நடிகர் துல்கர் சல்மான் நடிப்பில் உருவான காந்தா திரைப்படம் இன்று திரையரங்குகளில் வெளியாகியுள்ளது.
1950-களில் கதை நடக்கிறது. அன்றைய நிலவரப்படி தமிழ் சினிமாவின் முக்கிய இயக்குநராக இருப்பவர் ஏ. பி. கோதண்டராமன் (சமுத்திரக்கனி). அவர் நாயகனாக அறிமுகப்படுத்திய டி.கே. மகாதேவன் (துல்கர் சல்மான்) உச்ச நடிகராகவும் ரசிகர்களின் கடவுளாகவும் இருக்கிறார்.
ஒருபுறம் அய்யாவான சமுத்திரக்கனி கதையும், இயக்கமும்தான் ஒரு திரைப்படத்தின் ஆன்மா என நம்புகிறார். இன்னொருபுறம் கூட்டம் தன்னைப் பார்க்கத்தானே கூடுகிறது என துல்கர் சல்மான் ஈகோவை சீண்டுகிறார்.
இவர்கள் கூட்டணியில் சாந்தா என்கிற திரைப்படம் துவங்கப்பட்டு பாதியில் நிற்கிறது. அதனைத் தயாரித்த மாடர்ன் ஸ்டூடியோஸ் நிறுவனம் பேச்சுவார்த்தை நடத்தி இருவரையும் மீண்டும் அழைத்து வருகிறது. நிறுத்தப்பட்ட சாந்தா மீண்டும் துவங்கியதா? தந்தை - மகன் உறவிலிருந்த அய்யாவுக்கும் மகாதேவனுக்கும் இடையே என்ன பிரச்னை? தனிமனித ஆணவங்கள் கலைஞர்களின் வாழ்க்கையை எப்படியெல்லாம் மாற்றுகிறது? என்கிற கதையே காந்தா.
இயக்குநர் செல்வணி செல்வராஜ் தன் அறிமுக திரைப்படத்திலேயே அழுத்தமான கதையைச் சொல்ல வேண்டுமென அதற்கென திரைக்கதையில் சில முயற்சிகளைச் செய்திருக்கிறார். திரைப்படத்திற்குள் ஒரு திரைப்படம். இரண்டு படங்களும் ஒரே விஷயத்தைத் தொட்டுச் செல்லும் ஒழுங்கு என கிளைமேக்ஸ் வரை சொல்லப்போகிற கதையை எப்படியெல்லாம் சொல்லலாம் என நிறைய மெனக்கெட்டிருக்கிறார்கள்.
முக்கியமாக, படத்தின் ஆரம்ப காட்சிகள் நம்மை அந்தக் காலத்திற்கே அழைத்துச் செல்கின்றன. அப்போதே, ஒரே ஸ்டூடியோக்குள் எப்படி ஒட்டுமொத்த படமும் எடுக்கப்பட்டது என்பதையும் சினிமா கலைஞர்களின் உழைப்பும் திறனும் எப்படியிருந்தது என்பதையும் காட்சிகளின் வேகத்தில் பதிவு செய்திருக்கிறார்.
ஒரு காட்சியில் துல்கர் சல்மான் ஒளிப்பதிவாளரிடம், ‘கேமராவை என் வலது கன்னம் தெரியும் கோணத்தில் வைங்க, என் ரசிகர்களுக்குப் பிடிக்கும்’ என்கிறார். அடுத்த காட்சியில் இடது கன்னத்திற்கு இயக்குநர் ஒரு வேலை வைத்திருக்கிறார். இப்படி உருவாக்க ரீதியாக சில தருணங்கள் ரசிக்க வைக்கின்றன. குறிப்பாக, சாந்தா கதையை எடுக்கும்போது பிளாக் அண்ட் ஒயிட் காட்சிகளில் துல்கரும் பாக்யஸ்ரீ போர்ஸும் போட்டி போட்டு நடித்தது பார்க்க நன்றாகவே இருந்தது.
ஆனால், இரு கலைஞர்களின் ஆணவமும் குணங்களும் மோதிக்கொள்ளும் கதையின் இறுதியில், சரி... இதற்காகவா இவ்வளவும் சொல்லப்பட்டது என்கிற சோர்வுதான் ஏற்படுகிறது. காரணம், முதல்பாதியின் அழுத்தமான கதை, இரண்டாமபாதியின் கிரைம் திரில்லரில் காணாமல் போகிறது. முக்கியமாக, நடிகர் ராணா டக்குபதியின் கதாபாத்திர வடிவமைப்பு அக்கதையின் பீரியட் தன்மையைக் குலைப்பதுபோல் இருந்தது. இதனால், அழுத்தமாக மாற வேண்டிய இடங்கள் சாதாரணமாக வலுவை இழக்கின்றன.
