திரை விமரிசனம்

சினிமா கனவுகளும் நிஜ போராட்டங்களும்: ‘ஸ்டார்‘ படம் பேசுவது என்ன?

நடிகர் கவினின் ஸ்டார் படம் பேசிய முக்கியமான விஷயங்கள் தொடர்பாக...

Prabhakaran

‘நீ ஏன் ஹீரோவாகணும்னு நினைக்கிற?’ என ‘ஸ்டார்’ படத்தில் ஒரு வசனம் வருகிறது. இதனை கொஞ்சம் மாற்றி, ‘நீங்கள் ஏன் சினிமாவுக்கு வரணும்னு விரும்புனீர்கள்’ என நாள்தோறும் படப்பிடிப்பு களங்களின் உள்ளேயும் வெளியேயும் அலையும் ஆயிரம் கால்களிடம் கேட்கலாம். அவர்கள் எல்லோரும் சுமந்து அலையும் கனவு சினிமாவுக்கானது.

அப்படி திரைப்படத்தில் தனக்கான இடத்திற்காக சென்னைக்கு வருகிறவர்கள் வாய்ப்புத் தேடி வருவதில்லை. தங்களின் வாழ்க்கையைத் தேடி வருகிறார்கள். அவர்கள் எல்லோரும் வெற்றி பெறுகிறார்களா? வெற்றி பெற்று அறியப்படுபவர்களின் முகங்கள் நமக்கு நினைவில் தங்கிவிடுகின்றன. ஆனால் தோல்வியுற்றவர்களின் முகம்...

கவின் நடித்து வெளியாகியுள்ள ‘ஸ்டார்’ படம், அப்படி திரையில் நாயகனாக மாற விரும்புகிற ஒருவனின் கதையைப் பேசுகிறது. படம் எப்படி இருக்கிறது என்பதைத் தாண்டி ‘ஸ்டார்’ பேச முயன்ற விஷயங்கள் முக்கியமானதாக தோன்றுகின்றன.

எழுத்தாளர் அசோகமித்திரன் ‘புலிக்கலைஞன்’ என ஒரு சிறுகதை எழுதியிருப்பார். டைகர் ஃபைட் என சொல்லப்படுகிற புலிச்சண்டை போடும் கழைக்கூத்தாடி ஒருவர் சினிமாவில் வாய்ப்பு தேடி திரைப்பட தயாரிப்பு கம்பெனிக்கு வருவது போல அந்த கதை இருக்கும். அவருக்கு வாய்ப்பு கொடுக்கத் தேடும்போது அவர் கொடுத்த முகவரிக்குச் சென்ற கடிதங்கள் திரும்பி வந்துவிடும். இவ்வாறு திரைப்படங்களில் வாய்ப்பு பெறப் போராடித் தோற்றவர்களின் கதைகள் ஆயிரம் சொல்லலாம்.

படத்தில் வாய்ப்பே கிடைத்தாலும், நடித்து அந்த படம் வெற்றியே பெற்றாலும் - நடிகராகப் பரிணமிப்பது நிச்சயமில்லை. ஒரு படத்தில் தோன்றிவிட்டு வேறு எதுவும் செய்ய இயலாது, காணாமல் போனவர்கள் பற்றி செய்திகள் வந்துகொண்டே இருக்கும். இந்தப் படத்தில் நடித்த நடிகர் இப்போது என்ன செய்கிறார் தெரியுமா என யூ-டியூப்பில் விடியோக்கள் கொட்டிக் கிடக்கின்றன.

‘ஸ்டார்’ படத்திலேயே அப்படி ஒரு கதாபாத்திரம் வருகிறது. காதல் சுகுமார் அந்த கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

நடிகராக முயன்று தோற்றவர்கள் தங்கள் இலக்கை அடைய முடியாத விரக்தியில் மீதமுள்ள வாழ்வையும் அவநம்பிக்கையிலேயே தொலைத்துவிடுகிறார்கள். சிலர் மட்டுமே தங்களை மீட்டுக் கொள்கிறார்கள்.

கார்த்திக் சுப்புராஜின் ‘ஜிகர்தண்டா’ கதையில் உடைந்து அமரும் சித்தார்த்திடம், தான் இயக்குநராக விரும்பிய கதையைச் சொல்லும் பெரியவர் கதாபாத்திரம் இன்னொரு உதாரணம்.

படத்தில் மற்றுமொரு கவனத்துக்குரிய விஷயம், நிறம், உருவம் குறித்த நமது மதிப்பீடுகளைக் கேள்வி கேட்கிற இடம். கதாநாயகியின் நிறம் இப்படித்தான் இருக்க வேண்டும், நாயகன் இப்படித்தான் இருக்க வேண்டும் என்பதுபோலான மதிப்பீடுகள் பற்றியும் இந்தப் படம் பேச முயற்சித்துள்ளது.

‘ஸ்டார்’ படத்தில் கதாநாயகனின் முகத்தில் தழும்பு ஏற்பட்டுவிடுவதால் அவன் அடையும் தளர்வை ஓர் இயக்குநர் உடைக்கிறார்.

உடல் சார்ந்த நேர்மறையான எண்ணங்கள் வளர்வதை உலகம் முழுவதும் உள்ள அலங்காரப் பொருள் நிறுவனங்கள் முதற்கொண்டு கடைப்பிடிக்க ஆரம்பித்துள்ளன. இன்றைக்கு நிறத்தை வைத்துக் கேலி செய்வதை அபத்தமாகக் கருதத் தொடங்கியுள்ளனர்.

இருந்தபோதும் உடல் குறித்தும் நிறம் குறித்தும் தாழ்வுணர்ச்சிக்கும் அவநம்பிக்கைக்கும் ஆளாவோருக்கு, இவையெல்லாம் இயல்பானது என சொல்ல வேண்டிய கட்டாயம் எல்லோருக்கும் உள்ளது.

‘நீ ஏன் ஹீரோவாகணும்னு நினைக்கிற’ என்கிற கேள்விக்கு லாலே பதில் சொல்வதுபோல ஒரு வசனம் இருக்கும். பெயருக்கு, புகழுக்கு என்றில்லாமல் கலைக்கு என நினைத்தால் அதற்கான உழைப்புக்குரிய பலன் எங்காவது கிடைக்கும் எனப் பேசிய வகையில் படம் முக்கியத்துவம் வாய்ந்தது.

மிடில் கிளாஸ் குடும்பத்தில் இருந்து பெரிதாக கனவு காண்பவர்கள் அதற்கான உழைப்பு, திறமை என்பதைத் தாண்டி மூன்றாவது ஒன்றான நேரத்தையும் தர வேண்டியுள்ளது.

படத்தின் நிறைவில் எழுத்துகளில் வருகிற ‘உறுதியான இதயம் உள்ளவர்களைப் பிரபஞ்சம் எப்போதும் விரும்புகிறது’ என்கிற வாக்கியம் நியாயமாகப் படுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

‘பெல்’ நிறுவனத்தில் சா்வதேச கருத்தரங்கம் தொடக்கம்

சிறுமிக்கு பாலியல் தொல்லை: தந்தை கைது

ரயில் கடவுப்பாதைக்கு வெடிகுண்டு மிரட்டல்

உயா்கல்வி சோ்க்கையில் மாநிலத்திலேயே திருச்சி முதலிடம்: பிளஸ் 2 வகுப்பில் தோ்ச்சி பெற்றவா்களில் 98% போ் சோ்க்கை

இளம் சாதனையாளா்களுக்கான பிரதமரின் கல்வி உதவித் தொகை பெற விண்ணப்பிக்கலாம்

SCROLL FOR NEXT