இசையமைப்பாளர் தேவா  
செய்திகள்

கோலிவுட் ஸ்டூடியோ: இசைக்கு ஏன் காப்புரிமை கேட்பதில்லை? - தேவா!

இசைக்கு ஏன் காப்புரிமை கேட்பதில்லை என்பது குறித்து இசையமைப்பாளர் தேவா விளக்கம் அளித்துள்ளார்.

டெல்டா அசோக்

இசைக்கு ஏன் காப்புரிமை கேட்பதில்லை என்பது குறித்து இசையமைப்பாளர் தேவா விளக்கம் அளித்துள்ளார்.

அண்மையில் நடிகர் பிரதீப் ரங்கநாதன் நடித்த 'டியூட்' படத்தில் இளையராஜாவின் இரண்டு பாடல்கள் அனுமதியின்றிப் பயன்படுத்தப்பட்டிருந்தன.

கடந்த மாத இறுதியில் சென்னை உயர் நீதிமன்றத்தில் சோனி நிறுவனத்துக்கு எதிரான வழக்கு விசாரணையின்போது, இளையராஜா தரப்பு வழக்குரைஞர் இதுதொடர்பாக முறையிட்டிருந்தார். அப்போது நீதிபதிகள், 'உங்களின் இந்தப் புகார் குறித்து தனியாக வழக்குத் தொடரலாம்' எனக் குறிப்பிட்டிருந்தனர்.

2017-ஆம் ஆண்டு பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியத்துக்கு, 'நான் இசையமைத்த பாடல்களை எந்த முன் அனுமதியும் இன்றி மேடைகளில் பாடக் கூடாது' என இளையராஜா வழக்குரைஞர் மூலமாக நோட்டீஸ் அனுப்பினார். அப்போது முதல் தொடர்ந்து இந்தக் காப்புரிமை தொடர்பான விவாதங்கள் நடந்துகொண்டே இருக்கின்றன.

இந்த நிலையில், கரூரில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற இசையமைப்பாளர் தேவாவிடம், ''நீங்கள் இசையமைத்த பாடல்களுக்கு ஏன் காப்புரிமை கேட்பதில்லை?'' எனக் கேள்வி எழுப்பப்பட்டது.

இதற்கு தேவா, ''காப்புரிமை கேட்பதில்லை. அப்படியே கேட்டாலும் அது எங்கேயோ சென்றுதான் முடிகிறது. ஆனால், நான் காப்புரிமை கேட்கக் கூடாது என முடிவு செய்ததற்குக் காரணம் இருக்கிறது. ஒரு உதாரணம் மட்டும் சொல்கிறேன். 1990-களில் நான் இசையமைத்த நிறையப் பாடல்கள் இப்போது வைரலாகின்றன. 1992-இல் இசையமைத்த 'கரு கரு கருப்பாயி' பாடல் மீண்டும் ஒரு படத்தில் பயன்படுத்தப்பட்டு வைரலானது.

அண்மையில் ஒரு பொருள் வாங்குவதற்காக மாலுக்குச் சென்றிருந்தேன். அப்போது சிறுவன் ஒருவன் அவனுடைய அப்பாவுடன் வந்திருந்தான். அந்தச் சிறுவனின் தந்தை என்னைக் காண்பித்து, 'உனக்குப் பிடிச்ச கரு கரு கருப்பாயி பாட்டுக்கு மியூசிக் போட்டது இவங்கதான்' னு என்னை அறிமுகப்படுத்தினார். அப்போது அந்தச் சிறுவன், 'அப்படியா!' என்றவன், 'சூப்பர் அங்கிள்' என எனக்குக் கைக்கொடுத்தான்.

'நான் அங்கிள் இல்லடா ... தாத்தா!' எனக் கூறி அவனிடம் பேசினேன். நான் எப்போதோ இசையமைத்த ஒரு பாடல் இந்தத் தலைமுறைக்கும் சென்று சேர்கிறது. அதுவும் நான்தான் இசையமைப்பாளர் என்பதும் தெரிகிறது. இந்தத் திருப்தி போதும்'' என்றார் தேவா.

