ஜி.வி. பிரகாஷ் நடிப்பில் உருவான ப்ளாக்மெயில் திரைப்படம் இன்று திரையரங்குகளில் வெளியாகியுள்ளது.
படத்தின் ஆரம்பத்திலேயே நடிகர்கள் ஸ்ரீகாந்த், பிந்து மாதவி தம்பதியின் குழந்தை காணாமல் போகிறது. இன்னொரு புறம் கதை நாயகன் ஜிவி பிரகாஷ் பார்சல் ஒன்றைக் கொடுக்கப்போய் தன் வாகனத்தை திருட்டில் தொலைக்கிறார். அந்த வண்டிக்குள் விலையுயர்ந்த போதைப்பொருள் இருப்பதால் ஜிவிதான் திருடியிருக்க வேண்டும் என சந்தேகப்படும் உரிமையாளர் ஜிவிக்கு பிரச்னையாக மாறுகிறார். அந்தக் குழந்தையைக் கடத்தியது யார்? ஜிவிக்கும் அந்தக் குழந்தைக்கும் என்ன தொடர்பு? என்கிற கதையைப் பல தற்செயல்களுடன் இணைத்து திரைப்படமாக்கியிருக்கிறார் இயக்குநர் மு. மாறன்.
இரவுக்கு ஆயிரம் கண்கள், கண்ணை நம்பாதே உள்ளிட்ட திரைப்படங்களை இயக்கிய மாறனுக்கு இது மூன்றாவது திரைப்படம். தன் வழக்க பாணியான சஸ்பென்ஸ் திரில்லர் வகையிலேயே ப்ளாக்மெயில் திரைப்படத்தை எடுத்திருக்கிறார்.
சஸ்பென்ஸ் திரில்லர் கதைக்கேற்ற சுவாரஸ்யமான காட்சி நகர்வுகள் இருப்பதால் அடுத்தது என்ன என்கிற ஆர்வம் முதல்பாதியில் இருக்கிறது. ஆனால், காட்சிக்குக் காட்சி கதாபாத்திரங்களை எழுதிய விதத்திலும் உணர்வுகளைச் சரியாகக் கடத்தாததாலும் படம் பல இடங்களில் தடுமாறுகிறது.
கர்ப்பமான ஜிவியின் காதலி, குழந்தையில்லாத ரமேஷ் திலக், குழந்தையைத் தொலைத்த ஸ்ரீகாந்த் என ஆண்களுக்கும் குழந்தைகளுக்குமான உணர்வுகள் ஆழமாக பதிவுசெய்யப்பட்டிருந்தாலே இப்படம் சுவாரஸ்யத்தைத் தாண்டி உணர்வுபூர்வமான இடத்தையும் அடைந்திருக்கும். ஆனால், திரைக்கதை பரபரப்பிற்காக கதையை வீணடித்ததுபோல் ஆகிவிட்டது.
குழந்தையைக் கடத்த துடிக்கும் லிங்கா கதாபாத்திரம், தன் காதலியை மீட்க போராடும் ஜிவி, தன் முதலாளியைப் பழிவாங்கத் துடிக்கும் பணியாளர் என ஒரு குழந்தையைச் சுற்றி திட்டமிட்ட கதைகள் இருந்தும் அதீதமான தற்செயல்களைக் கதைக்குள் புகுத்தி படத்தை ‘பிளாஸ்டிக்’ ஆக்கிவிட்டார்கள். ஆறுதலாக, நடிகர்கள் கிங்ஸ்லில், முத்துக்குமார் காட்சிகள் நன்றாக இருந்ததுடன் சிரிக்கவும் வைத்தது.
முதல் காட்சியில் பிந்து மாதவியின் உதட்டசைவிற்கும் வசனத்திற்கும் துளியும் சம்பந்தம் இல்லை. இவ்வளவு மோசமான டப்பிங்கை குறும்படங்களில்கூட செய்யமாட்டார்கள். ரமேஷ் திலக் ஒட்டு தாடி வைத்திருக்கிறார். அதையாவது சரி செய்யக்கூடாதா? இரண்டு படங்களை எடுத்த இயக்குநர் இதையெல்லாம் கவனிக்காமல்விட்டது ரசிகர்களை அவமரியாதை செய்வதுபோல் இருக்கிறது.
நடிகர்கள் ஜிவி, ரமேஷ் திலக், ஸ்ரீகாந்த் என யாரும் திருப்புமுனை நடிப்பை வழங்கவில்லை. எழுத்து சரியாக இல்லாததால் யாருடைய பங்களிப்பும் சோபிக்கவில்லை. இந்தப் படத்தின் கதை இயக்குநர் அனுராக் காஷ்யப் இயக்கிய அக்லி என்கிற திரைப்படத்தை நினைவுபடுத்துவதால் சில எதிர்பார்ப்புகள் ஏமாற்றத்தையே அளித்தன.
தொழில்நுட்ப ரீதியாகவும் திரில்லர் கதைக்கு உண்டான ‘திரை மனநிலையை’ ஏற்படுத்த முடியவில்லை. ப்ளாக்மெயில் என்கிற பெயரில் ஒருவரை ஒருவர் ஏமாற்றும் கதையில் ரசிகர்களும் ஏமாற்றப்பட்டிருக்கிறார்கள் என்றுதான் சொல்ல வேண்டும்!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.