ஸ்பெஷல்

யாருடைய அதிகாரத்தை உடைக்கிறது ‘ஜெய் பீம்’?

சிவசங்கர்

கேரளத்தில் கடந்த 2018 ஆம் ஆண்டு இந்தியாவையே உலுக்கிய புகைப்படம் ஒன்று வெளியானது. பழங்குடியான மது என்பவர் உணவைத் திருடியதற்காக அடித்துக் கொல்லப்படுவதற்கு முன் கைகள் கட்டப்பட்ட நிலையில் அடித்தவன் அவருடன் எடுத்துக்கொண்ட அந்தத் தற்படத்தைப் பார்த்தவர்கள் ஒரு கணமாவது மனித பிறப்பின் மீது அவநம்பிக்கை கொண்டிருப்பார்கள்.

அதற்கடுத்த சில தினங்களில் மதுவுக்கு நீதி கிடைக்க வேண்டும் எனப் போராட்டங்கள் நடந்தாலும் இன்னொரு காட்சி உண்மையிலேயே பதைபதைக்க வைத்தது.  திருவனந்தபுரம் நீதிமன்றத்திற்கு வெளியே மதுவுக்காக ஒரு வழக்கறிஞர் தேம்பித் தேம்பி அழுதுகொண்டிருந்தார். ‘அடித்தவனைக் கொல்ல வேண்டும், உயிரோடு எரிக்க வேண்டும்’ என்கிற எந்தக் குரல்களும் அவரிடமிருந்து வெளிப்படவில்லை. உடைந்த குரலில் ’ஒரு வாய் சோறு இல்லாமல் செத்துட்டானே’ என்றார். அது வழக்கறிஞரின் குரல் அல்ல ஒரு அன்னையின் தவிப்பு.

எங்கோ ஒரு வனத்தில் பல உயிரினங்களுக்கு நடுவே பல நூற்றாண்டு காலமாக தனித்த பண்பாடு, மொழி, வாழ்வியலைக் கொண்ட கூட்டத்தில் பிறந்த மது, அந்தச் சூழலில் ஒருநாள்கூட வாழ முடியாத  வழக்கறிஞரிடம் எப்படி போய்ச் சேர்ந்தார்? அதற்குப் பெயர் அறம். உனக்கு அளிக்கப்பட்ட அநீதியை நிகழ்த்தியவனுடன்தான் சமரசத்துடன் நான் வாழ்ந்து கொண்டிருக்கிறேன் என்கிற வேதனை. ஒரு வகை சுயவெறுப்பு. வெறும் ‘காட்டுவாசி’ எனப் பொதுப்புத்திக்குச் சொல்லியே பழக்கப்பட்ட சமூகத்தில் துண்டைப் போட்டு படுப்பதற்குக்கூட நிலம் இல்லாதவர்களை எப்படியெல்லாம் நடத்தியிருப்பார்கள் என்பதை ஊகித்துக் கொள்ளுங்கள். 

தமிழகத்தில் பழங்குடிகள் காடுகளிலிருந்து தாமாகவோ, விரட்டப்பட்டோ நகரங்களுக்கு வந்தடைகிறார்கள்.  அவர்கள் பேசும் மொழி முற்றிலுமான தமிழ் கிடையாது. இதுவே நிலங்களில் வாழ்பவர்களுக்கு ஒரு விலக்கத்தை அளித்துவிடுகிறது. ஒருபோதும் இருவரும் ஒன்றல்ல என்கிற உணர்வால் அவர்களைப் பொதுப்பண்பாட்டிற்குள் விடுவதே இல்லை.

