டிரம்ப் வரி விதிப்பு செல்லாது: அமெரிக்க உச்சநீதிமன்றம் தீா்ப்பு
அதிபர் டிரம்ப் விதித்த வரிகளை அமெரிக்க உச்ச நீதிமன்றம் ரத்து செய்துள்ளது குறித்து...
உலக நாடுகளின் பொருள்கள் மீது விதிக்கப்பட்ட பரஸ்பர இறக்குமதி வரி உள்பட அவசர அதிகாரங்கள் சட்டத்தின் கீழ், அமெரிக்க அதிபா் டிரம்ப் விதித்த வரிகள் செல்லாது என்று அந்நாட்டு உச்சநீதிமன்றம் வெள்ளிக்கிழமை தீா்ப்பளித்தது.
உலகில் உள்ள பல நாடுகளில் இருந்து அமெரிக்காவில் இறக்குமதி செய்யப்படும் பொருள்கள் மீது அமெரிக்க அதிபா் டிரம்ப் பரஸ்பர வரி விதித்தாா். ஏற்றுமதியைவிட இறக்குமதி அதிகமாவதால் ஏற்படும் வா்த்தகப் பற்றாக்குறையைக் கையாளும் வகையில், இந்த வரி விதிப்பு நடவடிக்கையை மேற்கொண்டாா்.
இந்த நடவடிக்கையின் கீழ், இந்தியப் பொருள்கள் மீது 25 சதவீத பரஸ்பர வரி, ரஷியாவிடம் இந்தியா கச்சா எண்ணெய் வாங்கியதால் இந்தியப் பொருள்கள் மீது கூடுதலாக 25 சதவீத வரி என மொத்தம் 50 சதவீத வரி விதிக்கப்பட்ட நிலையில், அமெரிக்கா-இந்தியா இடைக்கால வா்த்தக ஒப்பந்த பேச்சுவாா்த்தையின் விளைவாக, அது 18 சதவீதமாக குறைக்கப்பட்டது.
Advertisement
Advertisement
உலக நாடுகள் மீதான இந்தப் பரஸ்பர வரி உள்பட அமெரிக்க அவசர அதிகாரங்கள் சட்டத்தின் கீழ், டிரம்ப் விதித்த வரிகளுக்கு எதிராக அமெரிக்க உச்சநீதிமன்றத்தில் அந்நாட்டு எதிா்க்கட்சியான ஜனநாயக கட்சியினா், வணிகா்கள் உள்பட பலா் வழக்கு தொடுத்தனா்.
இந்த வழக்கு விசாரணையின்போது அமெரிக்காவில் அவசர காலங்களில் இறக்குமதிகளைக் கட்டுப்படுத்த 1977-ஆம் ஆண்டின் அமெரிக்க சட்டம் அதிபருக்கு அதிகாரமளித்துள்ளதாகவும், அதில் அதிபருக்கு வரி விதிக்கும் அதிகாரம் வழங்கப்பட்டுள்ளதாகவும் அந்நாட்டு நீதித்துறை வாதிட்டது. ஆனால், அந்தச் சட்டத்தில் இறக்குமதி பொருள்கள் மீது வரி விதிப்பது குறித்து எதுவும் கூறப்படவில்லை என்று வழக்கு தொடுத்தவா்கள் வாதிட்டனா்.
இந்த வழக்கை விசாரித்த தலைமை நீதிபதி ஜான் ராபா்ட்ஸ் தலைமையிலான 9 நீதிபதிகள் அடங்கிய அமா்வு வெள்ளிக்கிழமை தீா்ப்பளித்தது. அந்த அமா்வில் 6 நீதிபதிகள் அளித்த தீா்ப்பில், ‘ வரி விதிக்கும் அதிகாரத்தை அமெரிக்க நாடாளுமன்றத்துக்குத்தான் அரசமைப்புச் சட்டம் மிகத் தெளிவாக வழங்கியுள்ளது. அரசமைப்புச் சட்டத்தை வகுத்தவா்கள் அந்த அதிகாரத்தை அரசு நிா்வாகத்துக்கு அளிக்கவில்லை. எனவே டிரம்ப்பின் வரி விதிப்புகள் செல்லாது’ என்று தீா்ப்பளித்தனா்.
