திரை விமரிசனம்

தலைமைச் செயலகம்! அரசியலா? நாடகமா? - இணையத் தொடர் விமர்சனம்

ஸ்ரேயா ரெட்டி, கிஷோர் நடித்த தலைமைச் செயலகம் இணையத் தொடர் விமர்சனம்...

விகதகுமாரன்

தலைப்பு மற்றும் விளம்பரங்களை எல்லாம் பார்த்தவுடனேயே குத்துமதிப்பாகக் கதையைத் தெரிந்துகொள்ள முடிந்தாலும் நடிகை ஸ்ரேயா ரெட்டி, நடிகர்கள் கிஷோர், சந்தான பாரதி ஆகியோரின் பெயர்கள்தான் தலைமைச் செயலகத்தை நோக்கி இழுத்தன.

தமிழில் ஒரு வெப் தொடர் என்று நம்பி, 8 எபிசோட்கள், மொத்தம் 4 மணி 21 நிமிஷங்கள் பார்த்தால் எல்லாருமாகச் சேர்ந்து கொலைக் குத்து குத்திவிடுகிறார்கள்.

எம்.ஜி.ஆர்., ஜெயலலிதாவின் அரசியல் பிரவேச சம்பவங்கள், எம்ஜிஆர் மறைவுக்குப் பிறகு நடந்தவை, ஜெயலலிதா வழக்கு விசாரணை, ஆந்திர முதல்வர் ராஜசேகர ரெட்டி மரணம், வாரிசுப் போட்டிகள், என்.டி. ராமாராவ் – சிவபார்வதி கதை, அப்படியே வடக்கே சென்று கொஞ்சம் நிலக்கரி சுரங்கம், நிலச்சுவான்தார் கொடுமைகள், நக்சலைட்டுகள், ஜவாஹர்லால் நேரு பல்கலை, பூலான் தேவி, தொடர் கொலைகள்... திடீரென காலச்சக்கரத்தில் இன்னும் கொஞ்சம் பின்னால் சென்று கீழ் வெண்மணி... என இப்படியாக எண்ணற்ற பழைய செய்தித் தாள் நறுக்குகளை எல்லாம் ஒன்றாகப் போட்டுக் குலுக்கி, தேவைக்கேற்ப புதிய பெயர்களைச் சூட்டி, சின்னத்திரையின் எட்டு எபிசோட்களை சின்னத்திரை பாணியிலேயே ஒரே கதையாக எடுத்தால் - தலைமைச் செயலகம்!

முதல்வர் (கிஷோர்), சகா சந்தான பாரதி, ஆக்டிவான ஒரு மகள் (ரம்யா நம்பீசன்), சகலகலாவல்லவனான இன்னொரு மருமகன், அரசியல் ஆலோசகரான பத்திரிகையாளர் (ஸ்ரேயா ரெட்டி), மைத்துனர் போல கவிதா பாரதி, இவர்களைச் சுற்றிவரும் அரசியல், காலில் விழும் கரை வேஷ்டி உள்பட சில அரசியல்வாதிகள், ஊழல் வழக்கு, தீர்ப்பு, ஒரு டிவிஸ்ட், தடதடவென அதன் ஃபாலோஅப், பிறகு என்ட்!

கதை ஒரு மாதிரியாகத் தமிழகத்தில் அரசியல் காட்சிகளாக நகர்ந்துகொண்டிருக்க, வடக்கேயிருந்து ஒரு போலீஸ் டிராக், தெற்கிலிருந்து ஒரு போலீஸ் டிராக். சம்பந்தப்பட்டவர்களைத் தேடிக் கொண்டு வருகின்றன. ஆனால், தொடக்கத்தில் வரும் ஒரு காட்சியே குழந்தைக்குக்கூட புரியும்படியாகத் தொடர்புடையவர் யாரென்ற முக்கிய முடிச்சைக் காட்டிக்கொடுத்துவிடுகிறது, காரணம் அவருடைய  உயரம்.

வெப் தொடர், பெரிய பட்ஜெட், பிரமாதம் எனக் காட்டும் முயற்சியில் மெனக்கெட்டு தில்லி, கொல்கத்தா, ஜார்க்கண்ட் என்றெல்லாம் சில காட்சிகள் வந்துகொண்டிருந்தாலும் தொடர்ந்தாற்போல சின்னத்திரை ஷூட்டிங் ஸ்பாட்களும் தோன்றிக்கொண்டிருக்கின்றன. தொடர் பற்றிய விவரணையில் நியுடிட்டி என்ற சொல்லும் இடம் பெற வேண்டும் என்பதற்காக இயக்கத்துக்குள் ஊடுருவிவிட்ட ஒரு காவல்துறை அதிகாரியைக் கொன்ற பின் நன்றாக முதுகு தெரியக் குளிக்கிறார் தீவிரவாத பெண்.

முதல்வர் அருணாசலத்துக்கும் (கிஷோர்) அவர் வீட்டிலேயே வசிக்கும் கவிதா பாரதிக்கும் என்ன உறவு? கவிதா பாரதி மகளுடைய நல்வாழ்வுக்காக முதல்வர் அவ்வளவு மெனக்கெடுகிறாரே? ஒரு தெளிவுமில்லை.

