திரை விமரிசனம்

சுவாரஸ்யமான கதை! ஆனால்.. ரசவாதி - திரை விமர்சனம்!

இயக்குநர் சாந்தகுமார் இயக்கிய ரசவாதி திரைப்படம் இன்று திரையரங்குகளில் வெளியாகியுள்ளது.

சிவசங்கர்

மௌனகுரு, மகாமுனி போன்ற வெற்றிப் படங்களை இயக்கிய இயக்குநர் சாந்தகுமார், தற்போது ரசவாதி படத்தை இயக்கியுள்ளார். அர்ஜுன் தாஸ், தன்யா ரவிச்சந்திரன் உள்ளிட்டோர் நடித்த இப்படம் இன்று திரையரங்குகளில் வெளியாகியுள்ளது.

கொடைக்கானலில் வாழ்ந்துவரும் சித்தமருத்துவரான சதாசிவபாண்டியன் (அர்ஜுன் தாஸ்) அங்குள்ள மக்களிடம் நற்பெயருடன் இருக்கிறார். யார், யாரோ குடித்து வீசிய மதுக்குப்பிகளையும் சேகரித்து அதை வனவிலங்குகள் மிதிக்காமல் பார்த்துக்கொள்ளும் அளவிற்கு இயற்கையின் மீதும் மிகுந்த அன்புடன் இருப்பவர்.

அந்த நேரம், கொடைக்கானல் பகுதிக்கு இருவர் பணி நிமித்தமாக வருகிறார்கள். விடுதியின் மேலாளராக நாயகி சூர்யா (தன்யா ரவிச்சந்தரன்). காவல்துறை ஆய்வாளராக பரசுராஜ் (சுஜித் சங்கர்). இருவரும் சதாசிவபாண்டியன் வாழ்க்கைக்குள் நுழைந்ததும் அமைதியாக சென்றுகொண்டிருக்கும் சதாவின் வாழ்வில் திருப்பங்கள் ஏற்படுகின்றன. குறிப்பாக, காவல் ஆய்வாளர், சதாவை தன் வாழ்வை அழித்தவன் என கொலை செய்ய திட்டமிட்டுகிறார். சாந்தமாக, கொடை குளிரில் மூலிகைகளுடன் இருக்கும் சதாவை திடீரென வந்த பரசுராஜ் ஏன் எதிரியாக நினைக்க வேண்டும்? சித்தமருத்தவராக அறியப்படுவதற்கு முன் சதாசிவபாண்டியன் என்ன செய்தார்? அவருக்கும் காவல் ஆய்வாளருக்கும் இருக்கும் பிரச்னைதான் என்ன? என்கிற கேள்விகளே படத்தின் மையம்.

இயக்குநர் சாந்தகுமார் தன் முந்தைய திரைப்படங்களில் கையாண்டே அதே நிதானமான திரைக்கதையையே இப்படத்திலும் கையாண்டிருக்கிறார். அடுத்தது என்ன? என்கிற ஆவலை ஏற்படுத்தினாலும் அதை மெல்லமாக அவர் பாணியிலேயே சொல்கிறார். சாதாரண பழிவாங்கல் கதையை முன்பின்பான திரைக்கதை கூறல் பாணியில் நாயகனும் வில்லனும் உளவியல் ரீதியாக எப்படியெல்லாம் மாறுகிறார்கள் என்பதையே கூறுயிருக்கிறார்.

பழிவாங்கல் கதை என்றாலே திரும்பிய பக்கமெல்லாம் ரத்தத்தை சிதறவிடமால் காதல், நகைச்சுவை என பார்வையாளர்களை சோதிக்காமல் காட்சிகளை நகர்த்தியிருக்கிறார். மனநல பாதிப்பில் இருக்கும் காவல் ஆய்வாளரின் கதாபாத்திரம் கச்சிதமாக எழுதப்பட்டுள்ளது. ஒரு பக்கம் கொலை வெறி இருந்தாலும் மறுபுறம் அவருக்கும் உளவியல் மருத்துவருக்கும் இடையான காட்சிகளில் சிரித்து விசிலடிக்கலாம்.

