செய்திகள்

தீண்டாமை பேயை அழித்ததா இந்த பாம்? - திரை விமர்சனம்

காளி வெங்கட், அர்ஜூன் தாஸ் நடிப்பில் விஷால் வெங்கட் இயக்கத்தில் குறைவான எதிர்பார்ப்புகளுடன் வெளியாகியுள்ள பாம் திரைப்படம் எப்படி இருக்கிறது?

இணையதளச் செய்திப் பிரிவு

பாம் திரைப்படத்திற்கான விளம்பர வேலைகளில் சில கவனம் பெறும்படியாக இருந்தாலும், படம் முழுதாக மக்களை போய் சேர்வதில் சிரமம் ஏற்பட்டதாகவே தோன்றுகிறது. அதிகமாக படம் பார்க்கும் வட்டாரத்தைத் தவிர்த்து இந்த படம் பெரிய அளவில் கொண்டு சேர்க்கப்படவில்லை என்பதே உண்மை. அப்படி வெளியாகும் பல படங்கள் வெளியீட்டுக்குப் பிறகு நல்ல விமர்சனங்களைப் பெற்று, பெரிய விளம்பரத்தைத் தேடிக்கொள்ளும்! அப்படி இந்தப் படம் அமைகிறதா என்ற கேள்விக்கான பதிலை இப்போது பார்க்கலாம்..! 

பாம் திரைப்படத்தில் நடிகர் காளி வெங்கட்

முதலில் இந்த பாம் திரைப்படத்தின் கதைக்களம் என்னவென்றால், இரண்டாகப் பிரிந்துகிடக்கும் ஒரே கிராமம், தங்களுக்குள் உள்ள ஏற்றத்தாழ்வுகளை இறுக்கிப் பிடித்துக்கொண்டிருக்கிறது. அதே கிராமத்திலிருக்கும் பகுத்தறிவாளர் ஒருவர், இந்த கிராமத்திற்கு நல்லது செய்யவும், இந்தப் பிரிவினையை அகற்றவும் விரும்புகிறார். ஆசை நிறைவேறுவதற்கு முன் அவர் இறந்துவிட, நடு இரவில் கிராமம் ஒன்று கூடி அவரை அடக்கம் செய்வதற்கான வேலைகளைச் செய்கிறது. அப்போதுதான், அந்தப் பிணம் “பாம்” போடுகிறது. ஆம், அந்தப் பிணம் குசு போடுகிறது! கிராமமே ஆச்சரியப்பட, அவர் இறந்துவிட்டாரா? இல்லையா? என்ற குழப்பத்திற்கு மத்தியில் ஊர் பூசாரியின் உலரலால் அவருக்கு சாமி வந்திருப்பதாக ஊர் நம்பிவிடுகிறது. ஊர் திருவிழாவிற்கு இரண்டு நாள்களே இருக்க, வந்திருக்கும் இந்த சாமியால் ஊர் ஒன்று சேர்ந்ததா இல்லையா என்பதுதான் இந்த பாம்! 

பாம் திரைப்படத்தில் ஒரு காட்சி

முதலில் முக்கியக் கதாப்பாத்திரங்களைப் பற்றி பேசிடலாம். இந்தப் படத்தில் அர்ஜூன்தாஸ், காளிவெங்கட், நாசர், அபிராமி, சிங்கம்புலி உள்ளிட்ட பிரபலங்கள் நடித்துள்ளனர். அர்ஜூன்தாஸ் ஆக்சனிலிருந்து திரும்பி அப்பாவியாக களமிறங்கியது கொஞ்சம் புதுமையாக தெரிகிறது. நடிப்பிலும் தன்னை அவர் மேம்படுத்திக்கொண்டிருப்பது நன்றாகத் தெரிகிறது. காளி வெங்கட் நடிப்பைப் பற்றி புதிதாக பாராட்ட வேண்டியதில்லை என்றாலும், இதில் முக்கால்வாசி படத்தில் பிணமாகத் தான் காட்டப்படுகிறார். ஆனாலும், நடமாடிய கொஞ்ச நேரத்தில் தேவையான நடிப்பைக் கொடுத்திருக்கிறார். நாசர் மற்றும் அபிராமி ஆகியோர் நல்ல நடிப்பைக் கொடுத்துள்ளனர். சிங்கம்புலி வில்லன் சாயல் ஏற்று கதை கேட்கும் நடிப்பைக் கொடுத்துள்ளார். கதாநாயகியாக வரும் ஷிவாத்மிகாவும் நல்ல நடிப்பை பதிவு செய்துள்ளார். படத்தில் வந்த நிறைய புதிய நடிகர்களில் வெகு சிலரைத் தவிர எல்லோருமே தேர்ந்த நடிப்பைக் கொடுத்துள்ளனர்.

பாம் திரைப்படத்தில் நடிகர் நாசர்

அடுத்ததாக பேசவேண்டியவர் இயக்குநர்! இந்த படத்தில் அவர் மீதானு ஒரு எதிர்பார்ப்பு சினிமா ரசிகர்களிடம் இருந்தது. சில நேரங்களில் சில மனிதர்கள் படத்தின் மூலம் அவர் பலரை ரசிக்க வைத்திருந்தார். இந்தப் படத்தில் அவர் பேச நினைத்திருக்கும் விஷயம் பாராட்டுதலுக்குரிய ஒன்று. ஆரம்பத்திலிருந்து கடைசி வரை தான் சொல்ல நினைத்த கருத்திலிருந்து விலகாமல், கமெர்ஷியல் விஷயங்களை அளவுக்குமேல் புகுத்தாமல் கொடுக்க முயன்றிருக்கிறார். அதற்கான பாராட்டுகளை அவருக்குக் கொடுத்தே ஆகவேண்டும்!

