் - 2 (1,245 கோடி), ஜவான் (ரூ. 1,160 கோடி), பதான் (ரூ. 1,055 கோடி), கல்கி ஏடி 2898 (ரூ. 1,042 கோடி) என வசூலித்திருக்கின்றன.
தற்போது, இந்தப் பட்டியலில் நடிகர் ரன்வீர் சிங்கின் துரந்தர் திரைப்படமும் இணைந்துள்ளது. இப்பட்டியலை ஒப்பிட, ஹிந்தியில் மட்டுமே வெளியாகி ரூ. 1000 கோடி என்கிற இமாலய சாதனையை துரந்தர் படைத்திருப்பது பலரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.
தங்கல் ஒருமுறை மட்டுமே நிகழும் அற்புதம் போல் 2016-ல் வெளியாகி அப்போதே ஓராண்டிற்குள் இவ்வளவு பெரிய தொகை வசூலித்து மாபெரும் வெற்றியை அடைந்தது. தங்கல் போன்ற வெற்றி சாத்தியப்பட்டதற்கு அன்றைய நிலவரப்படி மல்டிபிளக்ஸ் திரைகளைத் தாண்டி நாடு முழுவதும் நிறைய ஒரே ஒரு திரையைக் கொண்ட திரையரங்குகளும் அதிகம் இருந்தன.
ஆனால், இடைப்பட்ட இந்தக் காலகட்டங்களில் சரியான வணிகம் இல்லாததையும் பராமரிப்பு செலவையும் காரணமாக வைத்து பல திரையரங்கங்கள் மூடப்பட்டன.
முக்கியமாக, வட இந்தியாவில் நூற்றுக்கணக்கான திரையரங்கங்கள் தொழிலை விட்டுச் சென்றன. அந்த இடங்களைத் தற்போது மல்டிபிளக்ஸ் திரைகளே பிடித்திருப்பதாகத் தெரிகிறது. தமிழகத்தில் இருக்கும் ஆயிரக்கணக்கான திரைகளில் 30 சதவீதம் மட்டுமே தனித்திரையரங்குகள் எனக் கூறப்படுகிறது.
இப்படியான சூழலில் இன்று ரூ. 1000 கோடியை ஒரு திரைப்படம் வசூலிப்பது என்பது சாதனைதான். பாகுபலியின் வெற்றியால் அதன் இரண்டாம் பாகத்திற்கு அந்த வாய்ப்பு அமைந்தது. அதேபோல், கேஜிஎஃப் மற்றும் புஷ்பா படங்களுக்கு ஹிந்தியில் கிடைத்த வரவேற்பால் அதன் இரண்டாம் பாகங்கள் வசூல் வேட்டையில் ஈடுபட்டன.
ஆச்சரியமாக, இந்தப் பட்டியலில் நடிகர் ஷாருக்கானின் இரண்டு திரைப்படங்கள் (ஜவான், பதான்) இடம் பெற்றுள்ளன. பிரபாஸுக்கு அந்த வாய்ப்பு அமைந்தாலும் கல்கியில் அமிதாப் பச்சன், கமல் ஹாசன் உள்ளிட்ட மிகப்பெரிய நட்சத்திர பட்டாளங்களைக் கணக்கில் கொண்டால், ஷாருக்கானே வசூல் நாயகனாக இருக்கிறார்.
இந்த ரூ. 1,000 கோடியை ஈட்டிய அனைத்து திரைப்படங்களுக்கும் பொதுவான ஓர் அம்சம் இருக்குமென்றால் அனைத்தும் ஆக்சன்களால் நிறைந்தவை என்பதுதான். தங்கல் சிறிய விதிவிலக்காக அமைந்தாலும் அதிலும் மல்யுத்தம்தான் பிரதானமாக இருந்தது.
கேஜிஎஃப் திரைப்படமே இப்படியான திரைப்படங்கள் பெரிய வணிகங்களைச் செய்யும் என்கிற நம்பிக்கையைக் கொடுத்ததால் லாஜிக் இல்லாத சூப்பர் ஹீரோவாக நாயகர்களுக்கான கதைகள் எழுதப்பட்டன. அப்படியான சூப்பர் ஹீரோவாகவே அல்லு அர்ஜுன் வென்றார்.
தேசப்பற்று சார்ந்த விஷயங்களுடன் காவியத்தன்மை கொண்ட கதாபாத்திரங்களாகத் திரைக்கு வந்த ஆர்ஆர்ஆர், பதான், ஜவான், கல்கி 2898 ஏடி ஆகிய படங்களின் வெற்றிக்கு சில உளவியல் ரீதியான காரணங்களும் இருக்கத்தான் செய்கின்றன. இந்த அனைத்துப் படங்களுக்கும் குடும்பம் குடும்பமாக ரசிகர்கள் சென்று பார்த்தார்கள்.
ஆனால், திரைக்கு வந்த 21 நாள்களிலேயே ஆயிரம் கோடியைக் குவித்த துரந்தர் ஏ சான்றிதழுடன் வெளியாகியும் இந்தச் சாதனையைச் செய்திருப்பது, இந்திய சினிமா அடுத்தச் சுற்று வணிகத்திற்குத் தயாராகிவிட்டது என்பதைத்தான் குறிக்கிறது.
பாகுபலி, கேஜிஎஃப், புஷ்பா முதல் பாகங்கள் வசூலித்ததைவிட ஹிந்திலேயே பல மடங்கு வசூலித்த துரந்தர், அதன் இரண்டாம் பாகத்தில் ரூ. 2,000 கோடியை நெருங்க வாய்ப்புள்ளதாகவே பேசப்படுகிறது.
கன்னடம், தெலுங்கு, ஹிந்தியிருந்து இந்த ஆயிரம் கோடிகள் வந்துவிட்டன. ஆனால், தமிழும் மலையாளமும் இன்னும் நெருங்கவில்லை. தமிழ் சினிமாவை ஒப்பிட செலவும், பட்ஜெட்டும் குறைவான திரைத்துறையான மலையாளம் நிறைய வெற்றிப்படங்களைக் கொடுத்துவிட்டனர்.
தமிழ் சினிமாவுக்கு ஏமாற்றமான ஆண்டாகவே இது அமைந்துள்ளது. கூலி ஆயிரம் கோடி வசூலிக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், கடும் விமர்சனங்களைச் சந்தித்தது. அடுத்தாண்டு போட்டியில் ஜெயிலர் - 2 இருக்கிறார். பார்ப்போம்!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.