முகப்பு
செய்திகள்

பதினெட்டாம்படி நீதிபதி... சூர்யாவின் கருப்பு - திரை விமர்சனம்!

கருப்பு திரை விமர்சனம்...

Updated On : 15 மே 2026, 1:16 pm IST
சூர்யா
பகிர்:

நடிகர் சூர்யாவின் கருப்பு திரைப்படம் இன்று திரையரங்குகளில் வெளியாகியுள்ளது.

நீதிக்காக, நியாத்திற்காக காத்திருக்கும் போது, நீதிமன்றத்தை நாடுவதற்கு முன்பே நாம் கடவுள்களை நாடியிருப்போம். என்னதான் கடவுள் நேரில் வந்து சாட்சியையோ, நியாயத்தையோ வழங்கமாட்டார் எனத் தெரிந்திருந்தாலும், அந்த ‘நம்பிக்கை’ கொடுக்கும் தைரியத்தில்தான் நம் நாட்டிலுள்ள நீதிமன்றங்களில் நாளும் பல்லாயிரம் வழக்குகளுக்காக மக்கள் ஏறிக்கொண்டே இருக்கிறார்கள். ஆண்டுக்கணக்காக காத்திருந்து, இறுதியில் சட்டத்தின் ஓட்டைகள் வழியே நிரபராதிகள் பாதிக்கப்படும் போது, அதனைக் கண்டு வாசலில் இருக்கும் கடவுளே வாதிட வந்தால் என்ன ஆகும்? கருப்பின் கதை இதுதான்.

சென்னையின் ஏழு கிணறு என்கிற பகுதியிலுள்ள குற்றவியல் நீதிமன்றத்தை முழுமையாகத் தன் கட்டுப்பாட்டில் வைத்திருக்கிறார் வழக்குரைஞர் பேபி கண்ணன் (ஆர்ஜே பாலாஜி). நீதிக்காக வரும் பலரையும் இழுத்தடித்து லஞ்சம் மூலம் வழக்கு விசாரணைகளைத் தாமதப்படுத்துவது, பணத்திற்காக நேர்மைக்கு எதிரான ஆளாகச் செயல்படுவது என பேபியின் பெயரைக் கேட்டாலே பலரும் பயப்படுகின்றனர். அப்படியான பேபியிடம், தொலைந்து போய் கண்டுபிடிக்கப்பட்ட நகைகளை நீதிமன்றம் மூலம் பெற தந்தையும் மகளும் வருகின்றனர். அதிக சவரன் என்பதால் வழக்கை இழுத்தடிக்கும் பேபியை ஒருகட்டத்தில் அந்தத் தந்தை எதிர்த்துவிட்டு நீதிமன்ற வளாகத்திலிருக்கும் கருப்பு சாமியிடம் கண்ணீர்விட்டு வேண்டுகிறார். கருப்புசாமி (சூர்யா) மனித அவதாரம் எடுக்கிறார். இந்த வழக்கை கடவுளாக வந்த சூர்யா மனித சக்திக்கு முடியும்படி முடிக்க நினைக்கிறார். ஆனால், வேறு ஒரு திருப்பம் நிகழ்கிறது. நீதியை வழங்க வேண்டிய மனிதர்களை, நீதிக்காக கடவுள் எதிர்க்கும் கதையில் பல விஷயங்கள் நடக்கின்றன.

Advertisement

கதையாகவே கருப்பு சுவாரஸ்யமான ஒன்லைன். நீதியை நிலைநாட்ட கடவுள் போல் இருக்கும் வழக்குரைஞர்களும் நீதிபதிகளும் மனசாட்சியைவிட்டு அநீதி செய்கிறார்கள். அந்த ‘மை லார்ட்’-கள் நீதியுடன் இருந்தால் கடவுள் எதற்கு?

இயக்குநர் ஆர்ஜே பாலாஜிக்கு மூக்குத்தி அம்மன் மூலம் இந்த மாதிரி கதைகளை மக்கள் எப்படி ஏற்றுக்கொள்வார்கள் என்பது குறித்த தெளிவு இருந்தாலும் சூர்யா போன்ற நடிகருக்கு சரியாக பொருந்துமா? என்பதற்காக திரைக்கதையில் மாஸ் தருணங்களை வைத்திருக்கிறார். அது கைகொடுத்திருக்கின்றன. ஏமாற்றமளிக்கும் விதமாகவோ, இல்லை முற்றிலும் அதீதமாகவோ கடவுள் காட்சிகள் இல்லை. நடிகர் சூர்யா இதற்கு முன் பல வித்தியாசமான கதைகளில் நடித்தாலும் முதல்முறையாக, சாமி படமொன்றில் நடித்திருக்கிறார்.

படம் ஆரம்பித்து 30 நிமிடங்கள் கழித்தே சூர்யா வருகிறார். ஆனால், இறுதிவரை அவர் எப்போதெல்லாம் வருவார் என்பதைக் குறித்த எதிர்பார்ப்பு அடுத்தடுத்த காட்சிகளில் இருந்தது பலம். முக்கியமாக, இடைவேளைக் காட்சி. ஆரம்பம் முதல் இருந்த திரைக்கதை வேகம், இறுதிவரை பிசிறில்லாமல் இருந்ததால் சாமி படங்களுக்கே உண்டான லாஜிக் மீறல்களும் பெரிதாக தொந்தரவைக் கொடுக்கவில்லை. புத்திசாலித்தனமாக சில காட்சிகளை இயக்குநர் சிவப்பு ஒளி பின்னணியில் எடுத்து கருப்புசாமிக்கான தோற்றத்தைக் கொடுத்தது நல்ல முடிவு.

