ஸ்பெஷல்

ரஜினியின் சாதனை வரலாறு: அபூர்வ ராகங்கள் அறிமுகம் முதல் பால்கே விருது வரை

அபூர்வ ராகங்கள் வரை பால்கே விருது அங்கீகாரம் வரை ரஜினி கடந்து வந்த பாதை நீண்ட நெடியது...

எழில்

தமிழ்த் திரையுலகுக்கு ரஜினி அறிமுகமாகி 45 ஆண்டுகளுக்கு மேல் ஆகிவிட்டன. இத்தனை வருடங்களுக்குப் பிறகும் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக, அதிகச் சம்பளம் வாங்கும் நடிகராக, அதிக ரசிகர்களைக் கொண்டவராக உள்ளார் ரஜினி. இந்தியாவின் பிரபலமான மூன்று நடிகர்கள் என்றொரு பட்டியல் போட்டாலும் அதில் ரஜினிக்கு நிச்சயம் இடம் உண்டு. தற்போது 2019-ம் ஆண்டுக்கான தாதாசாகேப் பால்கே விருது ரஜினிகாந்துக்கு வழங்கப்பட்டுள்ளது. இந்தியத் திரைத்துறையில் ரஜினியின் சாதனையைப் பாராட்டி இந்த விருது அவருக்கு வழங்கப்பட்டுள்ளது.

அபூர்வ ராகங்கள் படத்தில் கதவைத் திறந்து தமிழ்த் திரையுலகில் அறிமுகமானார் ரஜினிகாந்த். இன்று அவருக்கு தாதாசாகேப் பால்கே விருது கிடைத்துள்ளது.

அபூர்வ ராகங்கள் முதல் பால்கே விருது அங்கீகாரம் வரை ரஜினி கடந்து வந்த பாதை நீண்ட நெடியது. அவற்றில் சில முக்கியமான தருணங்கள்:

1975: கே. பாலசந்தர் இயக்கிய அபூர்வ ராகங்கள் படத்தில் அறிமுகம். சிவாஜி ராவ் என்கிற இயற்பெயர் ரஜினிகாந்த்தாக மாறியது. பைரவி வீடு இதுதானா, நான் பைரவியின் புருஷன் என்கிற வசனங்களை திரையில் முதலில் பேசினார் ரஜினி. 

1977: முத்துராமன் இயக்கத்தில் முதல்முறையாக புவனா ஒரு கேள்விக்குறி படத்தில் நடித்தார். இது ரஜினியின் 10-வது படம். 

1978: பைரவி படத்தில் ரஜினியை சூப்பர் ஸ்டார் எனக் குறிப்பிட்டு விளம்பரங்கள் வெளியிடப்பட்டன. 

1978: 25-வது படம், மாத்து தப்படா மகா என்கிற கன்னடப் படம்

1978: இயக்குநர் மகேந்திரனின் முதல் கதாநாயகன், ரஜினி. படம் - முள்ளும் மலரும். இது ரஜினியின் 32-வது படம்.

அடுத்த வாரிசு படத்தில் ரஜினி - ஸ்ரீதேவி

1978: முள்ளும் மலரும் படத்துக்காக சிறந்த நடிகருக்கான தமிழக அரசின் விருதை முதல்முறையாகப் பெற்றார். இதன்பிறகு இதே விருதை மூன்று முகம், படையப்பா, சந்திரமுகி, சிவாஜி ஆகிய படங்களுக்கும் பெற்றுள்ளார். 

1979: 50 வது படம், டைகர் என்கிற தெலுங்குப் படம். 1978-ல் 25-வது படம் வெளிவருகிறது. அடுத்த ஒரே வருடத்தில் மேலும் 25 படங்களில் நடித்துவிட்டார் ரஜினிகாந்த். 

1980: ரஜினி இரட்டை வேடங்களில் நடித்த முதல் படம் - பில்லா. இது ரஜினியின் 54-வது படம். ஆனால் இந்தப் படத்தில் ஒரு ரஜினி இறந்த பிறகுதான் இன்னொரு ரஜினி வருவார். திரையில் இரண்டு ரஜினிக்கள் தோன்றிய படம் - ஜானி. அதுவும் இந்த வருடம் தான் வெளியானது. 

1981: லதாவை திருமணம் செய்துகொண்டார் ரஜினி. திருப்பதியில் திருமணம் நடைபெற்றது. 

1982: 75-வது படம், தேவர் பிலிம்ஸ் தயாரிப்பில் ரங்கா. நடிக்க வந்த ஏழு வருடங்களில் 75 படங்கள் நடித்துவிட்டார்.

1983: பாலிவுட்டில் அறிமுகமானார் ரஜினி. அந்தா கானூன் படத்தில். 23 ஹிந்திப் படங்களில் நடித்துள்ளார். 