அர்ஜுன் தாஸின் நடிப்பு சில இடங்களில் ரசிக்க வைத்தாலும் அவரின் தோற்றம் காதல் காட்சிகளில் சரியாக ஒன்றவில்லை. படத்தின் பெரிய பலம் நடிகர் சுஜித் சங்கர். வில்லனாக கதிகலங்க வைத்திருக்கிறார். கிளோஸ்அப் காட்சிகளில் தன் நக்கல் சிரிப்பால், பார்வையால் பயத்தைக் கடத்தி அசத்தியிருக்கிறார். உண்மையில், இப்படத்தின் மிகச்சரியான கதாபாத்திர தேர்வு சுஜித். அவரின் வசனங்களுக்கெல்லாம் திரையரங்கில் அமைதி மட்டும்தான். தன்யா ரவிச்சந்திரன் திரைக்கு ஏற்ற அழகான முகம். காதல் காட்சிகளில் வெட்கப்படும்போது ரசிக்க வைக்கிறார்.

படத்தின் குறையாகத் தெரிவது மௌனகுரு, மகாமுனி இயக்குநர் சாந்தகுமாரின் படம்தான் இது என நம்ப முடியவில்லை. தன் முந்தைய படங்களில் அவர் கையாண்டிருந்த கதாபாத்திர தேர்வுகள் இப்படத்தில் பெரிதாகக் கைகொடுக்கவில்லை. வில்லன் கதாபாத்திரத்தில் நடித்தவரைத் தவிர மற்ற கதாபாத்திரங்கள் பெரிதாக ஈர்க்கவில்லை.

சாதாரணமாக, கதை நிகழ்ந்துகொண்டிருக்க எங்காவது திடீர் திருப்பம் வரும் என நினைத்தால் இறுதியில் மட்டும் ஒரே ஒரு டிவிஸ்ட். ஆனால், அதுவும் திரைக்கதை வேகத்தில் ஊகிக்கக் கூடியவதாகவே இருக்கிறது.

இன்னொன்று, படத்தின் பெயருக்கு ஏற்ற ‘ரசவாதி’யை அவர் காட்டவில்லை. சித்தவைத்தியராகவும் வர்மக்கலை அறிந்தவராகவும் நாயகன் இருப்பதால், அதுகுறித்த தெரியாத சில முக்கியமான தகவல்களை காட்சிகள் மூலம் சொல்லியிருக்கலாம். ஆனால், அப்படி எதுவும் இல்லை. கபசுரக் குடிநீர் பற்றிய தகவல் மட்டும் வருகிறது. ஆனால், அதுவும் நமக்கு தெரிந்ததுதானே?

சண்டைக்காட்சிகளின் தேவைக்கேற்ப சரியாக பயன்படுத்தப்பட்டிருக்கிறது. தொகுப்பாளினி ரம்யாவுக்கு நல்ல கதாபாத்திரம். பாடல்கள் பெரிதாக நினைவில் நிற்கவில்லை என்றாலும் அதைக் காட்சிப்படுத்திய விதம் நன்றாக இருந்தது. படத்தின் முக்கிய பலமாக இருப்பது இசையமைப்பாளர் தமனின் பின்னணி இசைதான். துவக்கத்திலிருந்து இறுதிவரை கதையின் எண்ண ஓட்டத்திற்கேற்ப கவனத்துடன் இசையமைத்திருக்கிறார்.

சாந்தகுமார் படங்களில் இடம்பெற்றிருக்கும் வசனங்கள் தனித்துவமானவையாக மனதில் நிற்கக்கூடியவை. ரசவாதியிலும் சில வசனங்கள் ரசிக்கும்படியாக இருந்தன.

ஒரு சுவாரஸ்யமான கதை மெதுவான திரைக்கதையால் அதன் முழு வீச்சை இழந்து தடுமாறுகிறது. சில மாறுதல்களைச் செய்திருந்தால் இன்னும் நல்ல படமாகவே வந்திருக்க வேண்டியவர் இந்த ரசவாதி!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

20 ஆண்டுகளுக்குப் பிறகு... ஆசிய கோப்பையில் தேர்வான இந்திய அணி!

ஒன் வே... அஞ்சனா ரங்கன்!

இந்த வாரம் கலாரசிகன் - 10-08-25

சென்னை, புறநகரில் பரவலாக மழை!

“போப்பா..! போ.. போ!” யானையை செல்லமாக காட்டிற்குள் விரட்டிய மக்கள்!

SCROLL FOR NEXT