ரஜினிகாந்த்துக்கு நடிப்பு கற்றுக்கொடுத்த ஆசிரியர் மறைவு!

நடிகர் ரஜினிகாந்துக்கு திரைப்படப் பயிற்சிக் கல்லூரியில் நடிப்பு கற்றுக் கொடுத்த ஆசிரியர் கே.எஸ். நாராயணசாமி மறைவுற்றார். இவரது மறைவுக்கு நேரில் சென்றதுடன், ஒரு மணிநேரம் அங்கே இருந்து, அவரின் குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறியுள்ளார் ரஜினிகாந்த்.

தென்னிந்தியத் திரைப்பட வர்த்தக சபை சார்பில் நடத்தப்பட்ட திரைப்படப் பயிற்சிக் கல்லூரியில் ஆசிரியராக இருந்துள்ளார் கே.எஸ். நாராயணசாமி என்கிற கோபாலி. 92 வயதான அவர் சென்னை மந்தைவெளியில் வசித்துவந்த நிலையில், நவம்பர் 17-ஆம் தேதி காலமானார்.

கே.எஸ். நாராயணசாமி.

அமிதாப்பச்சன், நாசர், சிரஞ்சீவி, ராதாரவி உள்ளிட்டோருக்கும் ஆக்டிங் மாஸ்டராக கோபாலி இருந்துள்ளார். அவர் சில இயக்குநர்களையும் உருவாக்கியிருக்கிறார். திரைப்படப் பயிற்சிக் கல்லூரியில் ரஜினிகாந்த் படித்துக் கொண்டிருந்த காலத்தில் அங்கு வந்த இயக்குநர் கே.பாலசந்தரிடம் ரஜினிகாந்த்தை தனிப்பட்ட முறையில் அறிமுகப்படுத்தியவர் கோபாலி.

புணேயிலுள்ள 'நேஷனல் ஸ்கூல் ஆஃப் டிராமா'வில் முதல் மாணவராகத் திகழ்ந்தவர் நாராயணசாமி. மேலும் இவர் இந்தியன் எக்ஸ்பிரஸ் தளத்தில் சினிமா விமர்சனங்கள் எழுதியிருக்கிறார். தூர்தர்ஷனிலும் பணிபுரிந்துள்ளார்.

டயரி மில்க் விளம்பரம் டு டோலிவுட் 'காந்தா' பாக்யஸ்ரீ!

துல்கர் சல்மானின் 'காந்தா' திரையரங்குகளில் வெளியாகியிருக்கிறது. துல்கர் சல்மான், சமுத்திரகனி, ராணா, பாக்யஸ்ரீ போர்ஸ், பிஜேஷ், ரவீந்திர விஜய் எனப் படத்தில் நடித்த அனைவரும் தங்களின் அசாத்திய நடிப்புக்காகப் பெரும் பாராட்டுகளை அள்ளி வருகின்றனர். முக்கியமாக, 1950-களின் சினிமா பற்றிய இந்தச் சினிமாவுக்குத் தேவைப்

படும் மிகை நடிப்பையும் துல்கர் சல்மான், பாக்ய ஸ்ரீ போர்ஸ் கச்சிதமாக வெளிப்படுத்தி அசத்தியிருக்கிறார்கள்.

எப்போதும், தென்னிந்திய சினிமாவுக்கு டோலிவுட்தான் பல கதாநாயகிகளையும் அறிமுகப்படுத்தும். அப்படி பாக்யஸ்ரீயையும் கதாநாயகியாக அறிமுகப்படுத்தியதும் டோலிவுட்தான். டோலிவுட்டில் பிரேக் கிடைத்த பல நடிகைகளும் அடுத்தடுத்து தமிழ், மலையாளம், ஹிந்தி என ரவுண்ட் வருவார்கள். அப்படி டோலிவுட்டில் அறிமுகமான பாக்யஸ்ரீ போர்ஸ் தற்போது புதிய சென்சேஷனாக உருவெடுத்து நிற்கிறார்.