1984: நல்லவனுக்கு நல்லவன் படத்துக்காக சினிமா எக்ஸ்பிரஸ் விருதை முதல்முறையாக வென்றார். ஸ்ரீராகவேந்திரர், தளபதி, அண்ணாமலை, முத்து படங்களுக்காகவும் இந்த விருதை வென்றுள்ளார். வள்ளி படத்துக்காகச் சிறந்த கதாசிரியருக்கான சினிமா எக்ஸ்பிரஸ் விருதையும் வென்றுள்ளார். 

1984: தமிழக அரசின் கலைமாமணி விருது.

1985: 100-வது படம், ஸ்ரீராகவேந்திரர். 10 வருடங்களில் 100 படங்களில் நடித்து முடிக்கும் அளவுக்குக் கடுமையாக உழைத்திருக்கிறார் ரஜினிகாந்த். 

1988: ரஜினி நடித்த ஓரே ஆங்கிலப் படமான பிளட் ஸ்டோன் இந்த வருடம் வெளியானது. 

1989: 125-வது படம், ஏ.வி.எம். தயாரித்த ராஜா சின்ன ரோஜா. 

மூன்று முகம் படத்தில் ரஜினி - ராதிகா

1991: மணி ரத்னத்தின் இயக்கத்தில் ரஜினி நடித்த தளபதி படம் இந்த வருடம் வெளியானது. 

1992: முத்துராமன் இயக்கத்தில் ரஜினி கடைசியாக நடித்த பாண்டியன் வெளியானது. 

1992: ரஜினி பின்னணி பாடிய ஒரே பாடல் - மன்னன் படத்தில் இடம்பெற்ற அடிக்குது குளிரு. எஸ். ஜானகியுடன் இணைந்து பாடினார். 

1993: ரஜினி முதல்முறையாக கதை, திரைக்கதை அமைத்துத் தயாரித்த வள்ளி படம் வெளியானது. 

சுரேஷ் கிருஷ்ணாவுடன் ரஜினி

1995: சுரேஷ் கிருஷ்ணா இயக்கத்தில் ரஜினி நடித்த பாட்ஷா படம் வெளியாகி, ரசிகர்களின் மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றது. 

1995: 150-வது படம், முத்து. கே.எஸ். ரவிகுமாருடன் இயக்கத்தில் நடித்த முதல் படம். 90களில் ரஜினி நடிக்கும் படங்களின் எண்ணிக்கை மிகவும் குறைந்துவிட்டது. அண்ணாமலை, பாட்ஷா போல வெற்றி கிடைக்க வேண்டும் என்பதற்காக கதைத்தேர்வில் அதிகக் கவனம் செலுத்தி குறைவான படங்களில் நடிக்க ஆரம்பித்தார்.

1998: முத்து படம் ஜப்பானில் மொழிமாற்றம் செய்யப்பட்டு வெளியாகி, அங்கும் ரஜினிக்குப் பெரிய ரசிகர் கூட்டத்தை உருவாக்கியது. 

1999: கே.எஸ். ரவிகுமார் இயக்கத்தில் ரஜினி நடித்த படையப்பா வெளியாகி, பாட்ஷாவுக்கு இணையான வெற்றியையும் வசூலையும் அடைந்தது. 

2000: மத்திய அரசின் பத்மபூஷன் விருது வழங்கப்பட்டது.

பத்ம விபூஷன் விருது பெறுகிறார்.

2007: ஷங்கருடன் முதல்முறையாக இணைந்த சிவாஜி படம் வெளியாகி பெரிய வெற்றியை அடைந்தது. 

2016: மத்திய அரசின் பத்ம விபூஷன் விருது வழங்கப்பட்டது. 

2016: ஆந்திர அரசின் நந்தி விருது. 

2019: கோவா சர்வதேசத் திரைப்பட விழாவில் ரஜினிக்கு ஐகான் ஆஃப் கோல்டன் ஜூப்ளி என்கிற சிறப்பு விருது வழங்கப்பட்டது.

2021: 168-வது படம்,  அண்ணாத்த. 

2021: ரஜினிக்கு பால்கே விருது வழங்கப்பட்டது.

ரஜினி இதுவரை நடித்த படங்கள்

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

திமுக ஆட்சியில் அரசு மருத்துவமனையில் கூட பாதுகாப்பு இல்லை: அண்ணாமலை

"WE SHALL COME BACK!" பாதையை விட்டு விலகியது Pslv-C62! ISRO தலைவர் வி. நாராயணன்

ஜன. 23-ல் பிரதமர் மோடி தமிழகம் வருகை! ஒரே மேடையில் என்டிஏ கூட்டணி கட்சித் தலைவர்கள்!

ரூ.12 லட்சத்தில் தனக்குத் தானே கல்லறை கட்டிய முதியவர் மரணம்!

மீண்டும் வெற்றிப்படம் கொடுத்த பகவந்த் கேசரி இயக்குநர்!

SCROLL FOR NEXT