இயக்குநர் ஜெயப்பிரகாஷ் நாராயணன் இயக்கிய காதல் என்பது பொதுவுடைமை திரைப்படம் இன்று திரையரங்குகளில் வெளியாகியுள்ளது.
எல்லா மகள்களும் தன் காதலை முதலில் தன் தாயிடம் சொல்ல விளைவதைப்போல் நாயகி லிஜோ மோல் தன் தாயான ரோகிணியிடம் தான் காதலில் இருப்பதை தயக்கத்துடன் சொல்கிறார். யார்? என்ன என கேட்காமலே, நீ யாரைக் கூட்டி வந்தாலும் அவரை ஏற்றுக்கொள்வதாக ரோகிணி பரந்த மனதுடன் தன் மகளுடன் உரையாடுகிறார். ஆனாலும், லிஜோவுக்குள் பெரிய தயக்கம் உறுத்துகிறது.
அம்மாவிடம் அறிமுகப்படுத்தத்தான் வேண்டுமா என குழப்பம் எழ, இறுதியாக தன் இணையை வீட்டிற்கு வரச்சொல்கிறார் லிஜோ. தன் மகளின் வருங்கால வாழ்க்கையே வருவதுபோல் ரோகிணி பரபரப்பாக வீட்டு வேலைகளைச் செய்கிறார். மகளின் இணைக்கு ஒரு பரிசுப்பொருளையும் வாங்கி மகளிடம் தந்து ஆனந்தம் அடைபவருக்கு பெரிய அதிர்ச்சியளிக்கிறார் லிஜோ. தான் காதலிப்பது ஒரு ஆணை அல்ல பெண்ணை என தன் தாயிடம் நந்தினியை (அனுஷா) அறிமுகப்படுத்துகிறார். வீட்டிற்குள் பிரச்னை வெடிக்கிறது. தன்பாலின ஈர்ப்பாளரான தன் மகளை ரோகிணி ஏற்றுக்கொள்கிறாரா? தன்பாலின காதலை சமூகம் எப்படி எதிர்கொள்கிறது? என்பதே படத்தின் மீதிக்கதை.
லென்ஸ், தலைக்கூத்தல் படங்களின் மூலம் தனித்துவமான கவனத்தைப் பெற்ற இயக்குநர் ஜெயப்பிரகாஷ் ராதாகிருஷ்ணன் மீண்டும் நல்லதொரு கதையுடன் வந்திருக்கிறார்.
ஆணும் பெண்ணும் காதலிப்பதை சமூகம் ஏற்றுக்கொள்வதில் எந்தத் தயக்கமும் காட்டுவதில்லை. ஆனால், காதல் செய்பவர்கள் தன்பாலின ஈர்ப்பாளர்களாக இருந்தால் அதை நம்மால் எந்த விதத்திலும் ஏற்றுக்கொள்ள முடிவதில்லை. காரணம், முதலில் தோன்றும் அருவருப்பு. பின், அந்த இணைக்கு சமூகத்தில் என்ன மதிப்பிருக்கிறது என்கிற எண்ணங்கள். ஆழமாக, நாம் உணர வேண்டிய விஷயம், தன்பாலின ஈர்ப்பாளர்களுக்கும் காதல் உண்டு. வெறும் உடல் தேடல்கள் மட்டுமல்ல; ஒருவருக்கு ஒருவர் மீதான மன நெருக்கமுதான். காதல் என்பது பொதுவுடைமை அத்தேடல்களை சமூகக் கண்ணோட்டத்தில் விரிவாகப் பேசுகிறது.
ஒருவேளை, தன்பாலின ஈர்ப்பாளர்களால் சமூக சீர்கேடு நிகழ்கிறது, அவர்கள் இணைந்து வாழ்ந்தால் நாட்டிற்கு நல்லதா, கேட்டதா; அவர்களால் பிள்ளை பெற்றுக்கொள்ள முடியுமா? என்கிற கேள்விகளால் உன் மனம் தடுமாறினால் அதற்கும் நடிகர் வினீத் கதாபாத்திரத்தின் வசனங்களால் பதில் சொல்லியிருக்கிறார் இயக்குநர்.
நடிகர் கலேஷ் தன்பாலின காதலுக்கு ஆதரவு தெரிவிக்கும்போது, வினீத் அவரிடம் ‘நீ கேயா (gay)’ எனக் கேட்கிறார். உடனே, கலேஷ், ‘ச்சே.. ச்சே.. இல்லை’ என்பார். அந்த, ‘ச்சே.. ச்சே’ ஏன் வருகிறது? என தன்பாலின ஆதரவாளர்களுக்குமே கொஞ்சமாக விலகல் இருக்கத்தான் செய்கிறது என்பதையும் காட்சிப்படுத்தி பல கோணங்களிலிருந்தும் சமூக உரையாடலை நிகழ்த்தியிருக்கின்றனர்.