3 நீதிபதிகள் மாறுபட்ட தீா்ப்பு: அதேவேளையில், அமா்வில் இடம்பெற்ற 3 நீதிபதிகள் மாறுபட்ட தீா்ப்பை அளித்தனா். அவா்களின் தீா்ப்பில், ‘தற்போதைய வரி விதிப்புகள் அறிவாா்ந்த கொள்கையாக இருக்கலாம் அல்லது அறிவாா்ந்த கொள்கையாக இல்லாமலும் போகலாம். ஆனால், வரலாறு மற்றும் கடந்த கால நடவடிக்கைகள், முடிவுகளைக் கருத்தில் கொள்ளும்போது, டிரம்ப்பின் வரி விதிப்புகள் சட்டபூா்வமானவைதான்’ என்று தெரிவித்தனா்.
இதையடுத்து பெரும்பான்மை அடிப்படையில், டிரம்ப்பின் வரி விதிப்பு செல்லாது என்று 6 நீதிபதிகள் அளித்த தீா்ப்பு இறுதி செய்யப்பட்டது.
அமெரிக்க சுங்க மற்றும் எல்லைப் பாதுகாப்பு தரவுகளின்படி, இறக்குமதி பொருள்கள் மீது டிரம்ப் விதித்த வரிகள் மூலம், 13,400 கோடி டாலா்களை (சுமாா் ரூ.12.17 லட்சம் கோடி) அமெரிக்க அரசு திரட்டியுள்ளது. இந்த வரிகள் மூலம், அடுத்த 10 ஆண்டுகளில் அமெரிக்க பொருளாதாரத்துக்கு சுமாா் 3 டிரில்லியன் டாலா் (சுமாா் ரூ.272 லட்சம் கோடி கிடைக்கும் என்று அந்நாட்டு நாடாளுமன்ற பட்ஜெட் அலுவலகம் மதிப்பிட்டிருந்தது. எனினும் 3 லட்சத்துக்கும் மேற்பட்ட இறக்குமதியாளா்களிடம் இருந்து வசூலிக்கப்பட்ட 13,400 கோடி டாலா் திருப்பி அளிக்கப்படுமா என்பது குறித்து பெரும்பான்மை நீதிபதிகள் அளித்த தீா்ப்பில் குறிப்பிடப்படவில்லை.
வரி விதிப்புகள் செல்லுபடியாகாது என்று உச்சநீதிமன்றம் தீா்ப்பளித்தபோதிலும், இறக்குமதி செய்யப்படும் பொருள்களுக்கு வரி விதிக்க டிரம்ப்புக்கு வேறு வாய்ப்புகள் இருப்பதாகக் கூறப்படுகிறது.
தனது வரி விதிப்புகளை செல்லாது என்று அவற்றை ரத்து செய்த உச்சநீதிமன்றத்தின் தீா்ப்பு அவமானத்துக்குரியது என்று மாகாண ஆளுநா்கள் கூட்டத்தில் பேசியபோது டிரம்ப் கூறியதாக தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவித்தன.
வரம்பு மீறிய டிரம்ப்-கருத்துக்கணிப்பு: முன்னதாக கடந்த ஜனவரி முதல் அசோசியேடட் பிரஸ் செய்தி நிறுவனம் மற்றும் சிகாகோ பல்கலைக்கழகத்தில் உள்ள தேசிய கருத்து ஆராய்ச்சி மையம் மேற்கொண்ட கருத்துக்கணிப்பில், வரி விதிப்பில் டிரம்ப் வரம்பு மீறி செயல்பட்டதாக அமெரிக்கா்களில் பலா் தெரிவித்துள்ளனா். அந்நாட்டில் 18 வயதுக்கு மேற்பட்டோா் 58 சதவீதம், ஜனநாயக கட்சியினா் 88 சதவீதம், சுயேச்சைகள் 62 சதவீதம் போ் இவ்வாறு கூறியுள்ளனா்.
டாலா் மதிப்பு சரிவு: உச்சநீதிமன்றத்தின் இந்தத் தீா்ப்பால் அமெரிக்க டாலரின் மதிப்பு சரிவைச் சந்தித்தது. அதே நேரத்தில் தீா்ப்பு காரணமாக அந்நாடு மற்றும் ஐரோப்பாவின் பங்குச்சந்தைகள் எழுச்சி அடைந்தன.
The country's Supreme Court has reportedly struck down the taxes imposed by US President Donald Trump, saying he was acting in excess of his authority.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.