நீதிமன்ற பின்னணியில் கதை நிகழ்வதால் வசனங்களும் கவனிக்கும்படியாக எழுதப்பட்டிருக்கின்றன. முக்கியமாக, “நீதிமன்றத்தில் தண்டனை கிடைக்கும் என வருகிறோம். ஆனால், நீதிமன்றத்துக்கு வருவதே பெரிய தண்டனைதான்” போன்றவை இன்றைய நீதித்துறையின் அவலநிலையைச் சுட்டுகின்றன. நீதிமன்ற கட்டடங்கள் இடிந்துவிழும் நிலையில் இருந்தாலும் அதனைச் சார்ந்திருக்கும் பலரும் செழுமையாக ஊழலைச் செய்துகொண்டிருப்பது போன்ற வேடிக்கையான உண்மைகளையும் கதைக்குள் கொண்டு வந்திருக்கின்றனர். முதல்பாதியில் அழுத்தமான திருப்பம் அமைந்தாலும், இரண்டாம்பாதிக்கான விறுவிறுப்பில் கொஞ்சம் குறைந்துவிடுகிறது. சூர்யாவுக்கான காட்சிகளை இன்னும் கூடுதலாகச் சேர்திருக்கலாம். ஏதோ இருப்பது போலவும் இருக்கிறார்; இல்லாதது போலவும் இருக்கிறார்.

சூர்யா

வெற்றிக்காக காத்திருந்த சூர்யாவுக்கு வெற்றிக்கான சாத்தியங்களுடனே கருப்பு அமைந்திருக்கிறது. தன்னுடைய ஒவ்வொரு காட்சிகளையும் சூர்யாவால் ஈர்க்க முடிவதால், கடவுள் கதை என்பதைத் தாண்டி ஆக்சன் காட்சிகளை நம்பகமாகவே சில இடங்களில் மாற்றுகிறார். தனக்கான அறிமுகப்பாடலிலும் நல்ல நடனத்தைக் கொடுத்து விசில் சப்தங்களை எழுப்புகிறார்.

வில்லனாக ஆர்ஜே பாலாஜி நல்ல நடிப்புதான். ஆனால், முழுமையான வில்லனுக்கான ஆளாக அவர் தெரியவில்லை. வேறு ஒரு வில்லன் நடிகர் நடித்திருந்தால் இன்னும் கூடுதலாக பலம் பெற்றிருக்கும். நடிகர்கள் இந்திரன்ஸ், நட்டி நட்ராஜ், அனகா மாயா உள்ளிட்டோரும் கவனம் ஈர்க்கும் நடிப்பை வழங்கியிருக்கின்றனர்.

சாய் அபயங்கர் ரசிகர்களால், ’இசை’ அபயங்கர் எனச் செல்லமாக அழைக்கப்படுகிறார். காதல் பாடல்களில் இன்றைய தலைமுறைக்கான இசையில் மாற்றங்களைச் செய்துகொண்டிருக்கிறார் என்கிற நிலையில் முழு கமர்சியல் படத்தின், ‘மாஸ்’ பின்னணிக்குத் தாங்குவாரா? என கேள்விகள் இருந்தன. ஆனால், கருப்பில் அசத்தலான துவக்கத்தைக் கொடுத்திருக்கிறார். இரைச்சல் அதிகம் இல்லாமல், ஒலி கலவைகளைச் சரியாகச் செய்திருப்பது இயல்பாகவே சூர்யா வரும் காட்சிகளில் ரசிகர்களை விசிலடிக்க வைக்கிறது. இஷ்டத்திற்கு பின்னணி இசைகளைச் சொறுகாமல் தேவைப்படும் இடத்தில் பொறுத்தியிருக்கிறார்.

கருப்பு போன்ற படங்களுக்கு ஒளிப்பதிவும் சரியாக அமைய வேண்டும். அதில் எந்தக்குறையும் இல்லாமல் சிறப்பான பணியைச் செய்திருக்கிறார் ஒளிப்பதிவாளர் ஜி.கே. விஷ்ணு. தயாரிப்பு தரப்பான ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் நிறைய செலவு செய்திருப்பது நீதிமன்றக் காட்சிகளைப் பார்த்தாலே தெரிகிறது. கதையம்சம் இருப்பதால் அக்காட்சிகளுக்கு செய்யப்பட்ட செலவுகள் வீணாகவும் இல்லை.

ஒவ்வொரு ஊரின் எல்லைகளிலும் கருப்புசாமி இருப்பது போல், ஒவ்வொரு மாவட்டத்திற்கும் நீதிமன்றங்கள் இருக்கின்றன. லஞ்சம், பொய்களை விட்டு மனசாட்சியுடன் செயல்பட்டால் நீதிமன்றங்களே கோவில்களாகும் என்கிற செய்தியுடன் ஏமாற்றமளிக்காத தரிசனத்தை வழங்கியிருக்கிறது கருப்பு!

actor suriya's karuppu movie released today

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.