இப்படத்தில் ஜெயப்பிரகாஷ் ராதாகிருஷ்ணன் நல்ல திரைக்கதையாசிரியர் என்பதை அழுத்தமாக பதிவு செய்திருக்கிறார். உதாரணமாக, ஒரு முக்கியமான காட்சியில் லிஜோ, அனுஷாவை உதட்டுடன் உதடு முத்தமிடுகிறார். பார்க்கும் நமக்கு எந்த விதமான நெருடலும் முகச்சுழிப்பும் ஏற்படாத வகையில் அதற்கு முந்தைய காட்சிகள் தீவிரமாகவும் நேர்த்தியாகவும் எழுதப்பட்டிருக்கின்றன. இந்தக் காட்சியின் மூலல் படம் பேசவந்த விஷயத்தை பேசிவிட்டது என்கிற நிறைவும் ஏற்படுகிறது.
இந்தக் கதையைச் சொல்லவே கதாபாத்திரங்கள் உருவாக்கப்பட்டதுபோல் சில குறைகள் தோன்றின. ஆனால், படத்தை அது பெரிதாக பாதிக்கவும் இல்லை.
நடிகை லிஜோ மோல் சினிமாவில் தனக்கான இடம் என்ன என்பதைக் கண்டறிந்துவிட்டார் என்றே தோன்றுகிறது. முன்னணி நாயகி என்கிற பிம்பத்தை விட்டு கதையின் ஆத்மார்த்தமான கதாபாத்திரங்களை அவர் தேர்வுசெய்வது மிகச்சிறப்பு. காதல் வெளிப்பாட்டிலும், காதலியைவிடாமல் பற்றும் இடங்களிலும் அட்டகாசமான நடிப்பை வழங்கியிருக்கிறார்.
அழுவது மட்டுமல்ல அடம்பிடிப்பதும் காதல்தான் என்பதற்கு இணங்க சில காட்சிகளில் ரோகிணியுடன் அவர் வாதாடும் காட்சிகள் தன்பாலின ஈர்ப்பாளர்களின் உணர்ச்சிகளை அப்படியே திரையில் பார்ப்பதுபோல் இருக்கிறது. இனி லிஜோ இப்படியான கதைகளைத் தேர்ந்தெடுப்பார் என்றால், இந்திய சினிமாவுக்கே ஒரு நல்ல நடிகை என்கிற பெயரைப் பெற்றுத் தருவார்.
படத்தின் இசையமைப்பாளர் கண்ணன் நாராயணன். உண்மையில், தமிழ் சினிமாவுக்கு அற்புதமான வரவு. சிறிய படங்களில் பணியாற்றியதாலோ என்னவோ கண்ணனின் பெயர் பெரிதாகப் பதிவாகவில்லை. தலைக்கூத்தலில் அற்புதமான இசைக்கோர்வைகளை வழங்கியவர் இப்படத்தில் ’கண்கள் தீயாய் மோதும்’ பாடலுக்கு உயிரோட்டமான இசையைக் கொடுத்திருக்கிறார். விடியோ வடிவில் அப்படத்தைப் பார்த்துக்கொண்டே இருக்கலாம். பெரிய பட்ஜெட் என்றில்லாமல் நல்ல கதையம்சமுள்ள படங்கள் கண்ணன் நாராயணனை நோக்கிச் செல்ல வேண்டும்.
படத்தின் ஒளிப்பதிவு, எடிட்டிங் என பிற துறைகளும் தங்களுகான பணிகளைச் சிறப்பாக செய்திருக்கின்றன.
இன்றைய நவீன காலகட்டத்தில் காதல்கள் பல பரிணாமங்களை அடைந்துவிட்டது. ஆனாலும், இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சமூக வலைதளங்களுக்குள் சென்று தன்பாலின ஈர்ப்பாளர்களுக்கான இடம் என்ன எனத் தேடினால், ‘வானவில்’ என்கிற கேலிச்சொல்லே கொட்டிக்கிடக்கிறது. கிண்டல் செய்பவர்கள் யாரும் வானவில்லைப் போல் மனித மனங்களிலும் பல வண்ணங்கள் உண்டு என்பதை அறிய முற்படுவதில்லை.
இந்த உறவுகளைத் தவறான கண்ணோட்டத்தில் பார்ப்பவர்களுக்கு அழகான காட்சிகள் மூலம் இயக்குநர் பதிலளித்திருக்கிறார். வயது வந்தவர்களுக்கான கதையாக இல்லாமல் குடும்பத்துடன் பார்க்கும் அளவிற்கே உருவாகியிருக்கிறது காதல் என்பது பொதுவுடைமை. இங்கு பிறக்கும் எல்லா உயிர்க்கும் பூமி மட்டுமல்ல காதலும் பொதுவுடைமைதான் என்பதை அழுத்தமாக சொன்ன படக்குழுவினருக்கு வாழ்த்துகள்!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.