பிக் பாஸ் சீசன் 9 நிகழ்ச்சியில் யூடியூபர்கள் குறித்து திவாகர் பேசிய கருத்துகள் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளன.
யூடியூபில் விடியோ பதிவிட்டு அதன் மூலம் வருவாய் ஈட்டி வருபவர்களை சிறுமைப்படுத்தும் வகையில் திவாகரின் பேச்சு இருந்ததாக பிரபல யூடியூபரும் சக போட்டியாளருமான விக்கல்ஸ் விக்ரம் கருத்து தெரிவித்துள்ளார்.
பிக் பாஸ் சீசன் 9 நிகழ்ச்சி அக். 5ஆம் தேதி முதல் பிரமாண்டமாகத் தொடங்கி நடைபெற்று வருகிறது. இப்போட்டியில் சினிமா மற்றும் சின்ன திரை பிரபலங்களைக் காட்டிலும் சமூக வலைதளப் பிரபலங்கள் அதிகமாகப் பங்கேற்றுள்ளனர்.
இம்முறைப் போட்டியில் வாட்டர் மெலன் ஸ்டார் என அழைக்கப்படும் திவாகர், அரோரா சின்கிளேர், பீட் பாக்ஸ் கலைஞர் எஃப்.ஜே. , விஜே பார்வதி, துஷார், கனி, சின்ன திரை நடிகர் சபரி, இயக்குநர் பிரவீன் காந்தி, நடிகை கெமி, ஆதிரை, ஆடல் - பாடல் கலைஞர் ரம்யா ஜோ, கானா வினோத், வியானா, சின்ன திரை நடிகர் பிரவீன், யூடியூபர் சுபிக்ஷா, அப்சரா, நந்தினி, விக்கல்ஸ் விக்ரம், கம்ருதின், கலையரசன் ஆகியோர் போட்டியாளர்களாகப் பங்கேற்றுள்ளனர்.
இதனிடையே 3ஆம் நாள் பிக் பாஸ் கொடுத்த டாஸ்கின்படி, போட்டியாளர்கள் தாங்கள் கடந்து வந்த பாதையை கதையாக விவரிக்க வேண்டும்.
அதன்படி திவாகர் தனது வாழ்க்கை வரலாறு குறித்துப் பேசும்போது, மற்றவர்களைப் போல தான் யூடியூபில் விடியோ பதிவிட்டு பிரபலமானவன் அல்ல என்றும், நடிப்புத் திறமையால் பிரபலமடைந்துள்ளதாகவும் குறிப்பிட்டார்.
தன்னை வைத்து யூடியூபில் பலர் விடியோ பதிவிட்டு அதன் மூலம் வருவாய் பெற்றதாகவும், ஆனால், அவர்கள் எதிர்மறையான பிம்பத்தையே தனக்கு உருவாக்கிக் கொடுத்துவிட்டதாகவும் குற்றம் சாட்டினார்.
உருவ கேலி தொடங்கி தனிப்பட்ட வாழ்க்கை வரை யூடியூபில் பலர் தன்னை விமர்சித்ததாகவும் திவாகர் குறிப்பிட்டு தனது வாழ்க்கை வரலாறு குறித்துப் பேசியிருந்தார். அவரின் கடந்த காலம் மிகவும் மோசமான சூழலைச் சந்தித்துள்ளதை உணர்ந்த சக போட்டியாளர்கள் அவர் கதை கூறி முடித்ததும் அவரை வெகுவாகப் பாராட்டினர்.
எனினும் விக்கல்ஸ் விக்ரம் அதிருப்தியுடனே இருந்துள்ளார். யூடியூப் குறித்து சிறுமைப்படுத்தும் வகையில் பேசியிருக்கக் கூடாது என்றும், இதனை ஏற்றுக்கொள்ள முடியாது எனவும் திவாகரிடம் அவர் நேரடியாகக் கூறினார். இதற்கு திவாகர் மறுப்பு தெரிவித்து, தன்னுடைய அனுபவங்களையே பகிர்ந்தாதாகவும், மற்றவர்கள் இதனால் பாதிக்கப்பட்டால் அதற்கு தான் பொறுப்பில்லை எனவும் திவாகர் பதிலளித்தார்.
திவாகர் - விக்கல்ஸ் விக்ரம் இடையிலான இந்த வாக்குவாதத்தில், சபரி, எஃ.ஜே., போன்றோர் சமாதனம் செய்து அனுப்பி வைத்தனர். யூடியூபர்கள் குறித்து திவாகர் பேசிய கருத்துகள் தனிப்பட்ட முறையில் நியாயமானதாக இருந்தாலும், பொதுவெளியில் பேசும்போது பொறுப்புடன் பேச வேண்டும் என ரசிகர்கள் பலர் கருத்துகளைப் பதிவிட்டு வருகின்றனர்.
இதையும் படிக்க | கொலை மிரட்டல் விடுத்த எஃப்.ஜே.! பிக் பாஸிடம் கதறிய திவாகர்!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.