நடிகர் துல்கர் சல்மானுக்கு பெயர் சொல்லும் திரைப்படமாகவே காந்தா அமைந்திருக்கிறது. இதற்கு முன்பே, நடிகையர் திலகம் திரைப்படத்தில் ஜெமினி கணேசனாக நடித்திருந்தாலும் இதில் அன்றைய கால சூப்பர் ஸ்டாரின் உடல்மொழியையும், வசன உச்சரிப்பையும் அசத்தலாகக் கொண்டுவந்திருக்கிறார். வெள்ளை வேஷ்டியில் துல்கர் நடந்துவரும் காட்சிகள் விண்டேஜ் தோற்றத்தைத் தருகின்றன. சமுத்திரக்கனியை பழிவாங்க சாந்தா கதையை மாற்றும்போது தனக்குள் எழுகிற ஈகோ திருப்தியை கச்சிதமாக வெளிப்படுத்துகிறார். படத்தில் நடிப்புச் சக்ரவர்த்தி என்றே அழைக்கப்படும் துல்கர், அதற்குத் தகுந்த ஆளாகவே மாறிக்கொண்டிருக்கிறார்.
ஆச்சரியமாக, நடிகை பாக்யஸ்ரீ போர்ஸ் அட்டகாசமான நடிப்பைக் கொடுத்திருக்கிறார். சாந்தாவாக திரையில் மிளிர்கிறார். அழகுடன் கூடிய நல்ல நடிப்பு திறன் இருக்கிறது. பிளாக் அண்ட் ஒயிட் குளோஸ் அப் ஷாட்டுகளிலும் சரி, சாந்தாவுக்கு வெளியேயான காட்சிகளும் சரி பாக்யஸ்ரீயைப் பார்த்துக்கொண்டே இருக்கலாம். இப்படத்தில் குமாரியாக தன் தமிழ் சினிமா பயணத்தைப் பேரழகுடன் ஆரம்பித்திருக்கிறார். வாழ்த்துகள்.
நடிகர் சமுத்திரக்கனியின் நடிப்பு பயணத்தில் அவரின் மைல்கல் படமாகவே இது அமைந்துவிட்டது. அய்யாவாக ஒவ்வொரு ஃபிரேமிலும் மிரட்டுகிறார். இவர் நடந்துவரும் காட்சிகளும் துல்கருக்கு முன் நின்று வசனம் பேசும் இடங்களும் கைதட்டல் பெறும் அளவிற்கு இருக்கின்றன. ”ஆடியன்ஸ்... நீ சொல்ற ஆடியன்ஸ் இன்னும் 50 வருசம் கழிச்சு இருக்க மாட்டான். ஆனா, இந்தப்படம் இருக்கும்” என அவர் சொன்னதும் கிளாப்ஸ்தான்.
டானியின் ஒளிப்பதிவு கலை இயக்குநர் ராமலிங்கம் ஆகியோரின் பணிகள் 1950-களை நினைவுக்குக் கொண்டுவருவதுபோல் தத்ரூபமாக இருக்கின்றன. இருவரின் பங்களிப்பும் படத்தின் தரத்தையும் அதிகரிக்கச் செய்திருக்கிறது.
தொழில்நுட்ப குழுவின் உழைப்பு நன்றாக இருந்தாலும் இரண்டாம்பாதியில் ஏற்பட்ட சில சொதப்பல் திரை எழுத்தால் காந்தா தன் முழுமையை நோக்கிச் செல்லவில்லை. அய்யா, மகாதேவன், குமாரி இவர்கள் மூவரைச் சுற்றியே கதை நிகழ்கிறது. கதைப்படி மூவரும் அனாதைகளாகவே வளர்ந்தவர்கள். கலைத்தாய் ஒன்றே கதி. மேன்மையான கலைத்திறன் இருந்தாலும் எளிய மனித குணங்களால் சுழல்கிறார்கள்.
நாயகி குமாரியை சிலர் ஒருமையில் பேசும்போது இந்த இரண்டு ஆண்களும் சண்டைக்குச் செல்கின்றனர். ஆனால், தங்களின் சொந்த வாழ்க்கையில் அப்பெண் வரும்போது என்னவாகிறார்கள் என்பதை மனிதனுக்கே உண்டான சில குறை குணங்களைச் சுட்டிக்காட்டி மேன்மையும் கீழ்மையும் சந்திக்கும் புள்ளி காட்டப்படுகிறது. இரு ஆளுமைகளின் ஈகோ மோதல்கள் பெரிய உச்சத்தில் திளைத்தாலும் நம்மை நினைத்து வெட்கப்படும் தருணம் காந்தாவில் நிகழ்வில்லை. மனிதன் எப்போதும் கீழ்மைகளால் நிறைந்தவன் தானே.. அதற்கு மேல் என்ன? என்கிற கேள்விக்கும் இப்படத்தில் பதில் இல்லை.
இதையும் படிக்க: தமிழில் ஓர் இடத்தைப் பிடிப்பாரா பாக்யஸ்ரீ போர்ஸ்?
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.