திரை விமரிசனம்

ஆண்-பெண் உறவு குறித்து தவறான புரிதலை ஏற்படுத்துகிறதா? 'முருங்கைகாய் சிப்ஸ்' : திரை விமர்சனம்

எஸ். கார்த்திகேயன்


ஷாந்தனு, அதுல்யா நடிப்பில் வெளியாகியிருக்கும் படம் முருங்கைக்காய் சிப்ஸ். ஸ்ரீஜர் இயக்கியிருக்கும் இந்தப் படத்தை லிப்ரா புரொடக்சன்ஸ் சார்பாக ரவிந்தர் சந்திரசேகரன் தயாரித்திருக்கிறார். 

ஷாந்தனுவுக்கும் அதுல்யாவுக்கும் திருமணம் நடைபெற்று வருகிறது. முதலிரவுக்கு முன் ஷாந்தனுவிடம் அவரது தாத்தா பாக்யராஜ்,  உங்களிருவருக்கும் முதலிரவில் உடலுறவு நடந்தால் பரம்பரைச் சொத்து முழுவதையும் ஆசிரமத்திற்கு எழுதி வைத்துவிடுவேன் என்கிறார்.

மற்றொருபுறம் அதுல்யாவிடம் அவரது அத்தை ஊர்வசி, உங்களிருவருக்கும் முதலிரவில் உடலுறவு நடைபெறவில்லையென்றால் குழந்தை பிறக்காது என்ற  தோஷம் இருப்பதாக கூறுகிறார்.  இதனையடுத்து இருவருக்கும் முதலிரவில் உடலுறவு நடந்ததா இல்லையா என்பதை விரிவாக பேசியிருக்கிறது படம். 

கதை முழுக்க, முழுக்க ஒரே இரவில் நடக்கிறது. படம் நெடுக நகைச்சுவையென இரட்டை அர்த்த வசனங்களை அள்ளித் தெளித்திருக்கிறார்கள். ஆனால் அவற்றில் பெரும்பாலானவை வழக்கொழிந்தவைதான். பாக்யராஜ் பாணி கதை. திரைக்கதையும் அருதப் பழசாக இருக்கிறது. 

உதாரணத்துக்கு துவக்க காட்சியில் கோவில் ஒன்றில் ஊர்வசி வேண்டிக்கொண்டிருப்பார். அப்போது ஒரு குரல் கேட்கும். சாமியார் வேடத்தில் ஒருவர் அழைத்து ஒரு ருத்ராட்சையைக் கையில் கொடுப்பார். இந்தக் காட்சியைத் தற்போது சின்னத்திரை தொடர்களில் தவறாமல் காணலாம். 

படத்தில் யோகி பாபு, முனிஷ்காந்த், மனோபாலா, மயில்சாமி, மதுமிதா என ஏகப்பட்ட நகைச்சுவை நடிகர்கள் சிரிக்க வைக்க முயல்கிறார்கள். இது போதாது என தயாரிப்பாளர் ரவிந்தர் தன் பங்குக்கு நகைச்சுவை செய்கிறார். ஆனால் சிரிப்புக்குப் பதிலாக வெறுப்புதான் மிஞ்சுகிறது. 

படத்தில் அதுல்யா மற்றும் ஷாந்தனுவின் நண்பர்களும்  உறவினர்களும் முதலிரவு குறித்து அட்வைஸ் செய்கிறார்கள். அவை எல்லாமே பழமையான மோசமான அறிவுரையாக இருக்கிறது. 

முதலிரவின் போது அதுல்யா உடலுறவுக்காக ஷாந்தனுவை கவர முயற்சிக்கிறார். ஷாந்தனு மறுக்கிறார். மீண்டும் அதுல்யா முயற்சிக்க, ஷாந்தனு மறுக்க ரிப்பீட்டு. நடிகர்களில் யாருடைய நடிப்புமே மனதில் நிற்கும் படி இல்லை. காரணம் நடிப்பதற்கான வாய்ப்பு படத்தில் இல்லை.

பெரும்பாலும் ஒரே அறையில்தான் கதை நகர்கிறது. முடிந்தவரை தனது ஒளிப்பதிவால் சுவாரசியப்படுத்தியிருக்கிறார் ஒளிப்பதிவாளர் ரமேஷ் சக்கரவர்த்தி. தனது பின்னணி இசையின் மூலம் படத்தை சுவாரசியப்படுத்த முயன்றிருக்கிறார் தரண் குமார்.

பாலியல் குறித்த சரியான புரிதலின்மையினால் குற்றங்கள் அதிகரித்திருக்கும் நிலையில் படம் முழுக்க உடலுறவு குறித்து பிற்போக்குத்தனமான  கருத்துகளை பேசியிருப்பது அதிர்ச்சியளிக்கிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

25 ஆண்டுகளுக்குப் பின் காந்தி குடும்பம் போட்டியிடாத அமேதி! ஸ்மிருதி இராணி கருத்து

யாரோ இவர் யாரோ? அந்த ஓவியாவேதான்...

பிங்க் ரோஸ்...ஸ்ரீதேவி

சிசோடியா ஜாமீன் மனு: சிபிஐ, அமலாக்கத்துறை பதிலளிக்க உத்தரவு!

‘ஆவேஷம்’ பட டிரெண்டிங்கில் இணைந்த பாட் கம்மின்ஸ்!

SCROLL FOR NEXT