இயக்குநர் மாரி செல்வராஜ் தனது படங்களில் மஞ்சணத்தி என்ற பெயரை அதிகமாகப் பயன்படுத்துவது குறித்து பேசியுள்ளார்.
துருவ் விக்ரம், அனுபமா நடித்துள்ள பைசன் காளமாடன் படம் வரும் அக்.17ஆம் தேதி வெளியாகவிருக்கிறது.
இயக்குநர் மாரி செல்வராஜ் தனது படங்களில் மஞ்சணத்தி வரத்தைகளை அதிகமாக பயன்படுத்துவார். அதன் பெயரில் ஒரு பூவும் இருக்கிறது.
கர்ணன் படத்திலும் இந்த வார்த்தையைப் பயன்படுத்தி இருப்பார். தற்போது, இவர் இயக்கியுள்ள பைசன் படத்தில் தீக்கொளுத்தி எனும் பாடலை அவரே எழுதி இருக்கிறார்.
அந்தப் பாடலில் மஞ்சணத்தி என்ற வார்த்தையும் வரும். இந்நிலையில், நேர்காணல் ஒன்றில் இது குறித்து அவர் பேசியதாவது:
மஞ்சணத்தி எனும் பேய்...
எங்களது ஊரில் மஞ்சணத்தி என்றொரு மரம் இருக்கிறது. நாங்கள் ஆடு மேய்க்க போகும்போது அந்த மரத்தின் பழங்களை சாப்பிடுவோம். அந்த மரம் எல்லா இடங்களிலும் இருக்காது. சில இடங்களில் மட்டுமே இருக்கும்.
சிலர் அந்த மரங்களுக்கு துணியைக் கட்டி வைத்து விடுவார்கள். அதில் மஞ்சணத்தி என்ற தெய்வம் இருப்பதால் சிறுவர்களை அதில் ஏற வேண்டாம் எனக் கூறுவார்கள்.
இதுபற்றி எனது அம்மாவிடம் கேட்கும்போது அவர் ஒரு பெண்ணின் கதையைக் கூறினார். அந்த உண்மைக் கதையில் எனது கற்பனையில் அந்தப் பெண் உருவம் எனக்குள் பதிந்துவிட்டது. இருப்பினும் அவளை என்னாள் வரையமுடியவில்லை.
உணர்ச்சிகளின் குவியல்...
சிறு வயதில் தனியாக இருக்கும்போது மஞ்சணத்தி குறித்த பயம் இருந்திருக்கிறது. எனக்கு உதவிய பெண்கள், என்னை அடிக்க வந்த பெண்கள், நான் காதலித்த பெண்களை எல்லாம் அவளாக நினைத்திருக்கிறேன்.
இப்படி எனக்குள் எல்லாமாகவும் மஞ்சணத்தி இருக்கிறாள். எனது படங்களில் அந்தப் பெயர் எப்போதுமே இருக்கும். பைசனில் காதல், பிரிவுகளில் பயன்படுத்தி இருக்கிறேன்.
எனக்குள் ஏற்படும் பயம், வியப்பு, சோகம், அதிர்வு என உச்சபட்ச உணர்ச்சிகளில் இருக்கும்போது அந்த மஞ்சணத்தி பேய் எனக்கு ஞாபகத்துக்கு வரும் என்றார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.