குழந்தை நட்சத்திரம் அஸ்வந்த் அசோக்குமார் தனக்கு தமிழக அரசின் விருது கிடைக்காத விரக்தியில், ”ஒரு கலைஞன் நடிப்பது எதற்காக? அங்கீகாரம் கிடைக்கவில்லை எனில் நடிப்பதே வீண்தானே? ஏன் இந்த மாதிரியான அநியாயம் செய்கிறார்கள் எனப் புரியவே இல்லை” என விடியோ வெளியிட்டுள்ளார்.
இந்த விடியோ வைரலான நிலையில், தமிழ் சினிமா ரசிகர்கள் பலரும் இந்தச் சிறுவனுக்கு ஆறுதல் கூறி வருகிறார்கள்.
சண்டைகோழி 2 படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானவர் அஸ்வந்த் அசோக்குமார். தனது சிறப்பான நடிப்பினால் சூப்பர் டீலக்ஸ், ஐரா, மை டியர் பூதம் படங்களில் கவனம் பெற்றார்.
தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் கவனம் பெற்ற இவரது நேர்காணல்கள் மீம்ஸ்களில் வைரலானது.
சமீபத்தில் தமிழக அரசு திரைப்படத்துறைக்கான விருதுகள் 2014-22 வரைக்குமான படங்களுக்கு அறிவிக்கப்பட்டன.
இந்த விருதில் பலருக்கும் விருது கிடைத்தாலும் இயக்குநர் பா.ரஞ்சித்துக்கு விருது கிடைக்காதது சர்ச்சையை ஏற்படுத்தியது.
இந்நிலையில், சிறுவன் அஸ்வந்த் அசோக்குமார் தனது இன்ஸ்டா பக்கத்தில் வெளியிட்ட விடியோவில் கூறியிருப்பதாவது:
செய்தி இப்போதுதான் தெரியவந்தது. நமது தமிழக அரசின் மாநில விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இதில், நான் இருப்பேன் என்று நினைத்தேன்; ஆனால் இல்லை. 2019-ல் வெளியான சூப்பர் டீலக்ஸ் படத்தில் ராசுக்குட்டி எனும் கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். இதில் நிச்சயமாகக் கிடைக்குமென நம்பினேன்.
இந்தப் படத்திற்குதான் கிடைக்கவில்லை. சரி, 2022-ல் வெளியான மைடியர் பூதம் படத்திற்காவது கிடைக்குமென மிகவும் நம்பினேன். அதிலும் கிடைக்கவில்லை. தேர்வுக்குழுவினர் இந்த மாதிரி படங்களைப் பார்க்கிறார்களா எனத் தெரியவில்லை?
ஒரு கலைஞன் நடிப்பது எதற்காக? அங்கீகாரம் கிடைக்கவில்லை எனில் நடிப்பதே வீண்தானே? ஏன் இந்த மாதிரியான அநியாயம் செய்கிறார்கள் எனப் புரியவே இல்லை. பார்வையாளர்களான நீங்களே சொல்லுங்கள், அந்த வயதில் அந்த நடிப்புக்குமேல் என்ன வேண்டுமென நீங்களே சொல்லுங்கள் எனக் கூறி வருத்தத்துடன் விடியோவை முடித்துள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.