கதையில் கொற்றவையின் மகளாக வரும் மாயா பற்றிய மிகவும் முக்கியமான ஒரு ட்விஸ்ட் வெளிப்படும்போது, சம்பந்தப்பட்ட இருவருமே ஆங்கிலத்திலேயே பேசிக்கொள்கிறார்கள். தமிழ் மட்டுமே தெரிந்த பார்வையாளர்களுக்குத் தொடர் முடிந்த பிறகும் சஸ்பென்ஸ் நீடிக்கட்டும் என்று நினைத்திருப்பார்கள் போல. மாயாவாக நடிப்பவர் நிறையவே தேற வேண்டும்.

த்ரில்லர் என்பதாலோ என்னவோ நகைச்சுவைக் காட்சிகள் எதுவும் இல்லை என்றாலும் அந்தக் குறையைத் தீர்த்துவைக்கும்படியாக தொடரில் நிறைய டார்க் காமெடி வைத்திருக்கிறார்கள்.

இவ்வளவு பெரிய அரசியல் ஆலோசகரும் தீவிரவாதியும் தங்கள் செல்போனைக் காவல்துறையினர் ஒட்டுக்கேட்பார்கள், தொடருவார்கள் என்பதுகூட தெரியாத அளவுக்கு சின்னக்குழந்தைகளாக இருக்கிறார்கள்.

முதல்வரின் மருமகன் அவ்வப்போது தேநீர்க் கோப்பையைக் குடித்துவிட்டுக் கவிழ்த்துச் சுழற்றுகிறார், ஏதோ உருவமாகத் தோன்றுகிறது. உடனே ஏதோ அசரீரி ஒலிக்கிறது. நடக்கப் போவதை குறிப்பாகச் சொல்கிறது, ஏதோ ஸ்லோகம் போல!

பெரும் மதிப்புள்ள கடத்தல் பொருள்கள் இருக்கும் ஒரு பெரிய கன்டெய்னரை சர்வசாதாரணமாக துறைமுகத்திலிருந்து வெளியே எடுத்து முன்னும் பின்னும் ‘கான்வாய் போல’ கார்கள் தொடர, சம்பந்தப்பட்டவர்கள் எல்லாரும் ஊர்வலமாக உடன் வர, தமிழக எல்லையைக் கடந்து ஆந்திரத்துக்குள் நுழைகிறார்கள்.

கொல்கத்தாவில் தீவிரவாதிகளைத் தேடி அவர்கள் இருக்கும் பகுதிக்குள்ளேயே ஒற்றையாளாகச் செல்லும் காவல் அதிகாரி மணிகண்டன் (பரத்) அவர்களிடம் நான் யார் தெரியுமா? தமிழ்நாடு போலீஸ் அதிகாரியாக்கும் என்று எச்சரிக்கிறார். அப்புறம் என்ன நடக்கிறது என்பதை முடிந்தால் தொடரில் பார்க்கலாம்.

தொடக்கத்தில் டைட்டில் கார்டில் கதை, ஜெயமோகன் – வசந்த பாலன் என்று குறிப்பிடுகிறார்கள். இவர்களால் சொந்தமாகச் சிந்தித்து ஒரு பொலிடிகல் திரில்லர் தொடருக்குக் கதை எழுத முடியாதா? இவர்கள் பெயர்களுக்குப் பதிலாக பேசாமல் அந்தக் காலத்தைப் போல ‘.... கதை இலாகா’ என்றுகூட குறிப்பிட்டிருக்கலாம். எந்தக் காட்சியைப் பார்த்தாலும் ஏதோவொரு சம்பவம்தான் நினைவுக்கு வருகிறது, யாரைப் பார்த்தாலும் யாரோ ஒருவர் நினைவில் வருகிறார்!

இவ்வளவுக்கும் நடுவில் கிடைத்த வாய்ப்பில் எல்லாம் ஸ்ரேயா ரெட்டியும் கிஷோரும் நன்றாக நடித்திருக்கிறார்கள். இருவரும் சேர்ந்து வருகிற சில இடங்கள் பிரமாதம். சந்தான பாரதியும் அவர் அளவில் சிறப்பு.

தொடரின் நிறைவில் எல்லாரும் எதிர்பார்த்திருக்கும்படியே கொற்றவைக்கு உரிய இடம் கிடைக்கிறது. பார்வையாளர்களைப் போலவே பின்தொடர்ந்து வந்த இரு துப்பறிவாளர்களும் வேடிக்கை பார்த்துக்கொண்டிருக்கின்றனர்; (வேறு எதையோ கண்டுபிடிப்பதற்காகக்) காத்திருக்கலாம் என்றும் அவர்களாகக் கூறிக் கொள்கின்றனர். ஒருவேளை இரண்டாம் பாகம் எடுக்கலாம் என்ற எண்ணம் தயாரிப்புக் குழுவுக்கு இருக்குமோ என்னவோ? ஆனால், தயவுசெய்து வேண்டாம், இந்த ஒரு பாகமே போதும்.

[தலைமைச் செயலகம் - ஜீ 5 ஓடிடியில் வெளியாகியுள்ளது]

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கடல்வழி வணிகத்தை ஊக்குவிக்க வேண்டியது தலையாய கடமை: அமைச்சர் எ.வ.வேலு

சிவப்பு கம்பள வரவேற்பு... பிரணிதா!

மிடில் ஆர்டரில் கவனம் தேவை, இந்தியாவின் சவாலுக்குத் தயார்: பாகிஸ்தான் கேப்டன்

வேலையில்லா பட்டதாரிகளுக்கு மாதம் ரூ.1,000 உதவித் தொகை: முதல்வர் நிதிஷ் குமார் அறிவிப்பு

21 மாவட்டங்களுக்கு இன்று மஞ்சள் எச்சரிக்கை!

SCROLL FOR NEXT