அந்த உணர்வை உரித்துக் காட்டி ஒருவகையில் நமக்குள் இருக்கும் அதிகாரத்தை ‘ஜெய்பீம்’ மூலம் உடைத்திருக்கிறார்கள் படக்குழுவினர். 1995-ல் நடக்கும் கதை அதோடு முடியவில்லை. காலம் மாறினாலும் அதைவிட பல கொடுமைகளை இன்றும் பலர் சந்தித்து வருகிறார்கள். கடந்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்ட 300க்கும் மேற்பட்ட பழங்குடிகளும்,  நாடோடிகளும் அதன் பின்னர் வீடு திரும்பவில்லை என ஓர் அறிக்கை தெரிவிக்கிறது. அவர்களை இழந்த குடும்பத்தினர் எத்தனை பேர் நீதிமன்ற வாசலில் காத்திருப்பார்கள்? என்ன நடந்தது? ஏது நடந்தது? என அறிவதற்குள் கைதான ராஜாகண்ணுகள் ‘ஓடிப்போய்விட்டதாக’ பதிவாகியிருப்பார்கள். 

எந்தவிதத்திலும் நிராகரிக்க முடியாதபடி பல வலிகளைத் தொகுத்துத் திரைப்படமாக உருவாகியிருக்கிறது ‘ஜெய் பீம்’. சட்டம் மட்டுமே நம்மைப் பல நேரங்களில் காப்பாற்றி விடுவதில்லை. மது இறந்தார். கொன்றவர்களை சட்டத்தின் முன் நிறுத்தினார்கள். நீதியை வாங்கினார்கள். யாரிடம் கொடுத்தார்கள்?  ஜெய்பீம் சொல்ல வரும் செய்தி இதுதான். அடிப்படையில் மாற வேண்டியது காவல்துறை அல்ல. அதிகாரத்தையும் சாதியத்தையும் சுமந்து அலையும் மனநிலைதான். படத்தில் இடம்பெற்ற வசனங்கள் யாவும் ஒரு நீதிமன்றத்திற்காக எழுதப்பட்டவை அல்ல. அது ’நான்’ என்ற அதிகாரத்தை சுமந்து செல்பவர்களுக்கானது. ‘நீதிக்கு எதிரான நீதிமன்றத்தின் மௌனம் அநீதியைவிட மோசமானது’, ’எல்லா ஜாதியிலும் திருடர்கள் இருக்கிறார்கள்’ என்பது வெறும் கைதட்டலுக்கானவை இல்லை. ஒரு வழக்கின் மூலம் இந்தத் திரைப்படம் சமூகத்திடம் அத்தனை கேள்விகளை எழுப்பியிருக்கிறது.  

சமீபத்தில் நரிக்குறவர் சமுதாயத்தைச் சேர்ந்த பெண் ஒருவர் கோயிலில் அவருக்கு மறுக்கப்பட்ட உணவை விமர்சித்து பேட்டி ஒன்றை அளித்திருந்தார். அடுத்த சில நாள்களில் அமைச்சருடன் அமர்ந்து, மறுக்கப்பட்ட இடத்திலேயே உணவை உண்டார். அது வெறும் உணவிற்கான கொந்தளிப்புதானா? நிச்சயம் இல்லை. எத்தனை காலத்திற்கு வரலாற்றில் ஓடிக்கொண்டே இருப்பேன்? உன்னுடன் நான் சமமாக அமர வேண்டும் எனும் சுயமரியாதைதான் அது. அதை ‘ஜெய் பீம்’ சரியாக அடையாளம் காட்டியிருக்கிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வெண் தாமரை... கண்மணி!

"அனுமதி பெற்றே பாடலை பயன்படுத்தினோம்": மஞ்ஞுமல் பாய்ஸ் தயாரிப்பாளர்

புணே சொகுசு கார் விபத்தில் ஓட்டுநரை சரணடைய வைக்க முயற்சி: காவல்துறை

அன்பே வா தொடர் நாயகியின் புதிய பட அறிவிப்பு!

முல்லைப் பெரியாறு அணையை இடித்துவிட்டு புதிய அணையா? கேரள அரசுக்கு இபிஎஸ் கண்டனம்

SCROLL FOR NEXT