ஆனால் இந்தப் படத்தில் பிற விசயங்களைப் பற்றி பார்த்தோம் என்றால், கதையாக கொஞ்சம் வித்தியாசம் தெரிந்தாலும், அந்த பிணத்தைத் தாண்டி கதையில் விறுவிறுப்பேற்ற வேறு எதுவும் இல்லாதது படத்தைக் கொஞ்சம் பலவீனப்படுத்துகிறது. களம் சுவாரசியமானதாக இருந்தாலும், நடக்கும் விசயங்கள் கொஞ்சம் சத்தில்லாமல் நகர்கின்றன.

பாம் திரைப்படத்தில் நடிகை அபிராமி

கிராமத்தை மையமாகக் கொண்ட இந்தக் கதையில் அந்த நிலப்பரப்பை தெளிவாக காட்டாததும், அந்த ஊர் மக்கள் இந்த பிரிவினையால் படும் வேதனைகள், பெறும் இழப்புகளை உணர்ச்சிகளோடு கடத்த முடியாமல் போனதாலும், படம் அதன் முழு வீச்சைப் பெறத் திணறுகிறது. தங்களுக்குள் இருக்கும் வேற்றுமையை அந்த ஊர் மக்கள் பிடித்திருக்கும் இறுக்கத்தைக் காட்டத் தவறியது பார்வையாளர்களை அந்த ஊர் மக்களுக்காக வருந்த வைக்கத் தவறுகிறது. 

Spoiler Alert: டிரெய்லரில் காட்டப்பட்டது போல, பிணம் பாம் போடுவது, அல்லது பூசாரியின் அம்மா வசனமாகச் சொன்னது அப்படியே நடப்பது, தும்மியதால் ஆடு உட்காருவது, வந்திருப்பது யாரின் சாமி என்பதைக் கண்டறிய நடக்கும் சோதனைகள் என பல விசயங்கள் பழகிய காட்சிகள் போலவே தோன்றுகின்றன. 

ஒரு சூப்பரான கதைக்களத்தில் இருக்க வேண்டிய அளவிலான Drama படத்தில் இடம்பெறாதது பெரிய குறையாக கண்ணில் படுகிறது. அதிலும் இரண்டாம் பாதியில் நடந்த விஷயங்களே திரும்பத் திரும்ப நடப்பதான எண்ணமும் எழுகிறது.

பாம் திரைப்படத்தில் ஒரு காட்சி

அபிராமி, நாசர் போன்ற கதாபாத்திரங்களில் புதுமை எதுவும் இல்லாமல் எழுதியிருப்பது கொஞ்சம் ஏமாற்றத்தைத் தருகிறது. அதிலும் ஆரம்பத்திலிருந்து வரும் நகைச்சுவை காட்சிகளில் சில மட்டுமே சிரிப்பைப் பெற மீதமெல்லாம் தோல்வியைத் தழுவுகின்றன. சில லாஜிக் குறைபாடுகளும் படத்தில் இருந்தாலும் அதைத் தெளிவாக, இது ஒரு பாட்டி, பேத்திக்குச் சொல்லும் கதை என்பதைச் சொல்லி தப்பிக்கிறார் இயக்குநர். இருந்தாலும் 3 எழுத்தாளர்களால் வடிவமைக்கப்பட்ட ஒரு தேர்ந்த படமாக இந்தப் படம் தெரியாதது கொஞ்சம் வருத்தமளிக்கிறது. 

சில வசனங்களில் எழுத்தாளர்கள் கவனம் ஈர்க்கிறார்கள்.

டி. இமானின் இசை படத்தோடு இயல்பாக பொருந்துகிறது. ஆனாலும் மனதில் நிற்குமளவிலான பின்னணி இசையோ பாடல்களோ படத்தில் இல்லை. பி.எம். ராஜ்குமாரின் ஒளிப்பதிவில் புதுமையில்லாவிட்டாமல் தேவையானதை வழங்கி படத்திற்கு உதவியிருக்கிறார். 

பாம் திரைப்படத்தில் ஒரு காட்சி

மொத்தமாகச் சொல்லப்போனால், நல்ல கதைக்களத்தில், நல்ல கருத்தோடு மிதமான வேகத்தில் கதை சொல்ல முயன்றிருக்கிறார் இயக்குநர் விஷால் வெங்கட். கண்டிப்பாக, குடும்பத்துடன் சென்று இந்தப் படத்தை பார்த்து ரசிக்கலாம்! குழுவினருக்கு பாராட்டுகள்!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

வார பலன்கள் - விருச்சிகம்

வார பலன்கள் - துலாம்

தி.மு.க. அரசின் மீதான நம்பிக்கையை மக்கள் முற்றிலும் இழந்து விட்டனர்: விஜய்

வார பலன்கள் - கன்னி

வார பலன்கள் - சிம்மம்

SCROLL FOR NEXT