'காந்தா' பாக்யஸ்ரீ

'காந்தா'தான் பாக்யஸ்ரீயின் முதல் தமிழ்த் திரைப்படம். துல்கர் சல்மான், சமுத்திரகனி, ராணா ஆகியோர் நடிக்கும் படம், நம்முடைய முதல் தமிழ் திரைப்படம் எனக் கவனமாக குமாரி கதாபாத்திரத்துக்கு உடல்மொழி, பாவனை என அத்தனை விஷயங்களிலும் முழுமையாகத் தயாராகி நடிப்பில் தன்னை நிரூபித்திருக்கிறார் பாக்யஸ்ரீ.

அதுவும், குமாரியாக, கோபம், வஞ்சகம், அப்பாவித்தனம், சோகம், பயம் என அத்தனையையும் ஒரே நேரத்தில் அடுத்தடுத்து தனது முகபாவனைகளில் வெளிப்படுத்தும் காட்சிகளில் கைதட்டல்களை அள்ளுகிறார். அந்தக் காட்சியைப் படம்பிடித்து ரசிகர்கள் பலரும், சமூக வலைதளப் பக்கங்களில் பதிவிட்டு அதைப் பெரும் வைரலாக்கி வருகின்றனர்.

'காந்தா' படத்துக்கு நடிகர்கள் தேர்விலும் மிகவும் கவனமாக படக் குழுவினர் செயல்பட்டிருக்கிறார்கள். முன்னணிக் கதாபாத்திரங்களைத் தாண்டி அனைத்து கேரக்டர்களையும் ஆடிஷன் செய்துதான் தேர்வு செய்திருக்கிறார்கள்.

'காந்தா' படத்துக்குள் தான் வந்தது குறித்து பாக்யஸ்ரீ, ''முதலில் என் மீது ராணாவுக்கு நம்பிக்கை இல்லை. சென்னைக்கு நான் 'லுக் டெஸ்ட்'டுக்காக வந்த

போது எப்படி நடிப்பேன் என அவருக்குச் சந்தேகம் இருந்தது. பிறகு இயக்குநர் செல்வா சொன்ன விஷயங்களைக் கேட்டேன். உடை, ஒப்பனையில் குமாரியாக மாறி நின்ற பிறகுதான் என் மீது அனைவருக்கும் நம்பிக்கை வந்தது'' என புரொமோஷன் நிகழ்ச்சி ஒன்றில் தான் படத்திற்குள் வந்த கதையை விவரித்திருந்தார்.

மகராஷ்டிராவில் பிறந்து வளர்ந்த பாக்யஸ்ரீ பிசினஸ் மேனேஜ்மென்ட் படிப்பை முடித்திருக்கிறார். ' நடிப்பின் பக்கம் வருவோம்... நம்முடைய கரியர் சினிமாதான்' என பாக்யஸ்ரீ ஒருபோது நினைத்தது கிடையாதாம். மும்பையில் கல்லூரியில் படித்துக் கொண்டிருக்கும்போது மாடலிங் துறையின் மீது பாக்யஸ்ரீக்கு ஆசை வந்திருக்கிறது.

மாடலிங் துறையிலிருந்தவர் பல விளம்பரப் படங்களிலும் நடித்திருக்கிறார். அதில், டயரி மில்க் சாக்லேட்டுக்காக அவர் நடித்த விளம்பரப்படம் பெரும் வைரல் என்றே சொல்லலாம்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

அவதூறு : வேதனை அளிக்கிறது - கயாடு லோஹர்

SIR பணிகளுக்கு கூடுதல் கால அவகாசம் கிடையாது! - தலைமை தேர்தல் அதிகாரி Archana Patnayak

புதுமுகங்கள் நடிக்கும் யாரு போட்ட கோடு!

செயற்கை நுண்ணறிவின் தந்தை...!

தென்காசி விபத்து: பலி 8 ஆக உயர்வு

SCROLL FOR NEXT