சின்மயி 
செய்திகள்

சின்மயி மீதான தடையை நீக்குவதில் என்ன சிக்கல்?

சின்மயி மீதான தடை குறித்து...

இணையதளச் செய்திப் பிரிவு

பாடகி சின்மயி மீது விதித்த தடையை நீக்க வேண்டும் என ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

மணிரத்னம் இயக்கிய கன்னத்தில் முத்தமிட்டால் திரைப்படத்தில் சின்மயி குரலில் இடம்பெற்ற, ‘ஒரு தெய்வம் தந்த பூவே’ பாடலை பலராலும் மறக்க முடியாது. அப்பாடல் அவருக்கு பெரிய இடத்தை உருவாக்கிக் கொடுத்தது.

ஏ. ஆர். ரஹ்மான் துவங்கி வைத்த பயணத்தை மிகச்சிறப்பாகவே சின்மயி கொண்டுசென்றார். முக்கியமாக, ஹிந்திலும் நல்ல பாடல்களைப் பாடியிருக்கிறார். குரு படத்தில் ரஹ்மான் இசையமைத்த, ‘தேரெ பினா’ (tere bina) பாடல் சின்மயியை இந்தியளவில் பிரபலமாக்கியது. அப்பாடலில் கசிந்து உருகும் குரலை இன்றும் யாராவது எங்காவது கேட்டுக்கொண்டிருக்கலாம்.

அப்படிப்பட்ட தனித்துவமான குரலால் தமிழ்த் திரையுலகில் பாடகியாகவும் நாயகிகளுக்குக் குரல் கொடுக்கும் டப்பிங் கலைஞராகவும் இருந்த சின்மயிக்கு, ‘மீ டூ’ (me too) விவாகரங்கள் பெரிய அழுத்தத்தைக் கொடுத்தன.

பிரபல பாடலாசிரியர் தன்னிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டார் என சின்மயி தெரிவித்ததும் தமிழகத்தில் அதிர்வலையே ஏற்பட்டது. சின்மயியைத் தொடர்ந்து பல்வேறு துறைகளில் பணிபுரியும் பெண்களும் பாலியல் தொல்லைக்கு ஆளான விஷயங்களைப் பொதுவெளியில் பகிர்ந்தனர்.

சின்மயி

அதேநேரம், மீ டு மூலம் தொடர் குற்றச்சாட்டுகளை முன்வைத்த சின்மயிக்கு துறை ரீதியாகவும் பல சிக்கல்கள் எழுந்தன. மறைமுகமாக, அவருக்கு திரைத்துறையில் வாய்ப்புகள் மறுக்கப்பட்டதுடன் அவரைத் தொடர்புகொள்பவர்களின் படங்களுக்கும் அழுத்தம் உருவானதாகக் கூறப்படுகிறது.

இதனால், கடந்த 7 ஆண்டுகளுக்கும் மேலாக இசை நிகழ்ச்சிகளைத் தவிர்த்து தமிழ்ப் படங்களில் சின்மயி பாடல்களைப் பாடுவதில்லை. குறிப்பாக, 2020-க்கு பிறகு விரல்விட்டு எண்ணக்கூடிய தமிழ்ப் பாடல்களையே சின்மயி பாடியிருக்கிறார்.

சரி, பாடல்கள் பாட முடியவில்லை; நடிகைகளுக்கு டப்பிங் குரல் கொடுக்கலாம் எனச் சென்றாலும், அங்கும் சின்மயிக்கு பிரச்னைகள் எழுந்துள்ளன. தனக்குக் கிடைக்க வேண்டிய வாய்ப்புகளுக்கு எதிராக சிலர் இருப்பதை உணர்ந்தவர், நீதிமன்றத்தை நாடி அன்றைய டப்பிங் யூனியன் தலைவரான நடிகர் ராதா ரவி மற்றும் பொறுப்பாளர்கள் மீது குற்றம்சாட்டினார். இதனால், ஆத்திரமடைந்த ராதா ரவி, சின்மயி ஆண்டு சந்தா செலுத்தவில்லை எனக் காரணம் கூறி அவரின் உறுப்பினர் அட்டையை ரத்து செய்ததாகக் கூறப்படுகிறது. சின்மயியால் கட்ட முடியாத சந்தா தொகை எவ்வளவு? ரூ. 250!

