கோயிலுக்கு தானமாக வழங்கப்பட்ட நிலம் ஒன்றினை யாருக்கும் தெரியாமல் அபகரிக்க நினைக்கும் அமைச்சர் ஒருவர் தனது அதிகாரத்தை பயன்படுத்தி நகர்த்தும் காய்களுக்கு மத்தியில் இரண்டு நண்பர்கள் மாட்டிக்கொள்கிறார்கள். அந்த நண்பர்களுடன் இருக்கும் தீவிர விசுவாசியான சொக்கன், விசுவாசத்திற்கும் சுயமரியாதைக்கும் உண்மைக்கும் இடையில் எப்படி சிக்கித் தவிக்கிறார் என்பதே கருடனின் கதைக்களம் எனலாம்.
பட்டாஸ், கொடி போன்ற பாஸ் மார்க் வாங்கவே திணறும் படங்களைக் கொடுத்துவந்த இயக்குனர் துரை செந்தில்குமார், கருடன் படத்தின் மூலம் முதல் பெஞ்ச் மாணவராக மாறியிருக்கிறார் என்றே சொல்லவேண்டும். இயக்குனராக தன் வேலையை கச்சிதமாக செய்திருக்கிறார். ஆரம்பத்தில் விறுவிறுப்பாகவும், நகர நகர சலிப்பை ஏற்படுத்தும் கதையம்சம் இந்த படத்தில் இல்லை. முதலிலிருந்து கடைசிவரை ஒரே வேகத்தில் நகரும் கதை படத்திற்கு பலம் சேர்க்கிறது.
முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ள சசிகுமார், உன்னி முகுந்தன் ஆகியோர் நல்ல நடிப்பைக் கொடுத்து படத்தை அழகாக நகர்த்தியுள்ளனர். உன்னி முகுந்தன் பார்வையாக பொருந்தினாலும், கதாப்பாத்திரமாக பொருந்த சற்று சிரமப்பட்டிருக்கிறார். சசிகுமாரின் மனைவியாக நடித்துள்ள ஷிவதா நடிப்பில் தேர்ந்தவர் என்பதை நிரூபிக்க இந்த படம் நிறைய இடத்தை வழங்கியுள்ளது. தமிழில் நல்ல படங்களில் நடித்து சில நாட்கள் காணாமல் போன அவர், இனி மீண்டும் நிறைய படங்களில் வலம் வருவதற்கான வாய்ப்பை இந்த படம் மூலம் ஏற்படுத்திக்கொண்டுள்ளார் என்று சொல்லலாம். சமுத்திரக்கனி கதை கேட்கும் நிதான நடிப்பை வழங்கியுள்ளார். விண்ணரசியாக நடித்துள்ள ரேவதி ஷர்மா நல்ல அறிமுகமாக மின்னுகிறார். திரையைத் தொட்டிருக்கும் ‘பாரதி கண்ணம்மா’ புகழ் ரோஷினி ஹரிப்பிரியன் கதாப்பாத்திரத்தோடு தோற்றத்தில் பொருந்தியிருந்தாலும் காட்சிகளில் ஏனோ பொருந்த தவறுகிறார்.
இவர்கள் அனைவரையும், கதை நடைபெறும் நிலப்பரப்பையும் ஆர்தர் ஏ வில்சனின் ஒளிப்பதிவு அழகாக காட்டியுள்ளது. காட்சிகளாக படம் எந்த தடையுமில்லாமல் நகர்வது, பிரதீப் இ ராகவின் கச்சிதமான எடிட்டிங்கை காட்டுகிறது. யுவன் சங்கர் ராஜாவின் இசை இதமாக உள்ளது. பேவரட்டாக மாறக்கூடிய பாடல்களை அளித்திருக்கிறார்.
இவையணைத்தையும் தாண்டி, சூரி ஒரு நேர்த்தியான நடிகனாக பரிணமித்துவருவதை நம்மால் கவனிக்காமல் இருக்க முடியவில்லை. அடக்கமான அடியாளாக உடன் வலம் வருவது, தன் அண்ணனை விளையாட்டுக்கு அடிக்கப்போகும் சசிக்குமாரை தடுத்து, விசுவாச வெகுளியாக சிரிப்பது, கையில் குழந்தையோடு அழுவது போன்ற காட்சிகளில் கதாப்பாத்திரமாக மாறும் திறனைப் பெற்று நம்மை கவர்கிறார்.
தன் அண்ணனிடம் (எஜமானிடம்) எதையும் மறைக்கத் தெரியாத குணம் வெளிப்படும் காட்சிகளில் சிரிப்பால் அரங்கமே அதிர்ந்தாலும், காமெடியன் சூரி கண்ணில் படவில்லை என்பது பாராட்டப்பட வேண்டிய ஒன்று. கதாப்பாத்திரமாக மாறி காட்சிகளை கடத்துவதில் சூரி வெற்றி கண்டுள்ளார்.
ஒட்டுமொத்த ரசிகர்களிடத்திலும் காமெடியான முகத்தை பதியவைத்துவிட்டு, அந்த பிம்பத்தையே மொத்தமாக மாற்றுவது எளிதான காரியம் கிடையாது. அதை சூரி சூப்பராக செய்துகாட்டியுள்ளார்.
“புள்ளைங்களுக்கு பகை வேணாம் மதனி” போன்ற வசனங்களில் வெற்றிமாறனின் சாயல் தெரிகிறது. அமைச்சரின் கதாப்பாத்திரம் அதிகாரத்தில் ஊறியிருப்பதை வசனத்தில் சரியாக புரியவைத்திருப்பது மற்றுமொரு ப்ளஸ். சூரியின் கதாப்பாத்திரத்தை எழுத்திலிருந்து, உடையிலிருந்து, சிகை அலங்காரம் வரை நேர்த்தியாக வடிவமைத்திருப்பது மற்றுமொரு பெரிய ப்ளஸ். நிலப்பரப்பாக கதை நன்றாக வடிமைக்கப்பட்டிருப்பது மீண்டுமொரு ப்ளஸ்.
திருப்திகரமாக அமைக்கப்பட்டுள்ள திரைக்கதையில் ஆதி, கருணாவுக்கு இடையேயான ஆழமான நட்பை புரிந்துகொள்ள வெறும் வாய்ஸ் மட்டுமே பயன்பட்டுள்ளது சிறிய மைனஸ். அவர்களது நல்ல நட்பை புரிந்துகொள்ள காட்சிகள் பற்றாக்குறையாக இருந்தாலும், அது கதையை எந்த விதத்திலும் குலைக்கவில்லை. ஆனால் உணர்ச்சிகளை கடத்துவதில் தவறுகிறது.
கருணா சூதாட்டத்தில் பணத்தை இழந்தது, அதற்கு அடிமையாக இருப்பது போன்றவையும் வசனங்கள் மூலம் மட்டுமே தெரியப்படுத்தியது மற்றொரு சிறிய மைனஸ்.
கிணற்றுக்குள் நடக்கும் நகைச்சுவைக் காட்சி, சிரிக்க வைக்கத் திணறுவதைப் பார்க்க முடிகிறது. படத்தில் ஆங்காங்கே சூரிக்கு சாமி வரும் குணத்தை நன்றாகப் பயன்படுத்தியிருக்கலாம்.
மொத்தத்தில் திரையரங்கில் கண்டுகளிக்க ஏற்ற படம் கருடன் எனலாம்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.