நடிகர் பிரபாஸின் திரைப்படத் தேர்வுகள் சோர்வை அளிப்பதாக ரசிகர்கள் புலம்பி வருகின்றனர்.
ஒரே திரைப்படம்... பான் இந்திய சினிமாவின் வணிகத்தைப் பிரம்மாண்டமாக திறந்து வைத்த பாகுபலியால் நடிகர் பிரபாஸ் புகழின், பிரபலத்தின் உச்சிக்கே சென்றார். அப்படம் கொடுத்த வெளிச்சத்தால் அதற்கு முன் பிரபாஸ் யாரென்றே தெரியாதவர்கள் மத்தியில் எல்லாம் நட்சத்திரமாக வலம் வந்தார்.
தொடர்ந்து, சாஹோவில் நடித்து ஏமாற்றம் அளித்தார். சரி, எல்லாம் பாகுபலியாகிவிடுமா? என ரசிகர்கள் அடுத்த திரைப்படத்திற்குக் காத்திருந்தனர்.
ஆனால், வந்ததோ ராதே ஷ்யாம் என்கிற இன்னொரு பிளாப் திரைப்படம். சரி, பிரபாஸ் அண்ணா யாரென்று காண்பிப்பார் என அவரது ரசிகர்கள் பல்லைக் கடித்துக்கொண்டு காத்திருந்தால் ஆதி புரூஷ், கண்ணப்பா என கடும் தோல்விப்படங்களே அமைந்தன.
இடையே, சலார் மற்றும் கல்கி திரைப்படங்கள் வெளியாகி வசூலில் வெற்றி பெற்றாலும் கதையம்சமாக பிரபாஸுக்கான படமாக அமையவில்லை.
தற்போது, பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ராஜா சாப் திரைப்படமும் மோசமான விமர்சனங்களைப் பெற்று ரசிகர்களிடையே கடும் அதிருப்தியைக் கிளப்பியுள்ளது.
சலார் போன்ற அதிரடியான கதாபாத்திரத்திலும் நடித்தாகிவிட்டது; ஆதி புரூஷ் போன்ற காவியப்படத்திலும் நடித்தாகிவிட்டது என பேய்ப்படத்திற்கு வந்தால் அங்கும் ஏகப்பட்ட எதிர்வினைகள் கிடைத்துள்ளன.
மேலும், பிரபாஸின் ரசிகர்கள், ‘ உங்கள் கதைத் தேர்வுகள் சொந்த ரசிகர்களையே ஏமாற்றுவது போல் உள்ளது. தயவுசெய்து கொஞ்சம் இடைவேளை எடுத்துவிட்டு கவனமாக கதைகளைத் தேர்வு செய்யுங்கள்” என பிரபாஸுக்கு கோரிக்கை வைத்து வருகின்றனர்.
அடுத்ததாக, இயக்குநர் சந்தீப் ரெட்டி வங்காவின் ஸ்பிரிட் திரைப்படத்தில் நடிக்க பிரபாஸ் ஒப்பந்தமாகியுள்ளார். இது, பான் ஆசிய வெளியீடாகத் திரைக்கு வரவுள்ளது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.