அந்த ரூ. 250-க்காக இவ்வளவு திறமையான பாடகியை யாரும் பழிவாங்க மாட்டார்களே என்பதுதான் ரசிகர்களின் கேள்வி. இந்தத் தொகையை உறுப்பினர் கட்ட மறந்தால், நிர்வாகம் என்ன செய்ய வேண்டும்? அழைத்து விஷயத்தைச் சொல்லத்தானே வேண்டும்? ஆனால், அதிரடியாக யூனியனிலிருந்து நீக்குவது நியாயமானதா?

சின்மயி தரப்பிலிருந்து அழுத்தமான கேள்வி ஒன்றையும் முன்வைக்கின்றனர். நடிகர் விஜய், நடிகை ஸ்ருதி ஹாசன், கார்த்தி உள்ளிட்ட பிரபலங்களுக்கு டப்பிங் யூனியனே சந்தா கட்டும்போது சின்மயிக்கு மட்டும் ஏன் செலுத்தவில்லை என்கின்றனர்.

இதுகுறித்து நடிகர் ராதா ரவியிடம் கேட்டபோது, “டப்பிங் யூனியன் பற்றி யாருக்கும் சரியாகத் தெரியாது. அதைப் பேச ஆரம்பித்தால் ஓராண்டுக்கு மேல் ஆகும்” என முடித்துவிட்டார். ஆனால், சின்மயி திரைப்படங்களில் பாடக்கூடாது என்றோ டப்பிங் செய்யக்கூடாது என்றோ அதிகாரப்பூர்வமான தடையை தொடர்புடைய சங்கங்கள் அறிவிக்கவில்லை. மறைமுகமாகவே இந்தத் தடை.

ஏ. ஆர். ரஹ்மானால் 2000-களின் தலைமுறைக்கு அறிமுகமான சின்மயி தற்போது 25 ஆண்டுகள் கழித்து மீண்டும், ‘முத்த மழை’ மூலம் புதிய தலைமுறை ரசிகர்களையும் உருக வைத்திருக்கிறார். முத்த மழை பாடலை தமிழில் பாடகி தீ பாட, தெலுங்கு, ஹிந்தியில் சின்மயி குரல் கொடுத்துள்ளார்.

ஆச்சரியமாக, தக் லைஃப் இசைவெளியீட்டு விழாவில் தீயால் கலந்துகொள்ள முடியாததால் அப்பாடலை சின்மயி பாட, அவரின் குரல் காட்டுத்தீ போல இணையத்தில் பரவியது. இதுவரை, யூடியூபில் சின்மயி பாடிய அந்த விடியோ 75 லட்சம் பார்வைகளைக் கடந்துள்ளது.

திரும்பத் திரும்ப இப்பாடலைக் கேட்டுக்கொண்டிருக்கும் ரசிகர்கள், இப்படியொரு அற்புதமான குரலை நியாயமற்ற அரசியல் காரணங்களுக்காகக் கட்டிப்போட்டிருப்பது தமிழ் சினிமாவுக்கு அவமானகரமானது எனத் தங்களின் ஆதரவை சின்மயிக்குத் தெரிவிப்பதுடன் அவர் மீதான தடைகளையும் நீக்க வேண்டுமென கோரிக்கை வைத்துள்ளனர். தொடர்புடையவர்கள் கேட்பார்களா?

நடிகர் கமல்ஹாசன், உதயநிதி ஸ்டாலின் என தக் லைஃப் படத்தில் இருக்கும் ஆளும் அரசுடன் தொடர்புடையவர்கள் நினைத்தால் பிரச்னை தீராத என்ன?

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஆண்டிபட்டி அரசு நிகழ்ச்சியில் திமுக எம்.பி. - எம்.எல்.ஏ. வாக்குவாதம்

தமிழக வாக்காளர்களாக லட்சக்கணக்கான வெளிமாநிலத்தவர்: அமைச்சர் துரைமுருகன் கவலை

இதற்குமேல் என்ன கேட்பது..!? தேசிய விருது குறித்து அட்லீ!

தீராத விளையாட்டுப் பிள்ளை... 9 வது திருமணத்தில் மாட்டிக் கொண்ட பெண்!

ஜார்க்கண்ட் அமைச்சர் ராம்தாஸ் சோரனுக்கு மூளையில் காயம்: தில்லி மருத்துவமனைக்கு மாற்றம்!

SCROLL FOR NEXT