மறைந்த நடிகர் ரோபோ சங்கரின் உடலுக்கு தமிழக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் வெள்ளிக்கிழமை அதிகாலை அஞ்சலி செலுத்தினார்.
மஞ்சள் காமாலை நோய்க்கு சிகிச்சைப் பெற்று வந்த ரோபோ சங்கர் (வயது 46), திடீர் உடல்நலக் குறைவால் செவ்வாய்க்கிழமை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், உடலுறுப்புகள் செயலிழந்து வியாழக்கிழமை இரவு காலமானார்.
இந்த நிலையில், சென்னையில் உள்ள ரோபோ சங்கரின் வீட்டில் வைக்கப்பட்டுள்ள அவரது உடலுக்கு துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் இன்று அதிகாலை நேரில் சென்று அஞ்சலி செலுத்தி, குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்தார்.
இதுதொடர்பான புகைப்படங்களை எக்ஸ் தளத்தில் பகிர்ந்துள்ள உதயநிதி ஸ்டாலின், ”திரைக்கலைஞர் சகோதரர் ரோபோ சங்கர் மறைவுற்றார் என்ற செய்தியறிந்து வருத்தமுற்றோம். அவர்களது இல்லத்தில் வைக்கப்பட்டிருந்த ரோபோ சங்கரின் திருவுடலுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினோம்.
மேடைக் கலைஞராக வாழ்க்கைப் பயணத்தைத் தொடங்கி - சின்னத்திரையில் சாதித்து - திரைத்துறையில் தனது எதார்த்த நகைச்சுவையால் தமிழ் மக்களை மகிழ்வித்தவர் சகோதரர் ரோபோ சங்கர். அவரை இழந்து வாடும் குடும்பத்தார் - நண்பர்கள் - கலையுலகினர் - ரசிகர்கள் அனைவருக்கும் என்னுடைய ஆறுதலையும் - இரங்கலையும் தெரிவித்தோம்.” எனத் தெரிவித்துள்ளார்.
இதனிடையே, நடிகர்கள் தனுஷ், சிவகார்த்திகேயன் உள்ளிட்டோரும் ரோபோ சங்கரின் உடலுக்கு வெள்ளிக்கிழமை காலை நேரில் அஞ்சலி செலுத்தினர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.