அறிமுக திரைப்படத்திலேயே ரூ. 100 கோடியை வசூலுத்த இயக்குநர்கள்.
திரைத்துறையில் ஏகப்பட்ட கனவுகளுடன் பல்லாயிரம் பேர் உள்ளனர். அதில் பலருக்கு வாய்ப்புகளே கிடைப்பதில்லை. கிடைக்கப் பெற்றவர்களும் சரியாக பயன்படுத்துகிறார்களா என்றால் அந்த விகிதமும் குறைவுதான்.
இன்றைய நிலவரப்படி தமிழ் சினிமாவிலேயே 5000க்கும் அதிகமான உதவி இயக்குநர்கள் இருக்கலாம். இதில், ஆண்டிற்கு 50க்கும் குறைவானவர்களே இயக்குநர்களாகிறார்கள். அதில் வெற்றி பெறும் எண்ணிக்கை ஒன்றோ அல்லது இரண்டோதான்.
ஆனால், சிலர் அபூர்வமாகத் தன் முதல் திரைப்படத்திலேயே ரூ. 100 கோடிக்கும் அதிகமான வசூலைக் கொடுத்து முன்னணி இயக்குநர்கள் பட்டியலுக்கு அடுத்த இடத்திற்குச் சென்றுவிடுவர்.
அப்படி, இதுவரை 4 இயக்குநர்களே அறிமுகத்திலேயே ரூ. 100 கோடி வெற்றியைக் கொடுத்திருக்கின்றனர். இப்பட்டியலில் முதலில் இருப்பவர் இயக்குநர் பிருத்விராஜ்தான். நடிகர் மோகன்லாலை வைத்து இவர் இயக்கிய லூசிஃபர் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது. இதன் இரண்டாம் பாகமான எம்புரான் கலவையான விமர்சனங்களைப் பெற்று எதிர்பார்த்த வெற்றியைப் பெறவில்லை.
அடுத்ததாக, இயக்குநர் சிபி சக்ரவர்த்தி தன் முதல் படமான டான் படத்தில் ரூ. 100 கோடிக்கும் அதிகமான வசூலைச் செய்தார். சிவகார்த்திகேயன் நடித்த இப்படம் கலவையான விமர்சனங்களைத்தான் பெற்றது. தற்போது, மீண்டும் சிவகார்த்திகேயன் படத்தை இயக்கவுள்ளார் சிபி.
இதனைத் தொடர்ந்து, அறிமுக இயக்குநர் ஸ்ரீகாந்த் ஒடேலா நடிகர் நானியை வைத்து இயக்கிய தசரா திரைப்படமும் 100 கோடி கிளப்பில் இணைந்தது. தற்போது, நானியை வைத்து பாரடைஸ் படத்தை இயக்கி வருகிறார்.
தற்போது, இப்பட்டியலில் இயக்குநர் கீர்த்தீஸ்ரனும் இணைந்துள்ளார். பிரதீப் ரங்கநாதனை வைத்து இவர் இயக்கிய டியூட் நல்ல வரவேற்பைப் பெற்றதுடன் ரூ. 100 கோடியை வசூலித்துள்ளது. தமிழிலிருந்து 2-வது முறையாக அறிமுக இயக்குநர் ஒருவர் பெரிய வசூல் சாதனையை நிகழ்த்தியிருக்கிறார்.
இந்த அறிமுக இயக்குநர்களின் ரூ. 100 கோடி வெற்றியால் அடுத்தடுத்த படங்களுக்கு பெரிய பட்ஜெட்கள் கிடைத்தன. இதனால், டியூட் இயக்குநர் அடுத்ததாக யாருடன் இணைவார் என்கிற எதிர்பார்ப்பும் எழுந்துள்ளது.
இதையும் படிக்க: இட்லி கடை ஓடிடி தேதி இதுதானாம்!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.